அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை இன்று மாலை திறப்பு: சோனியா , ராகுல் , பல்வேறு மாநில முதல்வர்கள் பங்கேற்பு..

மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலையை சென்னை அண்ணா அறிவாலயத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி இன்று மாலை திறந்து வைக்கிறார்.

தொடர்ந்து திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடக்கிறது. சிலை திறப்பு விழா மற்றும் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பல்வேறு மாநில முதல்வர்கள் பங்கேற்கின்றனர்.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 8 அடி உயர வெண்கலச் சிலையை திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த புதுப்பேடு கிராமத்தில் தீனதயாளன் என்ற சிற்பி மற்றும் அவரது குழுவினர் வடிவமைத்துள்ளனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியபடி, சிலையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை இன்று திறக்கப்படுகிறது.

சிலை திறப்பு விழாவில் பங்கேற்க வருமாறு, அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய அரசியல் பிரமுகர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று ஏற்கெனவே அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில், சிலை திறப்பு விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து, ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் திமுக சார்பில் பிரம்மாண்ட பொதுக் கூட்டமும் நடைபெறுகிறது.

ரஜினி, கமல் பங்கேற்பு

அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலையை நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி திறந்து வைக்கிறார்.

இந்த விழாவில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி மற்றும் தேசிய, தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

மேலும், சிலை திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்தும், பொதுக்கூட்டத்தில் நடிகர் கமல்ஹாசனும் பங்கேற்க உள்ளனர்.

பாஜகவுக்கு அழைப்பு விடுக்கப்படாததால், பாஜக தலைவர்கள் பங்கேற்கவில்லை.

பல்வேறு முக்கிய தலைவர்கள் பங்கேற்பதால் சிலை திறப்பு மற்றும் பொதுக்கூட்ட வளாகங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பிரம்மாண்ட மேடை

ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடக்கும் பொதுக் கூட்டத்துக்கு, அண்ணா அறிவால யம் போல காட்சியளிக்கும் பிரம்மாண்ட மேடை அமைக்கப் பட்டுள்ளது.

சென்னை வரும் சோனியா காந்தி, மெரினா கடற்கரையில் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்துக்குச் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பிறகு கூட்டத்தில் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது.

உற்சாக வரவேற்பு

சென்னை வரும் சோனியா காந்திக்கு காங்கிரஸ் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னை விமான நிலையத்தின் 5-வது நுழைவுவாயில், கிண்டி கத்திப்பாரா, சைதாப்பேட்டை, நந்தனம், எஸ்ஐஇடி கல்லூரி, கதீட்ரல் சாலை, அண்ணா சாலை, வாலாஜா சாலை உட்பட மொத்தம் 19 இடங்களில் காங்கிரஸ் கட்சிக் கொடி மற்றும் பதாகைகளுடன் நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு நின்று வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

10,000 போலீஸார்

தேசிய, மாநில தலைவர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள் மட்டுமின்றி, திமுக, காங்கிரஸ் மற்றும் தோழமைக் கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் வருவதால்,

சென்னையில் கூட்ட நெரிசல், போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

நெரிசலை தடுப்பது, பாதுகாப்பு வழங்குவது குறித்து போலீஸ் அதிகாரிகளுடன் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று ஆலோசனை நடத்தினார்.

போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் அருணுடனும் ஆலோசித்தார். பாதுகாப்பு பணியில் 10 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கருணாநிதி சிலை திறக்கப்படும் தேனாம்பேட்டை அறிவாலயம், ராயப்பேட்டையில் பொதுக் கூட்ட வளாகம், மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடம் ஆகிய இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட் டுள்ளது. உளவு பிரிவு போலீ ஸாரும் கண்காணிப்பை தீவிரப் படுத்தியுள்ளனர்.

குடிநீருக்கு கட்டணம் : மத்திய அரசு திரும்ப பெற ராமதாஸ் கோரிக்கை ..

பெர்த் டெஸ்ட் : 25-வது சதத்தை பூர்த்தி செய்தார் கோலி..

Recent Posts