கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை செவ்வாய்க்கிழமை பார்வையிட உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:
கடலோர மாவட்டங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. புயல் பாதித்த மாவட்டங்களில் போர்க்கால அடிப்படையில் நிவாரணப்பணிகள் நடைபெறுகின்றன. நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்க கூடுதலாக அமைச்சர்கள் புயல் பாதித்த மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே மாவட்ட ஆட்சித் தலைவர்கள், அவர்களுக்கு உதவியாக இருப்பவர்களுக்கு அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் அங்கேயே தங்கியிருந்து போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். உணவு இல்லையென்ற நிலை எங்கேயும் கிடையாது. அந்த மக்களுக்குத் தேவையான உணவு வழங்குவதற்கு ஏற்கனவே முன்னேற்பாடுகள் செய்து இருப்பு வைத்திருக்கின்றார்கள். பால் வேண்டுமென்று கேட்டதற்கு அனுப்பி வைத்திருக்கின்றார்கள். ஏற்கனவே பால் பவுடர்கள்அங்கேயே இருப்பு வைத்திருக்கின்றார்கள். அதுமட்டுமல்லாமல், நேற்றைதினம் பத்திரிகைகள், ஊடகங்கள் வாயிலாக நான்தெரிவித்திருந்தேன்.
மேலும், 5 அமைச்சர்கள் அந்த கடலோர மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்கள். அந்தப்பணிகளை நேரடியாக கவனித்து உடனடியாக சீர் செய்வதற்கு மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், மின்சாரத் துறை அமைச்சர் பி.தங்கமணி, உள்ளாட்சித் துறை அமைச்சர்எஸ்.பி.வேலுமணி, மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் இன்றையதினம் அங்கு சென்றிருக்கின்றார்கள், அந்தப் பணிகளை மேற்கொள்வார்கள்.
அதுமட்டுமல்லாமல், இப்பொழுது துணை முதலமைச்சரும் அங்கு சென்றிருக்கிறார். துணை முதலமைச்சரும் புயலால் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்டு, நிவாரணப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளார். விரைவாக, போர்க்கால அடிப்படையிலே நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது.
இன்றே புயல் பாதித்த மாவட்டங்களுக்கு தான் செல்ல இருந்தேன். ஆனால், சேலத்தில் ஏற்கெனவே திட்டமிட்ட நிகழ்ச்சிகளை முடித்துச் செல்ல கால நேரம் போதாது என்ற நிலை ஏற்பட்டு விட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய ஒரு நாள் முழுவதும் தேவைப்படுகிறது. எனவே வரும் செவ்வாய்க்கிழமை பார்வையிடச் செல்கிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.