எங்களை வீழ்த்த சர்வதேச கூட்டணியோடு காங்., சதித்திட்டம்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு..

பாஜக ஆட்சியையும், என்னையும் வீழ்த்த காங்கிரஸ் கட்சிக்கு உள்நாட்டில் கூட்டணி சரியாக அமையாததால், சர்வதேச கூட்டணியை நாடுகிறது என்று பிரதமர் மோடி கடுமையாகச் சாடினார்.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக பாஜக தீவிரப் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது.

போபால் நகரில் இன்று பாஜக சார்பில் பேரணியும், பொதுக்கூட்டமும் நடந்தது.

இதில் பாஜக தலைவர் அமித் ஷா, முதல்வர் சிவராஜ் சவுகான், பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

”மத்தியில் ஆளும் பாஜக மக்களுக்காக பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தீட்டிச் செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டங்கள் குறித்து எங்களோடு காங்கிரஸ் கட்சியால் வாதிட முடியாது.

ஆனால், எங்கள் அரசு மீது சேற்றை வாரி இறைப்பது எளிதான காரியம் என்று புரிந்துகொண்டு அதைச் செய்து வருகிறது.

100 ஆண்டுகள் பழமையான கட்சி எனக் கூறிக்கொள்ளும் காங்கிரஸ் கட்சியின் அகங்காரத்தால், 440 இடங்களில் இருந்த அந்தக் கட்சியின் நிலைமை 44 இடங்களாகச் சுருங்கிவிட்டது.

ஏன் இந்த நிலைமை ஏற்பட்டது, என்ன தவறு செய்தோம் என்பது குறித்துக் கூட சுய ஆய்வு செய்ய அந்தக் கட்சி தயாராக இல்லை.

இதே நிலை நீடித்தால், நுண்ணோக்கி மூலம்தான் காங்கிரஸ் கட்சியைத் தேட வேண்டும்.

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர எந்தக் கட்சியும் தயாராக இல்லை. அதனால்தான் சிறிய கட்சிகளுடன் சென்று கூட்டணிக்காகக் கெஞ்சிக்கொண்டிருக்கிறது.

ஒருவேளை காங்கிரஸ் கட்சிக்குக் கூட்டணி சேர்ந்தாலும் அது வெற்றிக் கூட்டணியாக இருக்காது. அதனால், காங்கிரஸ் தங்களுக்கு பெரிய ஆதரவு வேண்டும் என்பதற்காகச் சர்வதேச கூட்டணியை (பாகிஸ்தான்) நாடுகிறது.

இப்போது நம்முடைய நாட்டுக்கு வெளியே இருப்பவர்கள், நம்முடைய நாட்டில் யார் பிரதமராக வர வேண்டும் என்று முடிவு செய்யும் நிலை வந்துவிட்டது.

காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்த பின், தன் நடுநிலைமையையும் இழந்துவிட்டது.

எங்கள் அரசின் பல்வேறு திட்டங்களை விமர்சித்தும் பயன் இல்லை என்பதால், எங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி, காங்கிரஸ் கட்சி சேற்றை வாரி இறைக்கிறது.

ஏனென்றால், வளர்ச்சியோடு வாதிடுவதை விட, சேற்றை இறைப்பது எளிதுதானே. இதற்கு முன் காங்கிரஸ் கட்சி இதுபோல் சேற்றை வாரி இறைத்தது.

எங்கள் மீது சேற்றை வாரி இறைத்தாலும் அதில் இருந்து அதிகமாகத் தாமரை மலரும். 20 ஆண்டுகளாக எங்கள் மீது சேற்றை வாரி இறைத்தும் பயனில்லை.

கடந்த 2001-ம் ஆண்டு நான் அரசியலுக்கு வந்தேன். உங்களுடைய சக்தி அனைத்தையும் பயன்படுத்தி, என் மீது அவதூறு பரப்பினீர்கள் எதையாவது ஒன்றைக் கூட நிரூபிக்க முடிந்ததா?

காங்கிரஸ் கட்சி இன்று நாட்டுக்குச் சுமையான கட்சியாக மாறிவிட்டது. நாட்டின் ஜனநாயகத்தைக் காக்கும் கடமை பாஜக தொண்டர்களுக்கு இருக்கிறது.

வாக்கு வங்கி அரசியல் கரையான்கள் போல் சமூகத்தை அரித்துவிட்டது. நாட்டை ஓட்டுவங்கி அரசியலாக மாற்ற வேண்டியது நம்முடைய சிறப்புக் கடமையாகும்.

சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினரைப் பயன்படுத்தி தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸ் கட்சி முயல்கிறது, மற்றவர்களின் நலனைப் பற்றி அதற்குக் கவலையில்லை.

காங்கிரஸ் கட்சிக்கு தேவை ஆட்சியைப் பிடிக்க வேண்டும். நாட்டைப் பிரிக்கும் இந்தப் பாவச் செயல்தான் அழிவுக்கு மிகப்பெரிய காரணமாகும்.

முத்தலாக் முறையை முஸ்லிம் நாடுகளே ஏற்கவில்லை. அவர்கள் கட்சியில் இருக்கும் பெண்கள் கூட இந்த முறையை ஏற்கவில்லை.

ஆனால், வாக்கு வங்கி அரசியலுக்காக இதை காங்கிரஸ் கட்சி ஆதரிக்கிறது. ஆதலால் நாட்டை வாக்கு வங்கி அரசியலில் இருந்து நாட்டைக் காக்க வேண்டியது பாஜகவின் கடமையாகும்.

இந்த வாக்குவங்கி அரசியல்தான் கடந்த 70 ஆண்டுகளாகச் சீரழித்து வந்திருக்கிறது.

டீ விற்பனை செய்பவரின் மகன் பிரதமரானதையும், ஏழைத் தாயின் மகன்களான சிவராஜ் சவுகான், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் முதல்வர் பதவியில் அமர்ந்ததையும் காங்கிரஸ் கட்சியால் ஏற்க முடியவில்லை”.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

குட்கா வழக்கில் 6ஆவது நபராக உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் கைது

மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை..

Recent Posts