மத்திய அரசுடனான மோதல் முற்றுவதை அடுத்து ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் பதவி விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜனநாயகத்தின் அடித்தளத்தை பாதுகாக்கும் தன்னதிகார அமைப்புகளில் ஒன்றான ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தில் குறுக்கிட மோடி அரசு முனைப்புக் காட்டி வருகிறது. இதையடுத்து, ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்கும் இடையேயான மோதல் முற்றி வருகிறது.
அண்மையில், நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்ற ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா, ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகளிலும் சுயேச்சைத் தன்மையிலும் அரசுகள் தலையிடக் கூடாது என கூறினார். மேலும், ரிசர்வ் வங்கியின் சுதந்திரமான செயல்பாட்டை மதிக்காத அரசுகள், அதனால் ஏற்படும் பின்விளைவுகளால் வருந்த நேரிடும் என்றும் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி, 2008 முதல் 2014ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், வங்கிகள் வரம்பில்லாமல் கடன் கொடுக்க அனுமதித்தது யார் என்று கேள்வி எழுப்பினார். வாரா கடன்களை தடுக்க ரிசர்வ் வங்கி தவறிவிட்டதாக குற்றஞ்சாட்டிய அவர், ரிசர்வ் வங்கியின் இலகுவான கடன் கொள்கைகளே, நாட்டில் உள்ள வங்கிகள் இன்று சந்திக்கும் பெருந்துயரங்களுக்கு காரணம் என்றும் விமர்சித்தார்.
இதனால், மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையே மோதல் வலுத்துள்ளது. இதையடுத்து, ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியில் இருந்து விலகுவது குறித்து உர்ஜித் பட்டேல் சிந்தித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்த மத்திய நிதி அமைச்சகம், ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகள், சுயேச்சைத் தன்மைகளை ஏற்றுக் கொள்வதாகவும், அரசு அதை மதிப்பதாகவும் கூறியுள்ளது.
இதனிடையே, மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கை குறித்து ட்விட்டரில் விமர்சித்திருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், இதுவரை எந்த அரசாலும் பயன்படுத்தப்படாத ரிசர்வ் வங்கிக்கான சட்டப்பிரிவு 7 ஐ மோடி அரசு பயன்படுத்த இருப்பதாக தெரிகிறது எனக் கூறியுள்ளார். அப்படி பயன்படுத்தினால், அதனைத் தொடர்ந்து நிறைய கெட்ட செய்திகள் வெளியாகும் என தாம் அஞ்சுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ரிசர்வ் வங்கிக்கான சட்டப்பிரிவு 7 ஐ தற்போது பயன்படுத்த வேண்டிய அளவுக்கு என்ன தேவை ஏற்பட்டிருக்கிறது எனக் கேள்வி எழுப்பி உள்ள ப.சிதம்பரம், மத்திய அரசு தாம் செய்த தவறுகளை மறைப்பதற்காகவே இந்தப் பிரிவைப் பயன்படுத்த முனைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கிக்கான சட்டப்பிரிவு 7 ஐ பயன்படுத்துவதன் மூலம், அதன் நடைமுறைகளில் மத்திய அரசு தலையிடுவதுடன் முக்கிய முடிவுகளை மாற்றியமைக்கவும் முடியும். இதனால், அந்தப் பிரிவை மத்திய அரசு பயன்படுத்துவது குறித்து கடும் விமர்சனம் எழுந்துள்ளது.