கஜா புயல் பாதிப்பால் டெல்டா மாவட்டங்கள் கடும் இழப்பை சந்தித்துள்ளன.
இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட 1008 குடும்பங்களுக்கு கவிஞர் வைரமுத்து ஆடுகளை வழங்கும் நிகழ்ச்சி தஞ்சை மாவட்டம் வல்லத்தில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய வைரமுத்து, உங்கள் கைகளைப் பிடித்துக் கொண்டு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன்.
யாரும் உயிரை மாய்த்துக் கொள்ளக் கூடாது. கஜா புயலை கணக்கெடுக்க வந்த மத்தியக் குழுவினர் கால்களில் விழுந்து, சில பேர் கண்ணீர் விட்டனர்.
யாரும், யார் கால்களிலும் விழ வேண்டியதில்லை. கேட்பது உங்கள் உரிமை. கொடுப்பது அவர்கள் கடமை. இதுவரை ஒதுக்கப்பட்ட நிதி போதாது.
இன்னும் பெருந்தொகை வேண்டும்.
விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கும் சமூகம் மிகவும் இரக்கத்திற்குரியது.
எல்லாவற்றையும் இழந்துவிட்டால் கிராமத்து மக்களுக்கு ஏது வாழ்க்கை? எதை இழந்தாலும் நம்பிக்கை இழக்காதீர்கள்.
சமுதாயத்தில் ஈரம் இன்னும் வற்றிவிடவில்லை என்று கூறினார்.