அதிமுகவில் ஓபிஎஸ்-இபிஎஸ் பதவிகள் செல்லும் என்று கூறி முன்னாள் எம்.பி கே.சி பழனிசாமியின் மனுவை தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்துள்ளது.
சசிகலாவின் ஆதரவாளரும் முன்னாள் எம்.பி.,யுமான கே.சி பழனிசாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்திருந்தார்.
அதில், அதிமுகவில் பொதுச்செயலாளர் என்ற பதவியை கொண்டு வர வேண்டும். அந்த பதவிக்கு தேர்தல் ஆணையத்தின் அதிகாரியின் மேற்பார்வையில் தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், கே.சி பழனிசாமியின் மனுகுறித்து ஆறு வாரங்களுக்குள் முடிவு அறிவிக்க வேண்டும் என்று கூறி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த வழக்கில் முதற்கட்ட விசாரணை நடத்திய தேர்தல் ஆணையம், கே.சி பழனிசாமியின் மனுவுக்கு பதிலளிக்கும்படி, எதிர்மனுதாரர்களான ஓபிஎஸ்-இபிஎஸ்க்கு விளக்கம் கேட்டது.
இதற்கு பதிலளித்த ஓபிஎஸ்-இபிஎஸ் தரப்பினர், ‘இந்த மனுவை தொடுப்பதற்கு கே.சி பழனிசாமிக்கு எந்த அடிப்படை முகாந்திரமும் அதிகாரமும் கிடையாது.
அவர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினரே இல்லை. எனவே அவருடைய மனுவை ஏற்கக்கூடாது’ என்று கூறியிருந்தனர்.
இதே போல் சசிகலா தரப்பில் அளிக்கப்பட்ட பதில் மனுவில், ‘அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவியை ரத்து செய்வதற்கு இவர்களுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. மேலும், பொதுக்குழு கூட்டி தான் எந்த ஒரு முடிவும் எடுக்க முடியும்.
ஆனால், ஓபிஎஸ்-இபிஎஸ் தரப்பினர் பொதுக்குழு போன்ற கூட்டத்தை தான் கூட்டினார்கள். அதிலும் எந்த முடிவும் அறிவிக்கப்படவில்லை.
எனவே, பொதுச்செயலாளர் பதவியை ரத்து செய்வது என்பதை ஏற்க முடியாது. இது சட்ட விரோதம்’ என்று தெரிவித்திருந்தனர்.
இந்த இருதரப்பு வாதத்தையும் விசாரித்த தேர்தல் ஆணையம், அதிமுகவின் உட்கட்சி பூசலுக்குள் தலையிட விரும்பவில்லை என்றும், கட்சி விதிகளை மாற்றம் செய்ததை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டதுஎன்று கூறி கே.சி பழனிசாமியின் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.