கருப்பு குல்லா நரேந்திர மோடி..! (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)

(01.11.2018)

நேதாஜிக்கு மதச்சார்பின்மை, இந்து – முஸ்லிம் ஒற்றுமை ஆகியவற்றில் இருந்த அழுத்தமான பிடிப்பையும், மோடி வழியாக தற்போதைய சங்கிகளின் அரசு நேதாஜியை கொண்டாடுவதாக நடத்தும் போலி நாடகம் குறித்தும் விரிவான உண்மைகளைப் பேசும் காத்திர சுபாஷிணி அலி அவர்களின் காத்திரமான கட்டுரை….

பூலோகத்தில் எப்போதெல்லாம் நெருக்கடி வருகிறதோ அப்போதெல்லாம் புது அவதாரம் எடுத்து மகா விஷ்ணு பூலோகத்திற்கு வருவார் என்று புராணக் கதை உண்டு. அதேபோன்று தன்னுடைய கட்சித் தலைவரின் ஒப்புதலுடன் நரேந்திர மோடி, தற்போது புதிய அவதாரத்தை எடுத்திருப்பார் போலிருக்கிறது.

இப்போது நரேந்திர மோடி, சுபாஷ் சந்திர போஸின் கருப்புக் குல்லாயை அக்டோபர் 21 அன்று போட்டுக்கொண்டு நேதாஜி, சிங்கப்பூரில் விடுதலை இந்தியாவின் தற்காலிக அரசாங்கத்தை நிறுவியதினத்தைக் கொண்டாடத் தீர்மானித்திருக்கிறார். அதன் மூலமாக மோடி தன்னை நேதாஜி சுபாஷ் சந்திர போஸாகப் பாவித்துக்கொண்டிருக்கிறார்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், நாட்டு மக்களால் பல காரணங்களுக்காக பல வழிகளில் நினைவுகூரப்பட்டு வருகிறார். அவரை பல தினங்களில் மக்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அவருடைய பிறந்த நாள், அவர் வீட்டுச் சிறையிலிருந்து தப்பிய நாள், அவர் சிங்கப்பூருக்கு வந்த நாள், அவர் சிங்கப்பூரில் விடுதலை இந்தியாவின் தற்காலிக அரசாங்கத்தை பிரகடனம் செய்ததன் மூலம், மதச்சார்பற்ற சுதந்திர இந்தியா உருவாவதற்கு அளவிடற்கரிய பங்களிப்பினைச் செலுத்திய நாள் என அவர் மக்களால் பல தினங்களில் கொண்டாடப்பட்டு வருகிறார்.

இழிவான அவதூறுகளை அள்ளி வீசிய மோடி நாடு சுதந்திரம் அடைந்தபின், நாட்டிற்கு ஜவஹர்லால் நேரு அளித்திட்ட பங்களிப்புகளை அழித்திட முயற்சிகளை மேற்கொண்டிருக்கும் நரேந்திர மோடிக்கு, சுபாஷ் சந்திர போஸ் மக்களால் கொண்டாடப்பட்டு வருவது குறித்தும் அநேகமாக தெரியாது என்றே தோன்றுகிறது. அக்டோபர் 21 அன்று சுபாஷ் சந்திர போஸ் மற்றும் அவருடைய தற்காலிக அரசாங்கத்தின் நினைவையும் போற்றுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்திலும், நரேந்திர மோடி ஜவஹர்லால் நேருவை மிகவும் இழிவான முறையில் விமர்சிக்கத் தயங்கிட வில்லை. நேரு தன்னுடைய குடும்பம்தான் நாட்டை ஆள வேண்டும் என்ற பேராசையின் காரணமாக, சர்தார் பட்டேல், சுபாஷ் சந்திர போஸ் போன்ற தலைவர்களின் பங்களிப்புகளையெல்லாம் தன்னுடைய ஆட்சிக்காலத்தில் அழித்து ஒழித்திடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்கிற ரீதியில் மோடி மிகவும் இழிவான முறையில் அவதூறுகளை அள்ளி வீசி இருக்கிறார்.

நேரு, சர்தார் பட்டேலுடனும், சுபாஷ் சந்திர போஸுடனும் கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும் அதையெல்லாம் மீறி அவர்களுடன் எந்த அளவிற்கு மதிப்பும் மரியாதையும் நெருக்கமான உறவும் வைத்திருந்தார் என்பதை சாட்சியத்துடன் உறுதியாக மெய்ப்பித்து, மோடியின் கூற்றுக்களையும் பொய்ப்பித்திடுவது ஒன்றும் சிரமமான காரியம் அல்ல.

நேருவிற்கு சுபாஷ் சந்திர போஸிடம் நெருக்கமான அளவில் பற்றும் பாசமும் இல்லாமலிருந்திருந்தால், போஸுடன் மிகவும் நெருக்கமான சின்னமாக விளங்கிய செங்கோட்டையில் நாட்டின் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு நேரு முன்வந்திருப்பாரா? இந்திய தேசிய ராணுவத்துடன் நெருக்கமாக இருந்த அதிகாரிகள் மீதான விசாரணை இங்கே நடந்தது மட்டுமல்ல, அவருடைய முழக்கமான “தில்லி செல்வோம்” என்கிற முழக்கமும் செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றுவதுடன் இணைந்தேசெங்கோட்டையின் மதில்சுவர்களில் எதிரொலித்தன.

செங்கோட்டை, சுபாஷ் சந்திர போஸுடனும், அவருடைய இந்திய தேசிய ராணுவத்துடனும் பின்னிப்பிணைந்த ஒன்றாகும். இத்தகைய சிறப்புமிக்க செங்கோட்டையில்தான் நேரு, இந்தியா சுதந்திரம் அடைந்தபின் உருவாக்கிய மூவர்ண இந்திய தேசியக் கொடியை பறக்க விடுவதற்குத் தேர்வு செய்தார். நேரு, அந்த இடத்தைத் தேர்ந்தெடுத்ததற்கு, நாட்டின் நாட்டு மக்களின் உணர்வு மட்டுமல்ல,  சுதந்திரப் போராட்டத்தில் தன்னுடைய நெருங்கிய நண்பரும் தோழருமான சுபாஷ் சந்திர போஸின் பங்களிப்பினை கௌரவிக்க வேண்டும் என்று நேருவிற்கு இருந்த உந்துதலும் காரணமாகும்.

1947இல் நேரு சுபாஷ் சந்திர போஸின் விடுதலை இந்தியா என்னும் தற்காலிக அரசாங்கம் அமைக்கப்பட்டதைக் கொண்டாடியதற்கும், இப்போதுள்ள பிரதமர் அதனைக் கொண்டாடியதற்கும் இடையேயான நோக்கம் முற்றிலும் வேறானதாகும். உண்மையில் இப்போது நடந்தது ஒரு கேலிக்கூத்தாகும். “வரலாறு மீண்டும் திரும்பும் போது அது கேலிக்கூத்தாகவே இருந்திடும்,” என்கிற மாமேதை மார்க்சின் கூற்றையே இது நினைவுபடுத்தி இருக்கிறது.

இந்த விழாவிற்கான அழைப்பிதழில் மோடியின் பெயர் மட்டுமே கொட்டை எழுத்துக்களில் காணப்பட்டது. சுபாஷ் சந்திர போஸின் பெயர் எங்கேயுமே இல்லை. வரலாற்றில் கடந்த காலத்தில் இருந்தவர்களையோ அல்லது இப்போது இருப்பவர்களையோ குறிப்பிட்டு, சிக்கலில் சிக்கிக் கொள்வதற்கு சங்கிகள் அஞ்சி யிருக்கிறார்கள்.

நேதாஜி குடும்பத்தினரை அழைக்கவில்லை இந்த நிகழ்வில் வேறெவரும் பேசிடவில்லை. மேடையையும் வேறெவரும் அலங்கரித்திடவில்லை. பொதுவாக இதுபோன்ற நிகழ்வுகளின்போது, யாரை நினைவுகூர்கிறோமோ அவருடைய குடும்பத்தாரை அழைத்து கவுரவிப்பது வழக்கம். அது போன்று எதுவும் நடைபெறவில்லை. விடுதலை இந்தியா தற்காலிக அரசாங்கத்தில் அங்கம் வகித்த அமைச்சர்களின் குடும்ப உறுப்பினர்கள் பலர், பிரதமருக்கு ஆதரவு நிலையில் இருப்பவர்களே இருக்கிறார்கள். அதிகம் இல்லை என்றபோதிலும், சிலர் உண்டு. அவர்களைக்கூட இவ்விழாவிற்கு அழைத்திட வில்லை.

பிரதமர் மட்டுமே, சுபாஷ் சந்திர போஸ் அணிந்திருந்ததைப்போன்று கருப்புக் குல்லாயை அணிந்துகொண்டு, மேடையில் நின்றுகொண்டு, கைகளை இங்குமங்கும் அசைத்தும், கண்களைச் சுழற்றியும் பேசினார். அவ்வாறு பேசும் போது, சுபாஷ் சந்திர போஸ் குறித்து அவர் நினைவுகூர்ந்தது மிகவும் குறைவு. மாறாக நேருவைத்தான் அதிக அளவில் கண்டித்து உரைநிகழ்த்தினார். சுபாஷ் சந்திர போஸின் தற்காலிக அரசாங்கம் குறித்தோ அவருடைய இந்திய தேசிய ராணுவம் குறித்தோ எதுவுமே கூறவில்லை.

உண்மையில், சுதந்திர இயக்கத்தைக் காட்டிக்கொடுத்த இயக்கத்தைச் சேர்ந்த ஒருவரால் என்ன பேசிட முடியும்? பேசுவதற்கு ஒன்றும் இல்லைதான். சுபாஷ் சந்திர போஸின் அரசாங்கம் குறித்து அவர் பேசுவதாக இருந்தால் அதன் அதிகாரபூர்வமான பெயரைக் குறிப்பிட வேண்டியிருக்கும். பின்னர் அதன் குறிக்கோள் வாசகமான, “ஒற்றுமை, நம்பிக்கை, தியாகம்” (“Ittefaq, Aitmad, Qurbani”) என்பதையும் குறிப்பிட வேண்டியிருக்கும்.

அப்போது நடைபெற்ற விசாரணை குறித்து அவர் பேசியிருந்தார் என்றால், பின் அவர், விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட மூன்று அதிகாரிகளில் ஒருவர் ஷா நவாஸ் கான் என்று குறிப்பிட வேண்டி இருந்திருக்கும். விசாரணையின்போது நாட்டிற்காகப் போராடிய சங்கிகளில் எவர் பெயரையாவது குறிப்பிடலாம் என்றால் அப்படி நாட்டிற்காகப் போராடிய சங்கி எவருமே இல்லை. விசாரணையின்போது குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் யார் தெரியுமா? புலாபாய் தேசாய், தேஜ் பகதூர் சப்ரு, ஆசிப் அலி, ஜவஹர்லால் நேரு. இவர்கள் அனைவருமே காங்கிரசைச் சேர்ந்தவர்கள். எனவேதான், மோடி எவர் பெயரையும் குறிப்பிடவில்லை. சுபாஷ் சந்திர போஸின் தற்காலிக அரசாங்கம் குறித்து மோடி குறிப்பிட்டபோது கூட அதன் ஆங்கில மொழி பெயர்ப்பைத்தான் கூறினார். ஏனெனில் அதன் பெயர் உருது மொழியில் இருந்தது. உருது மொழிதான் சங்கிகளுக்கு ஆகாத ஒன்றாயிற்றே.

நேதாஜியை நிந்தித்த சாவர்க்கார் இவ்வாறு இந்திய தேசிய ராணுவம் குறித்தோ அல்லது நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் குறித்தோ எதுவுமே கூறாது விடுபட்டதற்கு, அவர்களிடமிருந்த நினைவுத்திறன் இழப்போ அல்லது மதவெறி ரீதியிலான தவறான எண்ணங்களோ மட்டும் காரணங்கள் அல்ல, விடுதலைப் போராட்டத்தின்போதும், குறிப்பாக நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய ராணுவம் குறித்து அவர்களுக்கிருந்த கடும் விருப்பமின்மையும் காரணமாகும். இந்து மகா சபையின் நிறுவனரும், ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் மூளையாக இருந்து செயல்பட்டவருமான சாவர்க்கர், சுபாஷ் சந்திர போஸ் குறித்து விஷத்தைக் கக்கி இருக்கிறார். அவரை ஓர் “இந்து ஜிகாதி” (Hindu Jehadi) என்றுதான் அழைத்திருக்கிறார்.

இதற்கு, சுபாஷ் சந்திர போஸ், தன் வாழ்நாள் முழுவதும் தீவிரமாகப் பின்பற்றி வந்த மதச்சார்பின்மை உணர்வுதான் காரணமாகும். சுபாஷ் சந்திர போஸ், காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த சமயத்தில், எந்தவொரு காங்கிரஸ் உறுப்பினரும் இந்து மகாசபையிலோ அல்லது முஸ்லீம் லீகிலோ உறுப்பினராக இருக்கக்கூடாது என்று தடை விதித்து அதைக் கடுமையாகப் பின்பற்றினார்.

சங் பரிவாரத்தின் உறுப்பினர், சர்வேஷ் திவாரி, என்பவர், “சுபாஷ் சந்திர போஸ், அவருடைய 1940 மே 4 தேதியிட்ட வார இதழில், …‘இந்திய தேசிய காங்கிரஸ், அதன் அமைப்புச்சட்டத்தில் எந்தவொரு உறுப்பினரும் இந்து மகா சபை மற்றும் முஸ்லீம் லீக் போன்ற மதவெறி அமைப்புகளில் உறுப்பினராக இருக்கக்கூடாது என்றும், அவ்வாறு இருப்பார்களானால் அவர்கள் காங்கிரஸ் கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட குழு எதிலும் உறுப்பினராக தொடர முடியாது என்றும் ஒருபிரிவை சேர்த்திருக்கிறது,” என்று எழுதியிருக்கிறார். மேலும் அவர், “ஷ்யாமா பிரசாத் முகர்ஜி இந்து மகாசபையில் சேர்ந்தபோது, போஸ் அவரைச் சந்தித்து, அவரைக் கடுமையாக எச்சரித்ததாகத் தன் நாட்குறிப்பில் எழுதியிருப்பதாக,” கூறுகிறார்.

பிரிட்டிஷாரின் அடிப்பொடிகளாக இந்திய தேசிய ராணுவம் அமைக்கப்பட்டபின்னர், சாவர்க்கரும் அவருடைய ஆதரவாளர்களும் அதனையும் சுபாஷ் சந்திர போஸையும் மிகவும் இழிவான சொற்களால் தாக்கினார்கள். அந்த சமயத்தில் சாவர்க்கர் என்ன செய்து கொண்டிருந்தார் என்பதைப் பரிசீலித்தோமானால் இதில் ஆச்சர்யப்படுவதற்கு எதுவும் இல்லை.

1941இல் பகல்பூரில் இந்து மகா சபையில் 23ஆவது அமர்வு நடைபெற்ற சமயத்தில் அவர் பேசியதாவது:

“இந்து மகா சபையின் ஒவ்வொரு நகரத்திலும் மற்றும் ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள கிளையும், பிரிட்டிஷாரின் ராணுவம், கப்பல் படை மற்றும் விமானப்படைகளிலும் மற்றும் ராணுவம் சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளிலும், இந்துக்களை சேர்ப்பதற்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபடவேண்டும். பல லட்சக்கணக்கான இந்துக்களை இந்து இதயத்துடன் பிரிட்டிஷாரின் ராணுவம், கப்பல் படை மற்றும் விமானப் படைகளில் வெள்ளம்போல் நிரப்பிட வேண்டும்.”

சங் பரிவாரத்தின் தலைவர்கள் நேதாஜி சுபாஷ் சந்திர போஸை, தொடர்ந்து தாக்கி வந்தார்கள். அவர் கல்கத்தா மாநகராட்சிக்குத் தலைமை தாங்கிடத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, முஸ்லீம்களுக்கு வேலைகளுக்கான இட ஒதுக்கீட்டைத் துணிச்சலுடன் கொண்டுவந்தார். ஏனெனில், எந்த அளவிற்கு வேலைக்கு ஆளெடுப்பதில் அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு வந்தது என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். அவர் காங்கிரஸ் தலைவராக இருந்த சமயத்தில், மதவெறி அரசியலைத் தாக்குவதைக் கிஞ்சிற்றும் குறைத்துக்கொள்ளவில்லை. மேலும் இந்து-முஸ்லீம் ஒற்றுமையையும் எப்போதும் வலியுறுத்தி வந்தார்.

இந்து – முஸ்லிம் ஒற்றுமை

இந்திய தேசிய ராணுவத்தின் தலைமைக் கமாண்டராகப் பொறுப்பேற்றபின் அவர் மேற்கொண்ட முதல் நடவடிக்கை, ரங்கூனிலிருந்த பகதூர் ஷா ஜபாரின் சமாதிக்குச் சென்று மலர்வளையம் வைத்து, 1857 முதல் சுதந்திரப்போரின் போது, இந்து – முஸ்லீம் ஒற்றுமைக்கு மாபெரும் முன்னுதாரணமாகத் திகழ்ந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன் என்று கூறியதாகும். பின்னர் அவர், பகதூர் ஷா ஜபாரின் விடுபட்டுப்போன பாகங்களை தில்லியில் மொகலாயர்களின் நினைவுச் சின்னமாக விளங்கும், செங்கோட்டைக்கு எடுத்துவந்து, முழு மரியாதையுடன் அடக்கம் செய்வேன் என்று உறுதி எடுத்துக் கொண்டார்.

அதே சமயத்தில், அவர் இந்திய தேசிய ராணுவத்தின் அனைத்து அதிகாரிகளும் சிப்பாய்களும் ஒன்றாக உட்கார்ந்து, உண்ண வேண்டும் என்றும் பண்டிகைகளை ஒன்றாகவே கொண்டாட வேண்டும் என்றும் ஒரே குடியிருப்புகளில் உறங்கிட வேண்டும் என்றும் சிந்தனையிலும், செயலிலும் தோழமையைக் கடைப்பிடித்திட வேண்டும் என்றும் எப்போதும் வலியுறுத்தி வந்தார்.

பிரதமரும் அவரது எடுபிடிகளும் மிகவும் வெட்கங்கெட்ட முறையில் நேருவின் பங்களிப்புகளைத் துடைத்தழித்திட முயற்சிகளை மேற்கொள்ளும் அதே சமயத்தில், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களும் ஒரு தீவிரமான மதச்சார்பற்ற தேசியவாதியாகத் திகழ்ந்தார் என்பதையும் அழித்தொழித்திடும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் நேதாஜியினுடைய குல்லாயைத் தன் தலையில் பொருத்திக் கொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல், அவரையுமே தங்கள் சக இந்துத்துவாவாதி என்று மாற்றுவதற்கான இழிமுயற்சிகளிலும் அவரும் அவருடைய எடுபிடிகளும் முயற்சித்து வருகின்றனர்.

எனவே, அக்டோபர் 21 கொண்டாட்டங்களைத் தொடர்ந்து உண்மையான புகைப்படங்களைத் திரித்து சமூகவலைத் தளங்களில் வெளியிடும் பிஜேபி கூடாரமானது, கேப்டன் லட்சுமியால் தலைமை தாங்கப்பட்ட ஜான்சி ராணி ரெஜிமெண்ட்டின் அணிவகுப்பை ஆய்வு செய்திடும் சுபாஷ் சந்திர போஸின் அதிகாரபூர்வ புகைப்படத்தையும்கூட திரித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருப்பதைப் பார்க்கும்போது ஆச்சரியம் ஏற்படவில்லை. இவர்கள் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் கேப்டன் லட்சுமி இருந்த இடத்தில், பிரதமரின் படம் இடம் பெற்றிருக்கிறது. ஒருவேளை, வரவிருக்கும் காலங்களில் சுபாஷ் சந்திர போஸே கூட மாற்றப்பட்டு அந்த இடத்தில் அவர் இடம்பெறலாம். நேதாஜியின் குல்லாயை மட்டும் தற்போது பொருத்திக் கொண்டிருப்பதானது, பின்னர் அவரையே முழுமையாக மாற்றுவதற்கான புதிய அவதாரத்தின் முதல் அடியாக இருக்கலாம்.

(தமிழில்: ச.வீரமணி)

நன்றி: தீக்கதிர்

5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரம் மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம்….

எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 2 : என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்

Recent Posts