மிரட்டும் அரசு: மீறிப் போராடும் ஜாக்டோ ஜியோ

 

சம்பளத்தைப் பிடிப்போம் என்ற அரசின் எச்சரிக்கையையும் மீறி, ஜாக்டோ-ஜியோவினர் போராட்டக் களத்தில் குதித்துள்ளனர்.

புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து, இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை களைதல், சத்துணவு ஊழியர்களுக்கு கால முறை ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து அரசு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என ஜாக்டோ-ஜியோ வலியுறுத்தி வருகிறது. அரசு தரப்பில் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், ஜாக்டோ-ஜியோ சார்பில் கடந்த மாதம் நடந்த உயர் மட்டக் குழு கூட்டத்தில், அக்டோபர் 4ம் தேதி(வியாழன்) ஒரு நாள் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்த முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து, ஆசிரியர்கள் அக் 4 அன்று ஒரு நாள் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்த உள்ளனர். இதற்கு பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

ஆசிரியர்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதற்கட்டமாக அரசு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும், சம்பளம் பிடித்தம் செய்வது தொடர்பான உத்தரவை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தப் போவதாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் அறிவித்துள்ளன. ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு என்பது அரசுப் பணிகளை பாதிக்கும் என்பதால் அனுமதியின்றி எடுக்கப்படும் விடுப்புக்கு ஊதியம் வழங்கப்படமாட்டாது. இதன்படி அக்டோபர் 4ம் தேதி அனைத்து அலுவலக ஊழியர்கள் வருகை நிலை குறித்து அந்தந்த மாவட்டங்களில் உள்ள அதிகாரிகள் தகவல் சேகரிக்க வேண்டும். பின்னர் அதை தலைமை செயலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இருப்பினும் உரிய காரணங்கள் இருந்தால் உண்மைத் தன்மையை ஆய்வு செய்து விடுப்பு அளிக்கலாம்.

இவ்வாறு கிரிஜா வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.

அரசு தலைமைச் செயலாளரின் இந்த உத்தரவால் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் அதிருப்தியில் உள்ளனர். இது குறித்து ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கூறுகையில், ‘அரசின் இந்த நடவடிக்கை அடக்குமுறையை காட்டுகிறது. ஊதியம் பிடித்தம் என்று பயமுறுத்துகின்றனர். மதுரை கிளை நீதிமன்றத்தில் உறுதி அளித்தபடி, ஊதிய முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரையை அரசு இதுவரை வெளியிடவில்லை. ஆனால், எங்கள் போராட்டத்தை அடக்க முயற்சி செய்கிறது. இது ஜனநாயக விரோத செயல். எங்களுக்கான கோரிக்கையில் உள்ள நியாயங்களை தெரிவிக்க எங்களை அழைத்து பேச முன்வர வேண்டும்’ என்று தெரிவித்தனர்.

 

JACTO JIO Goes to One Day Protest

 

 

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

கலைஞரின் குறளோவியம் – 7

Recent Posts