இதம்: ரவிசுப்பிரமணியன் கவிதைகள்

சித்திரத்தையல்

 

மஞ்சுப்பொதிகள் சலனித்தலையும்

இந்த கூதிர்காலப் பொழுதில் புறப்பட்டேன்

 

வாகன ஒலிகளுக்கப்பாலிருக்கும்

அந்த பிரத்யேகஇடம் சமீபிக்க சமீபிக்க

எஜமானனின் வாசனையுணர்ந்த

நாயின் பரபரப்பாய் அலமறுகிறேன்

 

ஆலும் அரசுமடர்ந்த பாதை தாண்டி வாழைத் தோப்பு கடந்து

நிலமெங்கும் குளிர் மிதக்கும் வெளியை அடைந்தேன்

 

நிசப்தக் கீழ்வானில் கொன்றை ஜ்வாலையாய் சூரியன்

 

குரால்களோடும் மறிகளோடும் சிறுமந்தை

 

மரக்கிளையில் குயில் இழைய

தூரத்திலிருக்கும் மாதா கோயிலின் கோபுரத்தில்

தெரியுதொரு சுதைச் சிற்பம்

 

பறவையின் தொகுதியொன்று வட்டச்சுழற்சியில்

ஏறித்தாழ்ந்து அலைகின்றது

 

ஆவினங்கள் திரியும் அகண்ட பெருவெளியின்

நதிக்கரைபோகும் பாதையின் பன்னீர் மர நிழலில்

பற்றிப் படர்கிறது ஞாபக மணம்

 

இந் நகரத்தின் வெளியிலே நான் யார்

எதை இறைஞ்ச இங்கு வந்தேன்

 

மரவட்டைகள் ரயில் பூச்சிகள்

சில்வண்டுகளின் பாதைக்கு இடையூறின்றி

புன்னை மரம் கீழ் அமர்ந்து வயலினை மீட்டுகிறேன்

 

நீண்டும் வளைந்தும்

மேலும் கீழும் முறுகும் ஸ்வரங்கள் அலைவதெல்லாம்

அந்த ஒற்றை ராகத்தில்தான்

 

காற்றில் நனைந்து முற்றிப்பழுக்கிறது நாதம்

அதன் செழிப்பின் தயவில் தழைகிறேன்

 

செம்மையேறிய பிறழ்வின் பொழுதுகளில்

விம்மித் ததும்பும் இசையே

மறு உருகொண்டு தலையும் கோதுகிறது கருணையாய்

தியானச்சுடரில் நழுவி மீள்கிறேன்

 

அறுந்துகிடந்த நினைவுகளை

இணைத்தொரு சித்திரத்தையல்

நிறைந்த மெளனம் நீண்டு படர

அலையடிக்கும் உணர்வுகளிலிருந்து

கையளவு அள்ளிப் பருகுகிறேன்

 

உழன்றெறியும் தனிமை

ஆதுர அரவணைப்பில் ஆசுவாசம் கொள்கிறது

 

தருணங்கள் விழித்தெழ

இதோ இருள் நுழையும் சலசலப்பு கேட்கிறது

 

நன்றியை முணுமுணுத்து விடைபெறப் பார்க்கிறேன்

 

இன்னும் எவ்வளவு நேரம்தான் இங்கிருப்பேன்

 

திரும்பவும் முடியாமல் இருக்கவும் முடியாமல்

நெறிகட்டி நீள்கிறதொரு இதம்.

 

 

நிகழும் அதிசயம்

 

 

தொடர் பிரார்த்தனையால் மன்றாடிப் பெற்ற அனுக்கிரஹத்தை

புலர் காலையில் பூஜைக்கு முளைத்த செவ்வரளியைச்

சாதகப்பறவைக்கு  இசைதான்யமிறைத்த வள்ளலைச்

சித்திரப்பொற்புதையலைத்

தாளம் தப்பா நர்தனத்தை

அருநிதியக் கலசத்தைத் தவறவிட்டேன்

 

கங்குகள் தீய்த்த விதியன்றி வேறென்ன

ஸ்வரத்துக்குள் வராத சொல்லானேன்

அவதூறின் உருவாகி குற்ற உணர்வில் பித்தானேன்

இரவுகளின் கண்ணெல்லாம் ரணமெழுதிச் சிவந்தன

விளையாட்டாய் சிதைந்தது ஜீவிதம்

ஆனாலும் பிழைத்திருந்தேன்

 

பரிகார சங்கற்பம் செய்து

ஆண்டுபலவாய் நோன்பிருந்து திருநாமம் செப்பி

நிஷ்களங்க நெய்யூற்றி நிவேதனம் செய்துவந்தேன்

 

திடீரென பிரளய இடி இடித்து மின்னல்தெறிக்க

அனுகூல நிமித்தம் தோன்ற

இன்றின் முற்றத்தில் பெய்த பேய்மழையில் நின் வருகை நிகழ

அடித்துச் செல்கிறது எல்லாம்.

 

நன்றி: பேசும் புதிய சக்தி, நவம்பர் – 2018.

test

“சர்க்கார்” எதிர்ப்புப் போராட்டம் சட்டத்திற்கு புறம்பானது: ரஜினி கண்டனம்

Recent Posts