நாட்டில் புறையோடி அடிவேர் வரை ஊடுருவியுள்ள ஊழலை ஒழிக்கவும், கருப்பு பணத்தை வங்கி நடைமுறைக்கு கொண்டு வரவும், ரூபாய் நோட்டு வாபஸ் என்ற கசப்பு மருந்தை பயன்படுத்தியதாக பிரதமர் மோடி கூறினார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் ஜபுவா என்ற இடத்தில் நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது:
பிரதம மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் 14 கோடி பேருக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. காங்கிரசால் 10 ஆண்டுகளாக செய்ய முடியாததை, பாஜக, 4 ஆண்டில் செய்து முடித்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியின் போது மக்களின் நிலை பற்றி அனைவரும் சிந்திக்க வேண்டும்.
மக்கள் நலன்கள் பற்றி சிந்திக்காத அரசு தான் இங்கு இருந்தது. 55 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் காலத்தில் 1,500 பள்ளிகள் மட்டுமே கட்டப்பட்டன.
ஆனால், முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், தனது 15 ஆண்டு ஆட்சியில் 4 ஆயிரம் பள்ளிகள் கட்டி கொடுத்துள்ளார்.
ஆண்கள், பெண்களுக்கு கல்வி, இளைஞர்களுக்கு வருமானம், விவசாயிகளுக்கு நீர்ப்பாசன வசதி , முதியவர்களுக்கு மருத்துவம் ஆகியவற்றை அளிப்பதே எங்களின் தாரக மந்திரம்.
கர்நாடகாவில், விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வோம் என காங்கிரஸ் கூறியது. ஆனால், அவர்களை மிரட்டி சிறைக்கு அனுப்புகிறது.
2022க்குள் விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக்குவதே மத்திய அரசின் லட்சியம். 2022க்குள் நாட்டில் அனைவருக்கும் குடியிருப்புகள் வழங்குவதே எனது கனவு.
இதுவரை 1.25 கோடி பேருக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.