“தமிழ் மக்கள் கூட்டணி” என்னும் பெயரில் புதிய அரசியல் கட்சியை ஆரம்பிப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரவித்துள்ளார்.
வடக்கு மாகாண சபையின் ஆயுள் காலம் இன்று நள்ளிரவுடன் முடிவடையும் நிலையில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனது எதிர்கால அரசியல் தொடர்பான அறிவிப்பை இன்றைய தினம் இடம்பெற்ற தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விக்னேஸ்வரனின் புதிய கட்சி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது கொள்கைகளுக்கு விஸ்வாசமாக நடந்திருந்தால் புதிய கட்சி ஆரம்பிக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது என தெரிவித்த தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவரும், வடக்கு மாகாண முதலமைச்சருமான விக்னேஸ்வரன் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஒரு புதிய கட்சியை உருவாக்க என்னை கட்டாயப்படுத்திவிட்டார்கள் என்றார்.
“தேசிய கோட்பாடுகளை கைவிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு”
தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் மேலும் பேசுகையில், “ஜனநாயக தேர்தல்கள் மூலமாக மக்களின் அபிலாஷைகளை சர்வதேச சமூகத்துக்கு கொண்டுசென்று அவற்றுக்கு அங்கீகாரம் பெற்றுக்கொள்ளும் முக்கியத்துவத்தை உணர்ந்துதான் கசப்புணர்வுகள் பகைமைகளை மறந்து தமிழ் தேசிய கோட்பாட்டின் அடிப்படையில் பழம்பெருந்தமிழ் அரசியல் கட்சிகளையும், முன்னாள் ஆயுத போராட்ட அமைப்புக்களையும் ஒன்றிணைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது,” என்று கூறிய அவர்,
“ஆனால், இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் தேசிய கோட்பாடுகளை கைவிட்டு தடம்புரண்டு நிற்கின்றது.
பொருளாதார அபிவிருத்தி ஏன் செய்யவில்லை என்று துணிந்து கேட்டுக் கொண்டிருக்கின்றது. அரசியல் தீர்வின் அத்தியாவசியத்தை அறியாமல் அரற்றிக் கொண்டிருக்கின்றார்கள்,” என்று கூறினார் விக்னேஸ்வரன்.
“2013 ஆம் ஆண்டு வட மாகாண சபைதேர்தலில் போட்டியிடும் போது எமது மக்கள் கொடிய யுத்தம் ஒன்றினூடான இன அழிப்பை சந்தித்து மிகவும் பலவீனமான நிலையில் நொந்துபோய் இருந்தனர்.
ஆனாலும், தமிழ்த் தேசியத்தின் அடிப்படைக் கொள்கைகளான இணைந்த வடக்கு கிழக்கில் இறையாண்மை அடிப்படையில் எம்மை நாமே ஆளும் சுயநிர்ணய அடிப்படையில் அதிகாரம் பகிரப்பட வேண்டும் என்ற எமது தேர்தல் விக்ஞ்ஞாபனத்தை ஏற்றுக்கொண்டு எம்மை முழுமையாக நம்பி அதற்கு அங்கீகாரத்தை வழங்கியிருந்தனர்.
அந்த மனோநிலையும் எதிர்பார்ப்பும் எம் மக்களிடையே இன்னமும் இருக்கின்றது” என்றார்.
“பதவிகளும், சலுகைகளும் அவர்களின் கண்களை மறைத்துள்ளது”
அன்றைய தேர்தல் காலத்தில் இந்த வாக்குறுதிகள் சாத்தியமானவைகளாகத் தெரிந்திருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு புதிய ஆட்சிமாற்றத்துடன் புதிய பதவிகள், சலுகைகள் வந்துசேர அவை சாத்தியம் அற்றவைகளாக மாறிவிட்டன என்றும் அவர் விமர்சித்தார்.”நல்லாட்சி அரசாங்கம் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டுவரும் நிலையிலும் அதற்கு முட்டுக்கொடுத்து இந்த அரசு எமக்கு தீர்வைத் தரும் என்று கூறிவருகின்றனர்.
தற்போதைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு ஒரு நல்லெண்ண நடவடிக்கையாகக் கூட சிங்கள குடியேற்றங்களையும் பௌத்தமயமாக்கலையும் தற்காலிகமாகக் கூட நிறுத்திவைக்க விரும்பாத இந்த அரசாங்கம் எப்படி எமக்கு தீர்வினை வழங்கும் என்று சிந்திக்க முடியாதளவுக்கு பதவிகளும் சலுகைகளும் அவர்களின் கண்களை மறைத்து வருகின்றன.
வராது என்று தெரிந்திருந்தும் வராத ஒரு தீர்வுத்திட்டத்துக்காக “ஒற்றை ஆட்சி” முறையை ஏற்றுக்கொண்டு “இலங்கை ஒரு பௌத்த நாடு” என்பதையும் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். இவர்கள் இதற்கான மக்கள் ஆணையை எந்தத் தேர்தலில் இருந்து பெற்றுக்கொண்டார்கள் என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் விளக்கவேண்டும் அல்லது எதிர்வரும் தேர்தல்களில் இவற்றை மக்கள் முன்பு வைத்து ஆணையைப் பெறவேண்டும்.
தேர்தல் விக்ஞ்ஞாபனத்தில் ஒரு கூற்று அரசியலில் மறு கூற்று என்றிருப்பது எம் மக்களை ஏமாற்றுவதாகவே முடியும்.
ஆகவே இன்றைய நெருக்கடியானதும் இக்கட்டானதுமான காலகட்டத்தில் தமிழ் மக்களின் நலன்களை மையப்படுத்தி சிந்திக்கும்போது அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்து தமிழ் தேசிய கோட்பாடுகளின்பால் பற்றுறுதியுடன் இருக்கும் அனைவரையும் ஒன்றிணைத்து ஒரு நிறுவனப்படுத்தப்பட்ட செயற்பாட்டை முன்னெடுப்பது அவசியமானதும் என்று உணர்கின்றேன்” என்று குறிப்பிட்டார் விக்னேஸ்வரன்.
“உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வாழும் பல தமிழ் புத்திஜீவிகளும் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களும் இது காலத்தின் அவசியம் என்றும் எனது கடமை என்றும் உணர்த்தியுள்ளதுடன் தமது ஆதரவையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
எல்லாவற்றுக்கும் மேலாக நான் சந்தித்த ஒட்டுமொத்த தமிழ் மக்களும் இந்த கோரிக்கையைத் தான் என்னிடம் விடுத்துவந்திருக்கின்றார்கள்.
என்னை நம்பிய எனது மக்களுடன் இறுதிவரை வாழ்ந்து அவர்களுக்காகப் பணி செய்வது என்று முடிவுசெய்துள்ளேன்”.
“தமிழ் தேசிய கூட்டமைப்பை கூறு போட நான் விரும்பவில்லை”
“தமிழ் மக்கள் பேரவையின் அனுசரணையுடன் ஒரு அரசியல் கட்சியை உருவாக்கும் நடவடிக்கைகளை நான் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டேன்.
தமிழ்த் தேசிய கோட்பாடுகளின் வழிநின்று எமது இனத்தின் அரசியல், சமூக மற்றும் பொருளாதார விடுதலையை வென்றெடுத்து மேன்மையை அடைவதற்கு, மனித உரிமைகளை மதித்து நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் பணியாற்றும் அனைவரையும் ஒரு குடையின் கீழ் சேர்க்க இந்தக் கட்சிப் பயணம் உறுதுணையாக அமையும்.
இதற்கு “தமிழ் மக்கள் கூட்டணி”என்ற காரணப் பெயரை இட்டுள்ளேன்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமது கொள்கைகளுக்கு விஸ்வாசமாக நடந்திருந்தார்களேயானால் நான் ஓய்வு பெறப் போயிருப்பேன். ஒரு கட்சியை உருவாக்க என்னை கட்டாயப்படுத்தி விட்டார்கள் கூட்டமைப்பினர்” என்றும் விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.
“தமிழ் தேசிய கூட்டமைப்பை எந்த விதத்திலும் கூறு போட நான் விரும்பவில்லை. எனது குறிக்கோள்கள் சரி என்றால் மக்கள் என் பக்கம் சார்வார்கள். இல்லையேல் என்னை ஒதுக்கி விடுவார்கள். அது மக்களின் விருப்பம்.
எமது மக்களின் அரசியல், சமூக பொருளாதார மற்றும் கலாசார விடுதலைகளுக்கான ‘மக்கள் அரசியலை’ முன்னெடுக்கும் பொருட்டாக சில செயற்திட்ட முன்மொழிவுகளை இந்த சந்தர்ப்பதில் முன்வைக்க விரும்புகின்றேன்” என்று குறிப்பிட்ட அவர்,
தாம் செய்வதற்கான செயல்களாக அவர் பட்டியலிட்டவை:
1. கடந்த காலங்களில் இடம்பெற்ற கசப்பான சம்பவங்கள், முன் கோபதாபங்கள் , குரோதங்கள் , விரோதங்கள் எல்லாவற்றையும் களைந்துவிட்டு தமிழ் தேசிய கோட்பாடுகளுக்கு அமைவாக இணைந்த வடக்கு கிழக்கில் பகிரப்பட்ட இறையாண்மை அடிப்படையில் சமஷ்டி தீர்வு ஒன்றைக் காணும் எனது அரசியல் பயணத்தில் கைகோர்க்குமாறு அகத்திலும் புலத்திலும் உள்ள அனைவரையும் அழைத்து அரவணைத்து செயற்பட வேண்டும்.
2. இணைந்த வடக்கு கிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வினை அக்கறையுடனும் இதய சுத்தியுடனும் பரிசீலிக்கும் எந்த அரசுடனும் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டு தீர்வை அடையப் பாடுபட வேண்டும்.
3. அரசாங்கத்துடன் தடைப்பட்டுப் போயுள்ள இனப்பிரச்சினைக்கான பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிக்கும் பொருட்டு உள்நாட்டிலும் சர்வதேச சமுகத்தின் ஊடாகவும் அழுத்தம் கொடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
4. இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு குறுக்கு வழிகளை கையாளாமல் போர் குற்ற விசாரணைகள் மூலம் உண்மைகளை எமது சிங்களச் சகோதர்களுக்கு தெரியப்படுத்தி பரஸ்பர அவநம்பிக்கைகள் மற்றும் அச்சங்களை நீக்கி நிலையான சமாதானம் ஏற்பட சகல வழிகளிலும் பாடுபடுபட வேண்டும். இதற்காக சிங்கள புத்திஜீவிகள் , மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், சமூக மற்றும் மதத் தலைவர்கள் மற்றும் ஊடகங்களுடன் நெருக்கமாக செயற்பட வேண்டும்.
5. நிறுவனப்படுத்தப்பட்ட செயற்பாட்டின் மூலம் தனிப்பட்ட கட்சி நலன்களைப் புறந் தள்ளி மூலோபாய திட்டமிடலுடனான செயற்திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
6. அரசியலையும் அபிவிருத்தியையும் சம அளவில் சமாந்திரமாக கொண்டுசெல்லும் நிறுவன மயப்படுத்தப்பட்ட செயற்பாடுகளை ஏற்படுத்த வேண்டும்.
7. போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக புலம்பெயர் மக்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் உலக நாடுகளின் உதவியுடன் சுயசார்பு பொருளாதார நடவடிக்கைகளை ஏற்படுத்தி மீண்டும் அவர்களுக்கு வளமான ஒரு வாழ்க்கையை ஏற்படுத்தும் பொருத்தமான ஒரு பொறிமுறையை ஏற்படுத்த வேண்டும்.
8. அரசியல் கைதிகள், காணமல் போனவர்கள் மற்றும் மக்களின் காணிவிடுவிப்பு போன்றவற்றுக்கு சர்வதேச சமூகம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றின் உதவிகளுடனும் அரசாங்கத்துடனான தொடர்ச்சியான கலந்துரையாடல்கள் மூலமும் தீர்வு காணும் நடவடிக்கைகளை மேலெடுக்க வேண்டும்.
9. இறுதி யுத்தத்தில் நடைபெற்றது இன அழிப்புத் தான் என்று வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வலுப்படுத்த, மேலும் ஆய்வுகளைச் செய்தும் தரவுகளைத் திரட்டியும் சர்வதேச ரீதியாக அதனை ஏற்றுக்கொள்ளச்செய்தல் வேண்டும்.
10. உலகம் முழுவதிலும் வாழ்கின்ற தமிழ் மக்களுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்தி எமக்கு அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பலமான ஒரு ஆதரவு சக்தியை உருவாக்க வேண்டும்.
“எமது இனத்தின் இருப்பை உறுதிசெய்யும் எமது நியாயமான இந்த சுய பாதுகாப்பு போராட்டத்துக்கு புலம்பெயர் தமிழ் மக்கள் முக்கியமாக தமிழ் நாட்டில் வாழுகின்ற மக்களும், கோடிக்கணக்கான எமது மலேசியா, சிங்கப்பூர், மொரீசியஸ் மற்றும் தென் ஆபிரிக்கா ஆகிய நாடுகளில் வாழ்கின்ற தமிழ் மக்களும், அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, கனடா போன்ற அபிவிருத்தி அடைந்த நாடுகளில் வாழும் எம் தமிழ் மக்களும், சேர்ந்து அரசியல், பொருளாதார, சமூக மற்றும் கலாசார ரீதியான ஒத்துழைப்பையும் ஆதரவையும் எமக்கு வழங்கவேண்டும் என்று இந்த சந்தர்ப்பதில் வேண்டுகோள் விடுக்கின்றேன்.
ஒருபோதும் மக்கள் எனக்கு அளிக்கும் ஆணைக்கு விரோதமாக நடக்கமாட்டேன். மக்களின் ஆணைக்கு விரோதமாக நடந்துவிட்டு அதற்கு சாணக்கியம் என்றும் ராஜதந்திரம் என்றும் முகமூடிகளை அணிந்துகொள்ளமாட்டேன். எமது இனத்தின் வரலாறு எனக்கு வழிகாட்டும்” என்று கூறினார் விக்னேஸ்வரன்.
நன்றி
பிபிசி தமிழ்