கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர் மற்றும் காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய அந்த மையத்தின் இயக்குனர் பாலச்சந்திரன், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த வலுவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி, அதே இடத்தில் நிலைகொண்டுள்ளதாக கூறினார்.
இது, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுபெறும் என்றும், இதன் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார்.
அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, நாகை மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்யும் எனவும் பாலச்சந்திரன் கூறினார்.
இதன் காரணமாக, மீனவர்கள் இன்றும், நாளையும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அவர் அறிவுறுத்தினார்.
சென்னையை பொறுத்தவரை, அவ்வப்போது மிதமான மழை பெய்யும் என்றும், ஒரு சில நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் பாலச்சந்திரன் தெரிவித்தார்.