குளிர்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் அதிமுக எம்பிக்கள் கூட்டம் ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்தது.
மத்தியில் ஆளும் பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் நல்ல உறவு உள்ளது. ஆனாலும் தமிழகத்துக்கான ஒதுக்கீடுகள், தமிழகத்துக்கான திட்டங்கள்,
மேகதாது அணை போன்ற தமிழக உரிமைப் பிரச்சினைகளில் மத்திய அரசு பாராமுகமாகவே உள்ளது. அதில் அதிமுக அழுத்தம் கொடுப்பதில்லை என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டாக உள்ளது.
நாடாளுமன்ற மூன்றாவது பெரிய கட்சியாக மாநிலங்களவை, மக்களைவை இரண்டிலும் சேர்த்து 50 எம்பிக்களுடன் இருக்கும் அதிமுகவின் தேவை குளிர்கால கூட்டத்தொடரில் பாஜகவுக்கு மிக அவசியம்.
ஆனால் தமிழகத்தின் கஜா புயல் நிவாரண நிதியில் கேட்டதில் 5 சதவிகிதம்கூட கொடுக்காமல் மத்திய அரசு இருப்பதும்,
மேகதாது அணைப்பிரச்சினையில் கர்நாடகாவுக்கு ஆதரவாக நிலை எடுப்பதும் கடும் விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது.
இந்நிலையில் தற்போது கூட உள்ள குளிர்கால கூட்டத்தொடர் களைக்கட்டும். அதில் அதிமுகவின் பங்களிப்பு எப்படி இருக்கும் என்பது அனைவரின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.
இந்நிலையில் நாடாளுமன்றத்தில் அதிமுக எம்பிக்கள் செயல்பாடு குறித்த ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இதில் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தம்பிதுரை கலந்துக் கொள்ளவில்லை.
இதுகுறித்து அதிமுக சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:
“நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடர் வரும் 11.12.2018 முதல் தொடங்குவதை முன்னிட்டு, அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும்,
முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில், தலைமைக் கழகத்தில் இன்று மாலை நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடரில்,
கட்சியின் நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து,
ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆலோசனை வழங்கினார்கள்.”
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.