சேலம் 8 வழிச்சாலைத் திட்டப் பணிகள் குறித்து தவறான தகவலைத் தமிழக அரசு அளித்திருப்பதாக கண்டித்துள்ள உயர்நீதிமன்ற நீதிபதிகள் இதுபோன்ற நடவடிக்கை தொடர்ந்தால், திட்டத்தை ரத்து செய்ய தயங்கமாட்டோம் எனவும் கடுமையாக எச்சரித்துள்ளனர்.
சேலம், சென்னை இடையிலான 8 வழி சாலை திட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள், சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிபதிகள் டி.எஸ். சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தன.
அப்போது, திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட உள்ள நிலத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதற்கு, தமிழக அரசு வழக்கறிஞர் மறுப்பு தெரிவித்தார்.
இதையடுத்து, தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டி பாளையத்தில் தனியார் நிலத்தை உட்பிரிவு செய்து அனுப்பிய கடிதத்தை நீதிபதிகள் மேற்கோள் காட்டியதோடு, நிலத்தின் உரிமையாளர்களை அப்புறப்படுத்தக் கூடாது என ஏற்கனவே உத்தரவிட்டுள்ள நிலையில், நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக கடிதம் அனுப்பியது முறையற்றது என தெரிவித்தனர். மேலும், நீதிமன்றத்தில் அரசு அளித்த உத்தரவாதத்திற்கு முரணாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், இதற்காகவே இந்தத் திட்டத்தை ரத்து செய்யவும் நீதிமன்றம் தயங்காது எனவும் நீதிபதிகள் கூறினர்.
ஒருவருக்கு சொந்தமான நிலத்தை அவருடைய ஒப்புதல் இல்லாமல் எப்படிக் கையகப்படுத்த முடியும் எனவும் நீதிபதிகள் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். உரியவர்களின் ஒப்புதல் இன்றி நிலத்தைக் கையகப் படுத்தும் போது, அவர்களுக்கு எழும் உணர்வு ரீதியான பாதிப்புகளை அதிகாரிகள் கவனத்தில் கொள்வதில்லை என்றும் நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதற்காகவே, ஒட்டு மொத்த திட்டத்திற்கும் தடை விதிக்கப் போவதாகவும் நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
மேலும், பசுமை வழி சாலை திட்டத்தில் தேவையற்ற அவசரத்தை மாநில அரசு காட்டுவதாகவும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து, அந்த கடிதம் தொடர்பான ஆவணங்ளை புதன்கிழமையே தாக்கல் செய்வதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
உடனே, 109 மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த தமிழக அரசு வழக்கறிஞர், காய்ந்து போன ஒரே ஒரு மரத்தை வெட்டவே அனுமதி பெற்றதாகவும் மற்ற மரத்தை வெட்டியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறினார்.
இதையடுத்து, மத்திய அரசு தரப்பு வழக்கறிஞரிடம் சுற்றுச் சூழல் ஆய்வு எந்த நிலையில் உள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, இது சம்பந்தமாக வெள்ளிக்கிழமையன்று அறிக்கை அளிப்பதாக மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்ததை தொடர்ந்து, வெள்ளிக்கிழமைக்கு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. அன்றைய தேதியில், தமிழக அரசும் சரியான விவரங்களுடன் திட்டப்பணிகள் குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Abide By Orders or will cancel Salem – Chennai 8 way road project: HC Warns TN Govt