குழப்பத்தையும், மரணத்தையும், பேரழிவையும் ஈரான் தலைவர்கள் விதைத்து வருவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐநாவின் 73 ஆவது பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றிய ட்ரம்ப், அண்டை நாடுகளை ஈரான் தலைவர்கள் மதிப்பதில்லை எனவும் குற்றம்சாட்டினார். எல்லைப் பாதுகாப்பு, அண்டை நாடுகளின் இறையாண்மை எதையும் ஈரான் தலைவர்கள் பொருட்படுத்துவதில்லை என்றும்,. குழப்பம், மரணம், பேரழிவு ஆகியவற்றையே அவர்கள் விதைத்து வருவதாகவும் விமர்சித்தார். ஊழல்மலிந்து சர்வாதிகார நாடாக ஈரான் விளங்கி வருவதாகவும் அவர் விமர்சித்தார்.
அணுஆயுத சோதனைகளை நிறுத்தி வைத்ததற்காக வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னை பாராட்டிய ட்ரம்ப், அந்த நாட்டுடனான பரிவர்த்தனைகளை மேம்படுத்த விரும்புவதாகவும் தெரிவித்தார்.
சர்வதேச அளவிலான வர்த்தக நடைமுறையை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் எனத் தெரிவித்த ட்ரம்ப், அமெரிக்காவின் அதிபர் என்ற முறையில் அந்நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க வேண்டிய கடமை தனக்கு இருப்பதாகவும் கூறினார். வர்த்தகம் தொடர்பான சீனாவின் அண்மைக்கால நடவடிக்கைகளை விமர்சித்த ட்ரம்ப், ஓபேக் நாடுகள் கச்சா எண்ணெய் விலையை குறைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இதனிடையே, கூட்டத்தில் பங்கேற்கும் முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், ஈரான் தன்னுடைய போக்கை மாற்றிக் கொள்ளாதவரை, அந்நாட்டின் தலைவர்களை தாம் சந்திக்கப் போவதில்லை என்றும் தெரிவித்தார். ட்ரம்ப் உரையாற்றிய ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில், ஈரான் அதிபர் ருஹானியும் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஈரானிடம் ஐநா கடுமை காட்ட வேண்டும் என்ற அழுத்தத்தை ட்ரம்ப் தனது உரையில் வெளிப்படுத்தினார்.
Iran’s leaders sow chaos, death and destruction: Trump