அப்பன் வீட்டுப் பணத்தைச் செலவழித்தா வெளிநாடு செல்கிறார் மோடி?: ஸ்டாலின் ஆவேசம்

வெளிநாடு வாழ் இந்தியர் என்பதைப் போல வெளிநாடு வாழ் பிரதமராக இருக்கிறார் மோடி என திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். வெளிநாட்டு பயணத்திற்கு செலவு செய்வது என்ன அவர் அப்பன் வீட்டுப் பணமா என்றும் காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார்.

பெரம்பலூரில் திமுக சார்பில் இன்று நடந்த பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது:

”பாசிச விலங்குகளையும், ஊழல் கிருமிகளையும் வேட்டையாடுவதற்கு அறைகூவல் விடுக்க ஒருகளமாக பெரம்பலூர் அரியலூர் மாவட்டத்தை நாம் தேர்ந்தெடுத்துள்ளோம். திருச்சி செல்லும்போதெல்லாம் இந்த பெரம்பலூரைத் தாண்டித்தான் செல்ல வேண்டும். திருச்சி திமுகவின் கோட்டையாக எப்படி உள்ளதோ அதன் கோட்டை வாசல் பெரம்பலூர் மாவட்டம் ஆகும்.

இன்றைக்கு கூடியிருக்கும் இந்தக் கூட்டம் வழக்கமான கூட்டம் அல்ல. இன்னும் வெளிப்படையாகக் கூறுவதென்றால் அகில இந்தியாவும் கவனிக்கும் கூட்டமாக இந்தக் கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இந்தியாவிற்கு அடுத்த பிரதமரைத் தேர்வு செய்யும் ஒரு தேர்தலை நாமெல்லாம் எதிர்கொள்ளும் நிலையில் இருக்கிறோம்.

நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலும் சேர்த்து வரப்போகிறதா? அது எந்த நிலையில் வந்தாலும், எப்படிப்பட்ட சூழ்நிலையில் வந்தாலும் எந்த நேரத்தில் வந்தாலும் அதை சந்திக்கத் தயாராக உள்ளதை அறிவிக்கும் கூட்டம்தான் இந்தக் கூட்டம் என்பதை நாம் மறக்கக்கூடாது.

மத்தியில் பாசிச பாஜக ஆட்சி, மாநிலத்தில் ஊழல் மிக்க அதிமுக ஆட்சி என இரண்டையும் ஒருசேர விரட்டும் வல்லமை நமது திமுகவிற்கு உண்டு என்பதை அறிவிக்கும் கூட்டம் இது. இந்த நாளை நாம் தேர்ந்தெடுத்ததிலும் ஒரு காரணம் உண்டு. இந்த நாளை நாம் மறக்கக்கூடாது. மோடியால் பண மதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்ட நாள் இன்று.

2016-ம் ஆண்டு இதே நவம்பர் 8-ம் நாள் இந்தியாவில் இருக்கிற 120 கோடி மக்களையும் முட்டாளாக்கினாரே மோடி. 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தாரே அந்த நாள். கறுப்புப் பணம் ஒழியும், ஊழல் அடியோடு ஒழிக்கப்படும், கள்ள நோட்டுகள் குறையும், தீவிரவாதம் அகற்றப்படும் என்று மோடி மஸ்தான் வித்தைபோல் அறிவித்தார்.

இரண்டு ஆண்டுகள் அகன்றுவிட்டன, நான் பிரதமர் மோடியைப் பார்த்துக் கேட்கிறேன், 2 ஆண்டுகள் இன்றோடு முடிந்துள்ளது. திமுக சார்பில் கேட்கிறேன், கறுப்புப் பணம் இல்லையா? ஊழல் இல்லையா? கள்ள நோட்டு இல்லையா? தீவிரவாதம் ஒழிந்ததா? என்ன சாதித்தார் மோடி ஒன்றுமே இல்லையே.

நான் ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களுக்குள் வெளிநாட்டில் உள்ள கறுப்புப் பணத்தைக் கொண்டுவந்து ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கு அவரது வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் போடுவேன் என்று அறிவித்தாரா? இல்லையா?

இதுவரை யாருடைய கணக்கிலாவது 15 லட்சம் அல்ல, 15 ஆயிரம் அல்ல 15 ரூபாயாவது போட்டிருப்பார் என்று தைரியமாகக் கூற முடியுமா? 15 ரூபாய் என் கணக்கில் மோடி போட்டிருக்கிறார் என்று சொன்னால் நான் மன்னிப்பு கேட்கிறேன். சரி வெளிநாட்டிலிருந்து கறுப்புப் பணத்தையாவது கொண்டுவந்தீர்களா? அதுவும் கிடையாது.

கிராமத்தில் ஒரு கதை உண்டு. 365 நாட்கள் கழித்து ஒரு மலையைத் தூக்கப்போகிறேன் என்று ஒருவன் சொல்கிறான். அவன் சொன்னதைக் கேட்டு நம்பி ஏமாந்த கிராம மக்கள் அவனுக்கு வருடம் முழுவதும் இலவசமாக உணவு அளிக்கின்றனர்.

365 நாட்கள் முடிந்தவுடன் கிராம மக்கள் மலையைத் தூக்கு என்று கூறியபோது அவன் சொன்னான் எல்லோரும் சேர்ந்து மலையைத் தூக்கி என் தோளில் வையுங்கள் தூக்குகிறேன் என்றான்.

அதுபோல இருக்கிறது மோடியின் கதை. வாக்குறுதிகளை வழங்கிவிட்டு அதைப் பற்றி கவலைப்படாதவர்களாக உள்ளனர். என்ன ஆயிற்று என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறுகிறார். நாங்கள் தேர்தலில் வெற்றிபெற உறுதிமொழியைத் தந்தோம். ஆனால் வெற்றி பெறுவோம் என்று நினைக்கவில்லை. அப்படி நினைத்திருந்தால் அவ்வாறு வாக்கு கொடுத்திருக்க மாட்டோம் என்று வெளிப்படையாகக் கூறினார்.

வெளிப்படையாக வெட்கத்தை விட்டு ஒரு அமைச்சர் பேட்டி தருகிறார். பாஜகவின் தலைவர் அமித்ஷா என்ன சொன்னார்?  இந்தியாவில் பசி இருக்காது, பட்டினி இருக்காது, கறுப்புப் பணம் இருக்காது என்று சொன்னார். வேலையில்லாத் திண்டாட்டம் இருக்காது என்று சொன்னார், ஊழல் இருக்காது என்று சொன்னார். இவை அத்தனையும் இங்கு இந்தியாவில் இருக்கிறது. ஆனால் பிரதமரின் மோடிதான் இந்தியாவிலேயே இருப்பதில்லை. அவர் வெளிநாட்டிலேயே இருக்கிறார்.

வெளிநாடுவாழ் இந்தியர் பற்றி கேள்விப்பட்டுள்ளோம், ஆனால் வெளிநாடுவாழ் பிரதமர் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோமா? மோடி  பிரதமராகி நான்கரை ஆண்டுகளில் 84 நாடுகளுக்குச் சென்றுவிட்டு வந்துள்ளார். அதற்கு ஆன செலவு 1484 கோடி ரூபாய். இது யார் வீட்டுப் பணம், உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? மக்களுடைய வரிப்பணம். உலக அளவில் அதிக வெளிநாடுகளுக்குச் சென்ற பிரதமர் யார் என்று பார்த்தால் மோடிதான் முதலிடம். அதுதான் அவரது சாதனை.

வளர்ச்சி வளர்ச்சி என்று பேசிய மோடியைப் பார்த்துக் கேட்கிறேன். பெட்ரோல் விலையும் டீசல் விலையும் ஏறியதுதான் வளர்ச்சியா? ஜிஎஸ்டியை காங்கிரஸ் ஆட்சியில் எதிர்த்தீர்களே, ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் இரவோடு இரவாக ஜிஎஸ்டியை அமல்படுத்தினீர்களே. காங்கிரஸ் ஆட்சியில் ஆதார்  தேவையில்லை என்று எதிர்த்தீர்களே, நீங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் ஆதாரைக் கட்டாயமாக்கினீர்களே?

விஜய் மல்லையாவை அருண் ஜேட்லி மூலம் தப்பவைத்ததுதான் மோடியின் மிகப்பெரிய சாதனை. நிரவ் மோடியை சுஷ்மா ஸ்வராஜ் மூலம் தப்பிக்க வைத்ததுதான் மோடியின் மிகப்பெரிய சாதனை. நிரவ் மோடியை இன்றுவரை காப்பாற்றுவதுதான் மிகப்பெரிய சாதனை.

அஜுஸ் பல்கலைக்கழகம் கர்நாடகாவின் மிகப்பெரிய பல்கலைக்கழகம். அதன் ஆய்வு முடிவில் ஓர் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லாத் திண்டாட்டம் இந்தியாவில்தான் அதிகம் என்று ஆதாரத்தோடு வெளியிட்டுள்ளது. மோடி தலைமையில் உள்ள பாஜகவின் ஆட்சியை அகற்றிட நாமெல்லாம் தயாராகிவிட்டோம் என்பதை எடுத்துக்காட்டிடத்தான் இந்தக் கூட்டம்.

அதன் முன்னோட்டமாகத்தான் அண்மையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு டெல்லியில் ராகுல் காந்தியைச் சந்தித்துள்ளார். இன்று கர்நாடக மாநில முதல்வரைச் சந்தித்துள்ளார். நாளை (வெள்ளிக்கிழமை) என்னையும் சந்திக்கிறார். அதேபோல் பல்வேறு கட்சிகளின் தலைவர்களெல்லாம் இன்று ஒன்றிணைகிறார்கள் என்றால் இந்தச் சந்திப்புக்கெல்லாம் மோடியின் மீதுள்ள தனிப்பட்ட பகை காரணமல்ல.

மோடியால் இந்திய மக்களுக்கு எந்தப் பயனும் கிடையாது. அதனால்தான் அகில இந்திய தலைவர்கள் ஒன்று சேர்ந்து மோடியின் ஆட்சியை அகற்றத் தயாராகி வருகிறோம். திமுகவைப் பொறுத்தவரையில் மாநில உரிமையை என்றைக்கும் விட்டுக்கொடுக்க நாங்கள் தயாராக இல்லை. அதற்காகத்தான் ஒன்று சேர வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துகிறேன்.

ஆகவேதான் மாநிலக் கட்சிகள் அத்தனையும் ஒன்று சேரும் நிலை உருவாகிக்கொண்டு வருகிறது. காரணம் மாநில உரிமைகளை மதிக்காதவர் மோடி, யாருடைய ஆலோசனையையும் கேட்காதவர் மோடி, நாடாளுமன்றமே செல்லாதவர் மோடி, நாடாளுமன்ற விவாதங்களில் பங்கேற்காதவர் மோடி”.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்