சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பார்வதி தேவியுடன் கூடிய மயில் கற்சிலை மாற்றப்பட்டது தொடர்பான புகாரில் கைது செய்யப்பட்ட அறநிலையத்துறை பெண் அதிகாரி திருமகள் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
மயிலாப்பூரில் உள்ள பழமையான கபாலீசுவரர் கோவிலில் கடந்த 2004ஆம் ஆண்டு நடந்த கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அப்போது, அங்கிருந்த ராகு, கேது மற்றும் மயில் சிலைகள் சேதமுற்றிருப்பதாகக் கூறி, அவற்றை மாற்ற முடிவு செய்யப்பட்டது.
இதற்கு பக்தர்கள் தரப்பில் எதிர்ப்பு எழுந்த நிலையிலும், இரவோடு இரவாக மயில் சிலை மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மாற்றப்பட்ட சிலையானது வெளிநாட்டில் விற்பனை செய்யப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இதுகுறித்து சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிலை மாற்றப்பட்டதாகக் கூறப்படும் கால கட்டத்தில் அறநிலையத்துறை கூடுதல் ஆணையராக இருந்தவர் திருமகள் என்பதால் அவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் அவரை சென்னையில் வைத்து சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.
ஆனால் தம்மை கைது செய்தால் உடனடியாக ஜாமீன் வழங்க வேண்டும் என்று திருமகள் உச்சநீதிமன்றத்தில் உத்தரவு பெற்றுள்ளார்.
இந்நிலையில் சிலை கடத்தல் வழக்குகளை ஒருங்கிணைத்து விசாரிக்கப்படும் கும்பகோணம் நீதிமன்றத்துக்கு கொண்டுவரப்பட்ட அவர், நீதிபதி ஐயப்பன் பிள்ளை முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.
உச்சநீதிமன்ற ஆணை பெற்றுள்ளதாலும், இரவு நேரத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாலும், இன்று நீதிமன்ற அலுவல் நேரத்தில் திருமகளை ஆஜர்படுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து, அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அவர் தங்க வைக்கப்பட்டார்.