தமிழகத்தில் மின்னுற்பத்தி குறைந்துள்ள மீண்டும் மின்வெட்டு அமலுக்கு வரும் நிலை உருவாகி உள்ளது.
தமிழகத்தின் தற்போதைய மின் தேவை நாள் ஒன்றுக்கு 13,390 மெகாவாட்டாக உள்ளது. ஆனால் மின்னுற்பத்தியோ நாள் ஒன்றுக்கு 11,500 மெகாவாட்டாக குறைந்துள்ளது. இன்றைய தினத்தில் மின்பற்றாக்குறை 1890 மெகாவாட்டாக உள்ளது
தமிழகம் மின்னுற்பத்திக்கு அனல் மின் நிலையங்களையே நம்பி உள்ளது. தமிழகத்தில் 69 சதவிகித மின்சாரம் நிலக்கரியை பயன்படுத்தும் அனல்மின் நிலையங்கள் மூலமே உற்பத்தி செய்யப்படுகிறது. இது தவிர காற்றாலை மற்றும் புதுப்பிக்க வல்ல எரிசக்தி மூலம் 16 சதவிகிதமும், அணுமின்நிலையங்கள் மூலம் 10 சதவிகிதமும், புனல் மின்நிலையங்கள் மூலம் 2 சதவிகிதமும், எரிவாயு மூலம் 2 சதவிகிதமும், டீசல் மூலம் ஒரு சதவிகிதமும் மின்னுற்பத்தி நடைபெறுகிறது.
இந்நிலையில் காற்றாலைகள் மூலமான மின்னுற்பத்தியும் இப்போது முடிவுக்கு வந்துள்ளது. இதனால் மின்னுற்பத்தி குறைந்துள்ள நிலையில் நிலக்கரிக்கும் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளதால், மீண்டும் மின்வெட்டை அமல்படுத்தும் நிலை வரலாம் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தமிழகத்திற்கு மூன்று நாட்களுக்கான நிலக்கரி மட்டுமே கையிருப்பு உள்ளதால் தமிழக அரசுக்கு நாள்தோறும் 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி கிடைப்பதை விரைந்து உறுதிப்படுத்த வலியுறுத்தி, பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில்,நிலக்கரி நிறுவனங்களிடம் இருந்து கிடைக்கும் நிலக்கரியின் அளவு குறைந்துவிட்டதால், தமிழகத்தில் நிலக்கரி கையிருப்பு அபாய அளவுக்கு குறைந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டில் தற்போது மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் அனல் மின்நிலையங்களில் நிலக்கரி கையிருப்பு 3 நாட்களுக்கு மட்டுமே போதுமான அளவில் இருப்பதாக முதலமைச்சர் கூறியுள்ளார்.
மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மின்நிலையங்களில் தொடர்ச்சியாக மின்னுற்பத்தி செய்ய நாள் ஒன்றுக்கு 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி தேவைப்படுவதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் நாள்தோறும் 20 ரேக்குகள் நிலக்கரி வந்திறங்க வேண்டிய நிலையில், 7 முதல் 8 ரேக்குகள் மட்டுமே வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். காற்றாலை மின்னுற்பத்தி பருவம் முடிவடையும் நிலையில், நிலக்கரி பற்றாக்குறையும் சேர்ந்து நிலைமையை மிகவும் சிக்கலாக மாற்றியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
எனவே, தமிழக அரசுக்கு நாள்தோறும் 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி கிடைப்பதை விரைந்து உறுதிப்படுத்துமாறு, சம்மந்தப்பட்ட அதிகாரிகளையும், நிலக்கரித்துறை மற்றும் ரயில்வே துறை அமைச்சகங்களுக்கும் அறிவுறுத்துமாறு பிரதமரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
Tamilnadu again under power cut threat