சபரிமலை விவகாரம் தொடர்பாக இன்று நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பின்னர், இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை அணுக தேவசம்போர்டு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பும், ஆதரவும் கிளம்பியது.
இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டதை அடுத்து, பெண்கள் கோவிலுக்குள் நுழைய முயன்றனர்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பலரும் போராடிய நிலையில், கேரள அரசுக்கும், தேவசம் போர்டுக்கும் சீராய்வு மனுத்தாக்கல் செய்யுமாறு வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில், இன்று தேவசம் போர்டு தலைவர் பத்ம குமார் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வந்தனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் சபரிமலை விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தை அணுக முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த பத்மகுமார், சபரிமலையில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும், தேவசம் போர்டின் முடிவுக்கு கேரள அரசு ஒத்துழைக்க வேண்டும் எனவும், நீதிமன்றத்தை அணுக முடிவு எடுத்துள்ளதால் பக்தர்கள் அமைதி காக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதன் மூலம், போராட்டங்கள் வாபஸ் பெறப்பட்டு, கேரளாவில் நிலவும் பதற்றமான சூழ்நிலை சற்று குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.