நடிகர் ரஜினிகாந்திற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டிருப்பதாக பரவிய தகவல் பொய்யானது என அவரது செய்தித் தொடர்பாளர் ரியாஸ் கே.அகமது விளக்கமளித்துள்ளார்.
ரூ. 550 கோடி பொருட்செலவில் ரஜினி நடித்து தயாரிக்கப்பட்ட 2.0 படம் வரும் 29 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், மற்றொரு படமான பேட்ட படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு கடந்த வாரம் தான் ரஜினி சென்னை திரும்பி இருந்தார்.
அப்போதுதான் 7 பேரா யாரது , பாஜக ஆபத்தான கட்சி போன்ற கருத்துகளைப் பேசி சர்ச்சையில் சிக்கி, மறுநாளே அவற்றுக்கு விளக்கமும் அளித்தார்.
இந்நிலையில், ரஜினிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக வெள்ளிக்கிழமை தகவல் பரவியது. இதனால், அவரது ரசிகர்களும், ரஜினி மக்கள் மன்றத்தினரும் கவலையடைந்தனர்.
ஆனால், ரஜினி நலமுடன் இருப்பதாகவும், இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றிற்கு, ரஜினியின் செய்தித் தொடர்பாளர் ரியாஸ் கே. அகமது விளக்கமளித்துள்ளார்.
சென்னையில், லதா ரஜினிகாந்தின் தயா அறக்கட்டளை சார்பாக சனிக்கிழமை நடத்தப்படும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்க இருப்பதாகவும் ரியாஸ் கே.அகமது தெரிவித்துள்ளார்.