பைசாபாத் மாவட்டத்தின் பெயர் அயோத்தி என பெயர் மாற்றம் செய்யப்படும் என உத்திர பிரதேச மாநில, முதல்வர் கூறியுள்ளார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அயோத்தி சென்றுள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத், ராம் கதா பூங்காவில் நடந்த நிகழ்ச்சியில் பேசியதாவது:
இங்கு வந்துள்ள தென் கொரிய அதிபரின் மனைவியை வரவேற்கிறேன். தென் கொரியாவுடன் 2 ஆயிரம் பழமை வாய்ந்த கலாசார தொடர்பை இந்தியா கொண்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு பின்னர் கடவுள் ராமரை கொண்டாட இங்கு வந்துள்ளோம்.
நமது பெருமை மற்றும் பாரம்பரியத்தின் குறியீடாக அயோத்தி உள்ளது. முன்னர் அயோத்தி பெயரை சொல்லவே மக்கள் பயந்தனர். கடந்த காலங்களில் எந்த முதல்வரும் அயோத்தி வந்தது இல்லை.
அயோத்தி நகரம், நமது கவுரவம், பெருமையின் சின்னமாக விளங்குகிறது. ராம பிரான் என்றவுடன், எல்லாருக்கும் அயோத்தி நினைவுக்கு வரும். அதனால், அயோத்தி அமைந்துள்ள பைசாபாத் மாவட்டம், இனி, அயோத்தி மாவட்டம் என, பெயர் மாற்றப்படும்.
அயோத்திக்கு எந்த சக்தியும் அநீதி இழைக்க முடியாது. அதற்கு யாரையும் அனுமதிக்க மாட்டேன்.
அயோத்தி வளர்ச்சிக்கு பிரதமர் மோடி ஏராளமான திட்டங்களை அறிவித்து உள்ளார்.
அயோத்தியில், ராமரின் தந்தை தசரதரின் பெயரில், மருத்துவ கல்லுாரி அமைக்கப்படும். அயோத்தியில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும். இதற்கு கடவுள் ராமர் பெயர் சூட்டப்படும். இவ்வாறு அவர் பேசினார்.