அரசியல் வேடம் உங்களுக்கு பொருந்தவில்லை ரஜினி!: செம்பரிதி

ரஜினி.

மீண்டும் பல பத்தாண்டுகளுக்கு தமிழகத்தை பின்னோக்கித் தள்ளுவதற்கான அண்மைக்கால அரசியல் விபத்துகளில் முக்கியமானவர்.

இந்தியா டுடேவில் வெளிவந்துள்ள அவரது பேட்டி அதனை அய்யத்திற்கு இடமின்றி உறுதிப்படுத்தி உள்ளது.

ரஜினி தமிழக அரசியல் களத்தில் புதிதாக முளைத்துத் தழைத்து வரும் விஷ விருட்சமல்ல.

70 கள் முதலே திட்டமிட்டு உருவாக்கப்பட்டும், உருவாகியும் வந்தவர்தான்.

உலகில் உள்ள ஆதிக்க சக்திகளிலேயே ஆபத்தான கூர்மையும், அனாயசமான தொலை நோக்கு வேலைத்திட்டங்களையும் கொண்டது பார்ப்பனியம்.

அதனால்தான், எம்ஜிஆர் திரையுலகை விட்டு முழுமையாக விலகிய அதே தருணத்தில் உள்ளே நுழைந்த ரஜினியை, அதே இடத்தில் கொண்டு வந்து அவர்களால் பொருத்திவிட முடிந்தது.

ரஜினியை திரையில் அறிமுகப் படுத்திய பாலச்சந்தர் யார் என்பது குறித்த அறிமுகம் அதிகம் தேவையில்லை.

பாலச்சந்தர் தன்னை எப்படியெல்லாம் வார்த்தெடுத்தார் என்பதைப் பற்றி ரஜினிகாந்தே பலமுறை சொல்லி இருக்கிறார். அப்படி வார்த்தெடுக்கப்பட்ட ரஜினிக்கு சோ ராமசாமி பின்னாளில் உற்ற துணையாக இருந்தார்.

ஒய்.ஜி.மகேந்திரன் மனைவியின் சகோதரி லதாவை திருமணம் செய்ததன் மூலம், ரஜனியை பார்ப்பனியம் முழுமையாக உட்செரித்துக் கொண்டது.

பார்ப்பனியத்திற்குள் மூழ்கியும், நீந்தியும் திளைத்து வரும் ரஜினியைத் தான், ஒரு காலத்தில் தமிழகத்தின் இளைஞர் கூட்டம், தனது நாயகனாக தோளில் தூக்கிக் கொண்டாடித் தீர்த்தது. அதனாலேயே, அந்தத் தலைமுறையின் அரசியல் எழுச்சியும், உணர்ச்சியும் ஏறத்தாழ தீர்ந்தும், தீய்ந்தும் போனது.

பாலச்சந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டும், அறிவூட்டப்பட்டும், சோ போன்ற நண்பர்களால் செறிவூட்டப்பட்டும், மனைவி லதா மூலம் உரமூட்டப்பட்டும், முழுமையான பார்ப்பனிய தன்மைகளுடன் வளர்ந்து நிற்பவர்தான் ரஜினி. பெயரளவுக்கு தமிழருவி மணியன்களாக இருப்பவர்கள், செயலளவில், பார்ப்பனியத்திற்கு பல வடிவங்களிலும் அடி வருடுவோரே தவிர, அவர்கள் பிறந்த தமிழ் மண்ணுக்கு ஒரு போதும் நேர்மையாக இருப்பவர்கள் அல்ல.

ரஜினி… நிறத்தால் கருப்பு. அவர் பிறந்த மராத்தி கெய்க் வாட் என்பது ஒரு வித மேலாதிக்க சாதியே எனினும் நேரடியாக பிராமண வகுப்பல்ல. ஆனாலும், சிவாஜி ராவ் என்ற ரஜினியை ஒரு சீரிய பார்ப்பனராக உருவாக்குவதில், அவரைச் சுற்றி இருந்தவர்களுக்கு எந்தச் சிரமமும் இல்லை.

கர்நாடகாவிலே பிறந்த ரஜினி, இளம் வயதிலேயே ஆச்சாரியா பாடசாலை, விவேகனந்தா பாலக சங்கம் போன்ற கல்வி நிலையங்களில் படித்து, பார்ப்பனிய சிந்தனையைப் பெற்றிருந்ததால், அது மிக எளிதாகவே நடந்தேறிவிட்டது. நடிகராக வளர்ந்த பின்னரும் அவர் சேர்த்துக் கொழுத்த செல்வத்தின் மீது பற்றற்றவராகத்தானே வேடம் போட்டு வருகிறார். நீங்களும், நானும் நினைத்த மாத்திரத்தில் இமயமலைச் சாரலுக்கு இளைப்பாறப் போக முடியுமா?

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் நடத்தியவர்களை சமூக விரோதிகள் என்றும், தீவிரவாதிகள் என்றும் ரஜினி கூறியது, ஏதோ அவசரத்தில் நடந்து விட்ட தவறல்ல.  அவரது அடி ஆழ மனதில் வேர் பிடித்துக் கிடந்த விஷமக் கருத்து.

இப்போது, தனக்குள் ததும்பும் விஷத்தை முழுமையாக கக்குவதற்கான நேரம் வந்து விட்டதாக அவர் கருதியதன் விளைவுதான் இந்தியா டுடே பேட்டி.

நாடு தற்போதுள்ள மோசமான சூழலில், அதன் நன்மைக்காகத்தான் மோடி பாடு படுகிறார் என்று கூசாமல் சொல்வதற்கான திமிரையும், திண்ணக்கத்தையும், பார்ப்பனியத்தைத் தவிர வேறு எந்தப் பின்னணியும் ஒருவருக்குத் தந்து விட முடியாது.

அத்துடன் விட்டுவிடவில்லை ரஜினி.

தமிழ்நாட்டில் தலைமைக்கான வெற்றிடம் இருக்கிறதாம். அதை இட்டு நிரப்ப இவர் வரவேண்டி இருக்கிறதாம்.

அவர் போற்றும் ஆன்மீகத்தின் படியும் சரி, புறக்கணிக்கும் அறிவியல் ரீதியாகவும் சரி, இந்தப் பிரபஞ்சத்தில் வெற்றிடம் ஒன்று இருக்க முடியாது என்பதுதானே யதார்த்தம்.

இத்தனை வன்மத்தை ரஜினிக்குக் கற்றுக் கொடுத்த அவருடைய இந்துத்துவ குருமார்கள், வரலாறு தன்னைத் தானே சமன் செய்து கொள்ளும் வல்லமை பெற்றது என்ற இயற்கையின் தன்னியல்பை மட்டும் சொல்லித்தராமலா விட்டிருப்பார்கள்.

திமுக எனும் பேரியக்கமும், அதனைத் தலைமை தாங்கி நடத்தும் இடத்தில் ஸ்டாலினும் இருக்கும் தைரியத்தில் மட்டுமே, தமிழக மக்கள் எதிர்காலம் குறித்த அச்சத்தில் இருந்து விடுபட்டு, சற்றே ஆறுதலை பெறுகிறார்கள் என்பதை அவரும் அறிவார்.

அடித்தட்டு மக்கள் அனைவரும் திமுக தலைவர் ஸ்டாலின் ஆட்சித் தலைமையை ஏற்கும் நாளை எதிர்பார்த்துக் காத்திருப்பதும் கூட ரஜினிக்கு தெரியும்தான்.

ஆனாலும் என்ன செய்வது… பாஜகவும், அவாள்களும் அவருக்கு இட்ட பணி…  அவர் பேசுகிறார்.

காஜா புயலின் சீற்றம் குறையும் முன்னரே களத்திற்கு சென்ற முதல் தலைவன் ஸ்டாலின்… அப்படியெனில் அவர் தானே முதல்வராவதற்கான தலைவனும் கூட!

“திரைப்படம் என்றால் அதற்கு இயக்குநர், வசனகர்த்தா, இசையமைப்பாளர் என எல்லோரும் இருப்பார்கள். அங்கு அவர்கள் கூறுவதை மட்டும் நாம் செய்தால் போதும். அரசியல் அப்படி அல்ல. இங்கு எல்லாமே நாமே சிந்தித்து செயலாற்ற வேண்டி உள்ளது.  கடவுளே… அரசியல் ஆபத்தான விளையாட்டு” என்று அதே இந்தியா டுடே பேட்டியில் அங்கலாய்த்திருக்கிரார் ரஜினி.

அத்தகைய கந்தக உலகில், கடந்த அரைநூற்றாண்டுகளுக்கும் மேலாக அயராது பயணித்து வருபவர்தான் திமுகவின் தற்போதைய தலைவர் ஸ்டாலின்.

பெரியார், அண்ணா, கலைஞர் என, திராவிட இயக்கத்தின் முப்பரிமாண வரலாற்று ஆளுமைகளின் நிழலில் அமர்ந்து அரசியல் கற்றவர்.

இந்திய வரலாற்றிலேயே எந்தக் கட்சிக்கும் இல்லாத அளவு வலிமையுள்ள இளைஞரணியை உருவாக்கி, அதனை தாய்க் கழகத்திற்கு நிகரான தகைமை மிகு அமைப்பாக நிலை நிறுத்தியவர்.

எம்ஜிஆர் எனும் திரையுலக பிம்பத்தின் மாயையில் சிக்கி, 13 ஆண்டுகளாக தமிழகம் தன்னிலை தடுமாறிச் சீரழிந்த காலத்திலும், இளைஞரணி என்ற பேரியக்கத்தின் மூலம், திமுகவின் நாடி, நரம்புகளில் புது ரத்தம் பாய்ச்சியவர்.

அதற்கு முன்பே மிசா எனும் மிருகத்தனமான சர்வாதிகாரத்தின் சிறைக் கொட்டடிக் கொடுமைகளை ஓராண்டு அனுபவித்து, திராவிட இயக்க அரசியலின் அடுத்த கட்ட அத்தியாயமாக, புத்தெழுச்சி பெற்ற புதிய ஆளுமையாக வெளியே வந்தவர்.

சிறைப் புண்ணால் உடல் சிதைக்கப்பட்டாலும், மனதளவில் வைரம் பாய்ந்தவராக வந்து இயக்கத்திற்கு வலுச்சேர்த்தவர்.

சமூகநீதி என்ற சொல்லைக் கூட ரஜினியால் ஒழுங்காக உச்சரிக்க முடியாது. ஆனால், சமூகநீதி அரசியலுக்காகவே திராவிட இயக்கத்தால் அரைநூற்றாண்டுக்கும் மேலாக வார்த்தெடுக்கப்பட்ட எஃகுத் தலைவர் ஸ்டாலின்.

கொள்கையைக் கேட்டாலே தலை சுத்துது எனக் கூறும் ரஜினிக்கு அதன் அருமையும், தேவையும் எப்படிப் புரியும்?

ஆன்மீக அரசியலாம். உலகில் இதுவரை யாரும் கண்டும், கேட்டுமறியாத புதுக் குழப்பம். புரியாத குதர்க்கம்.

கேளிக்கையும், கொண்டாட்டங்களும் ததும் பும் வாழ்வும், கேமராக்கள் முன்பு நடிப்புமாக கனவுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்யும், கற்பனை உலகின் வியாபாரிக்கு கொள்கையைக் கேட்டால் தலை சுத்தத்தானே செய்யும். திரைப்படம் என்ற பெயரால் ஆயிரமாயிரம் கோடியாய் அடிக்கும் கொள்ளை தானே அவரது கொள்கை.

தமிழகத்தில் தலைமைக்கு வெற்றிடமா…?

சட்டப்பேரவை உறுப்பினராக, சென்னை மாநகரின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயராக, உள்ளாட்சித்துறை அமைச்சராக, துணை முதலமைச்சராக தனது ஆட்சி நிர்வாகத்திறனை பலவகைகளிலும் செயலாற்றல் மூலம் நிறுவிக் காட்டியவர்.

சென்னையை எழில் மிகு நகரமாக்கி, அதன் போக்குவரத்து நெரிசல் குறைய பல்வேறு பாலங்களைக் கட்டியவர்.

எம்ஜிஆர் காலத்தில் இருந்தே உயிரற்ற ஜடமாக்கி படுக்கையில் வீழ்த்தப்பட்டிருந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு மீண்டும் உயிர் கொடுத்தவர்.

கடந்த 2016 முதல் வலிமையுள்ள எதிர்க்கட்சியின் தலைவராக, தற்குறி ஆட்சியின் தடுமாற்றங்கள் அனைத்தையும் சுட்டிக் காட்டி, தட்டிக் கேட்கும் தலைவனாக பீடு நடை போட்டுக் கொண்டிருப்பவர்.

இத்தனை நெடிய பயணமும், நீண்ட வரலாறும் கொண்ட தலைவன் இருக்கையில், தமிழகத்தில் தலைமைக்கு எங்கிருந்து வந்தது வெற்றிடம்?

தமிழக மக்கள் வேறு எந்தத் தலைவருக்காகவும் இங்கே ஏங்கிக் காத்திருக்கவில்லை. அதற்கு தேவையும் இல்லை.

பாஜகவின் வேலைத்திட்டத்தை நிறைவேற்றும் பணியாளாக ரஜினி பேசுகிறார் என்பது தமிழ் மண்ணின் பிஞ்சுகளுக்குக் கூட புரிந்த அரசியல் தான்.

எனினும், ஊடகங்கள் அனைத்தும் ரஜினி என்றால் காவடி எடுத்துச் சென்று, அவர் உதிர்க்கும் உயிரற்ற வார்த்தைகளைக் கூட ஒன்று விடாமல், சிந்தாமல், சிதறாமல் பிடித்து ஒளிபரப்புகின்றனவே…

எம்ஜிஆருடன் தன்னை ஒப்பிட்டுக் கொள்கிறார் ரஜினி.

திமுக எனும் திராவிடப் பண்ணையில் செழித்து வளர்ந்த ஆலமரம் எம்ஜிஆர். அதனால் தான் அரசியலில், நடிகர் என்ற தன்மையை தாண்டி, தலைவராக அவரால் தரமுயர முடிந்தது.

திரையுலகில் எம்ஜிஆர் கொடிகட்டிப் பறந்த காலம் என்கிறார்களே… அந்தக் கொடிகள் அனைத்தும் திமுக கொடிகள்தானே… ரசிகர்களாக அவற்றைக் கட்டிப் பறக்க விட்டவர்களும் திமுக தொண்டர்கள்தானே…

ரசிகர் மன்றங்களில் இருந்தே அரசியலைத் தொடங்கி நடத்தி வந்தவர் எம்ஜிஆர். அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்களிடமிருந்தும், மற்றொரு புறம் தனது ரசிகர்களிடமிருந்தும் அரசியலைக் கற்றவர் அவர்.

ஆந்திராவில், அந்த மண்ணின் மக்களால் ராமனாகவும், கிருஷ்ணனாகவும் வழிபடப்பட்ட என்.டி.ராமாராவாலேயே எம்ஜிஆரைப் போல் தாக்குப் பிடிக்க முடியவில்லை. தன் மருமகன் சந்திரபாபு நாயுடுவாலேயே மிக எளிதாக வீழ்த்தப்பட்டார் என்டிஆர்.

காரணம்… எம்ஜிஆர் கற்ற அரசியல் குருகுலம் போன்ற பாசறை என்டிஆருக்கு வாய்த்திருக்கவில்லை.

தமிழகத்தை கபளீகரம் செய்வதற்காக பாஜக தரிக்கும் கபட வேடம்தான் ரஜினி என்பதை எங்கள் வீட்டு இளந்தளிர்களும் அறியும்.

தன்னுரிமை உணர்வு கொண்ட தமிழ்நாட்டு மக்கள், இனி எப்போதும் மண்ணுரிமையை விட்டுத் தந்து ஏமாற மாட்டார்கள்.

தமிழக மக்களுக்கு கல்வி கற்றுக் கொடுக்க வேண்டுமாம். ரஜினி சொல்கிறார்.

பெரியாரும், அண்ணாவும், கலைஞரும் எங்களுக்கு நிறையவே சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். உங்களுக்கும், உங்களை ஏவி விடுவோருக்கும் நாங்கள் பாடம் எடுக்கிறோம், வாருங்கள்.

இந்தியாவின் பிற மாநிலங்களை விட தமிழகம் அரை நூற்றாண்டுகள், அறிவாலும், ஆளுமையாலும், நாகரிகத்தாலும், கட்டமைப்பாலும் முன்னேறி இருப்பது அவர்களுக்கு எரிச்சலைத் தருகிறது.

அதனால் தான், இயற்கைப் பேரிடர் உருவாக காரணமான செயற்கை பேரிடர் திட்டங்கள் அனைத்தையும் தமிழகத்தில் கொண்டு வந்து குவித்து, இந்த மண்ணையும், மக்களையும் அழிக்கப் பார்க்கிறார்கள்.

அதற்கு மற்றவற்றை விட ரஜினி என்ற வேடம் அவர்களுக்கு வசதியாக இருக்கிறது.

கபாலி என்றும், காலா என்றும், 2.0 என்றும் எமது மக்களை பிரம்மாண்ட புன்னகையால் கூறு போட்டு வெவ்வேறு வடிவங்களில் வந்து விலைக்கு வாங்கிவிடத் துடிக்கிறது பாஜக பரிவாரம்.

ஆனால், அவர்களின் அந்தக் கொடூரத் திட்டம் இனி கைகூடாது.

தமிழர்கள் நடிகர்களை தலைவர்களாக பார்த்த காலம் மலையேறி விட்டது.

கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக அவர்கள் அனுபவித்த துயரங்கள் ஆறாத வடுவாகி, மாறாத பாடங்களைச் சொல்லித் தந்திருக்கின்றன.

மிகச் சரியாகவே சொல்லி இருக்கிறார் ரஜினி. திரைப்படம் எனைப் பொறுத்தவரை பொழுதுபோக்குதான் என்று. தனது பொழுது போக்கிற்காக தமிழர்களின் வாழ்வைப் பறித்த குரூரத்தை அவரே ஒப்புக் கொண்டிருக்கிறார்.

அப்படிப் பட்ட ரஜினிதான் சொல்கிறார், தமிழகத்தி்ல் தலைமைக்கு வெற்றிடம் ஏற்பட்டு விட்டதாக…

நீங்கள் பார்ப்பது வெற்றிடமல்ல ரஜினி. தமிழர்களின் மூச்சுக்காற்று நிறைந்திருக்கும் பெரு வெளி.  அதற்குள்ளே தங்களுக்கான தலைவனை அவர்கள் என்றோ தேர்ந்தெடுத்து பத்திரப்படுத்தத் தொடங்கி விட்டார்கள்.

உங்களுக்கு எதற்காக வீண் சிரமம். உங்கள் அடுத்த படத்திற்கான வேலைகளை நிம்மதியாக தொடருங்கள்.

எங்களுக்கு ஏற்கனவே தலைவன் இருக்கிறான். இங்கே எந்த வெற்றிடமும் இல்லை.

50 ஆண்டுகளுக்கும் மேலாக எங்களுடன் கட்டிப் புரண்டு உருண்டு கொண்டிருக்கும் தலைவன். அவனுக்கு எங்களைத் தெரியும், அவனை எங்களுக்கும் புரியும். சரியோ.. தவறோ… அது அவனுக்கும் எங்களுக்குமானது…

இடையில் நீங்கள் எதற்கு… வேண்டாம். அரசியல் வேடம் உங்களுக்கு பொருந்தவில்லை. விட்டுவிடுங்கள் ரஜினி.

 

 

 

 

 

திமுக தலைவர் ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்துப் பெற்ற மாற்றுத்திறனாளிகள்

மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி இல்லை: உச்சநீதிமன்றம் திட்டவட்டம்

Recent Posts