சிரியாவில் இருந்து அமெரிக்க பாதுகாப்பு படை வாபஸ் பெறப்படுவதாக டிரம்ப் அறிவித்த மறு நாளே,
பாதுகாப்புத்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து ஜேம்ஸ் மேட்டீஸ் விலகியிருப்பது சர்வதேச அளவில் உன்னிப்பாக பார்க்கப்படுகிறது.
சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் அரசு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடக்கிறது.
இதற்கு மத்தியில், உலகளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்திய ஐ.எஸ். பயங்கரவாதிகள் அங்கு கால் பதித்து ஆக்கிரமிக்க தொடங்கினர்.
அவர்களை வீழ்த்துவதற்காக அமெரிக்க படைகள் அங்கு சென்றன. அங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் வசமிருந்த பல நகரங்கள் மீட்கப்பட்டு விட்டன.
இந்த நிலையில் அங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகளை தோற்கடித்து விட்டதாக கூறி, அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்படுவதாக அதிபர் டிரம்ப் நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிட்டார்.
இது அமெரிக்க கூட்டாளிகளுக்கும், எம்.பி.க்களுக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. விமர்சனங்களையும் ஏற்படுத்தி உள்ளது.
இருப்பினும் சிரியாவில் இருந்து அமெரிக்க படைகளை வாபஸ் பெறுவது தொடங்கிவிட்டது என வாஷிங்டன் வெள்ளை மாளிகை குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், ஜேம்ஸ் மேட்டீஸ் பாதுகாப்புத்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து விலக விருப்பம் தெரிவித்து, டொனால்டு டிரம்ப்புக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதேபோல், டிரம்ப் வெளியிட்டுள்ள டுவிட் பதிவில், வரும் பிப்ரவரி மாத இறுதியோடு ஜேம்ஸ் மேட்டீஸ் தனது பணியில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக தெரிவித்துள்ளார்.