அடுத்த 24 மணி நேரத்திற்கு தென்மாவட்டங்களில் மட்டும் சில இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரியில் அடுத்த மூன்று நாட்களில் படிப்படியாக மழை குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நேற்று தமிழகத்தின் உள்பகுதிகளில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி வலுவிழந்துவிட்டது.
குமரி முதல் தமிழகத்தின் உள்பகுதி வரை வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்துள்ளது. சில இடங்களில் கனமழையும், ஒரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்துள்ளது.அதிகபட்சமாக செங்கல்பட்டில் 18 செ.மீ., மதுராந்தகத்தில் 16 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகரில் சில பகுதிகளில் ஒரிரு முறை லேசான மழை பெய்யக்கூடும். நாளை முதல் 3 நாட்களில் மழை அளவு படிப்படியாக குறைந்துவிடும் .
அக்., 1 முதல் தற்போது வரை சென்னையில் 32 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இயல்பான மழை அளவு 57 சதவீதம். இயல்பை விட 44 சதவீத குறைவாக மழை பதிவாகியுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், அக்., 1 முதல் இன்று வரை 28 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இயல்பான மழை அளவு 33 செ.மீ.,. இயல்பை விட 13 சதவீத மழை குறைவாக பதிவாகியுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.