கூட்டணி குறித்து பல்வேறு சர்ச்சைகள் பரபரப்பாக வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னையில் இன்று நேரில் சந்தித்துள்ளார்.
திமுக பொருளாளர் துரைமுருகன் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் தேர்தலுக்காகன கூட்டணி இன்னும் அமைக்கப்படவில்லை என்றும், அதே நேரத்தில் மதிமுக, விசிக கட்சிகள் தங்களுக்கு நண்பர்களாகவே இருந்து வருவதாகவும் கூறியிருந்தார். அவரது இந்தக் கருத்து திமுக கூட்டணி குறித்து பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
திமுக கூட்டணியில் நாங்கள் இருக்கிறோமா என்பதை கட்சியின் தலைவர் ஸ்டாலின் தான் உறுதிப்படுத்த வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்திருந்தார். திருமாவளவனும் துரைமுருகன் பேட்டி குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார்.
இந்நிலையில், டிச -3ம் தேதி 7 தமிழர்கள் விடுதலையை வலியுறுத்தி மதிமுக முன்னெடுக்கும் போராட்டத்திற்கு திமுக ஆதரவளிப்பதாக, மு.க.ஸ்டாலின் வைகோவுக்கு கடிதம் எழுதி இருந்தார். இதன் மூலம், மதிமுகவுடன் இணக்கமான போக்கையே கடைப்பிடிக்க திமுக விரும்புவதை ஸ்டாலின் உறுதிப்படுத்தியதாக கருதப்பட்டது.
இதனிடையே, திமுக தலைவர் ஸ்டாலினை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இன்று மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்துள்ளார்.
மதிமுகவின் போராட்டத்திற்கு ஆதரவு தருவதாக ஸ்டாலின் எழுதிய கடிதம், திருமாவளவனுடனான சந்திப்பு ஆகியவற்றின் மூலம், மதிமுக, விசிக கட்சிகளுடன் திமுக இணக்கத்துடன் இருப்பதை உறுதிப்படுத்தி இருப்பதுடன், கூட்டணி குறித்து கிளம்பிய தேவையற்ற சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருப்பதாகவே அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது.