செந்தில் பாலாஜி திமுகவில் நாளையே இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி.
இவர் 2016 சட்டமன்ற தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஜெயலலிதா மறைவிற்கு பின், டிடிவி அணியில் சேர்ந்து கொண்டார்.
இதையடுத்து பழனிசாமி அரசுக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி, செந்தில் பாலாஜி உட்பட 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் அமமுக தலைமை மீது சமீப காலமாக செந்தில் பாலாஜிக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அரசியல், குடும்பம் என அனைத்திலும் தாமே எல்லாம் என்கிற எண்ணத்தில் டிடிவி தினகரன் வலம் வருவதாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் அவரிடம் இருந்து ஒவ்வொருவராக விலகி வருவதாக கூறப்படுகிறது.
திமுகவில் இணைகிறாரா அதிமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி!
இந்த சூழலில் தான் செந்தில் பாலாஜி திமுகவில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இதுதொடர்பாக அக்கட்சி தலைமை உடன் பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
கரூர் மாவட்ட செயலாளர் நன்னியூர் ராஜேந்திரனை நீக்கிவிட்டு, அந்த இடத்தில் செந்தில் பாலாஜியை திமுக நியமிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இவருடன் பாப்பிரெட்டிப்பட்டி பழனிசாமி உள்ளிட்ட 6 தகுதி நீக்க எம்.எல்.ஏக்களையும் அழைத்துக் கொண்டு திமுகவிற்கு செல்ல இருப்பதாக முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக திமுக கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசா உள்ளிட்டோருடன் செந்தில் பாலாஜி ஆலோசனை நடத்தியுள்ளார். அதற்கு ஆதாரமாக புகைப்படம் ஒன்றும் தற்போது வெளியாகியுள்ளது.
டிடிவி அணியில் இருக்கும் தகுதி நீக்க எம்.எல்.ஏக்களை திமுகவில் சேர்க்கும் முயற்சியில் அன்பில் பொய்யாமொழி ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
வரும் 16ஆம் தேதி, சென்னையில் கருணாநிதி சிலை திறப்பு நிகழ்வின் போது, செந்தில் பாலாஜி திமுகவில் இணைய இருப்பதாக முன்பு கூறப்பட்டது.
ஆனால் அவர் நாளையே திமுகவில் சேர உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில் அமமுகவின் தங்கதமிழ்ச்செல்வன், செந்தில் பாலாஜி திமுகவில் சேர மாட்டார். அது தவறான தகவல் என இன்றும் மறுப்பு தெரிவித்துள்ளார்.