வங்கிகளில் குறைந்தபட்ச இருப்பு பராமரிக்காதது, ஏடிஎம்களில் நிர்ணயிக்கப்பட்ட முறை தவிர்த்து அதிகமான முறை பணம் எடுத்தல் ஆகியவற்றின் மூலம் கடந்த 42 மாதங்களில் வாடிக்கையாளர்களிடம் இருந்து அபராதமாக ரூ.10 ஆயிரத்து 391 கோடியை 21 அரசு வங்கிகள் வசூலித்துள்ளது தெரியவந்துள்ளது.
அதிலும் நடப்பு நிதியாண்டு (2018-19) ஏப்ரல் முதல் அக்டோபர் வரை ரூ. ஆயிரம் கோடியை வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் ரூ.850 கோடிக்கும் அதிகமாக ஏடிஎம்களை அதிகமாக பயன்படுத்தி பணம் எடுத்ததன் மூலம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இதில் வாடிக்கையாளர்களிடம் இருந்து அபராதத்தொகையை அதிகபட்சமாக எஸ்பிஐ வங்கி ரூ.2,894 கோடி வசூலித்துள்ளது.
வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் குறைந்த இருப்பு பராமரிக்காவிட்டால் அவர்களுக்கு வங்கிகள் குறைந்தபட்ச அபராதம் விதிக்கின்றன. ஆனால், இந்த அபராதத் தொகை கடந்த சில ஆண்டுகளாக வங்கிகள் அதிக அளவு வசூலிக்கத் தொடங்கின.
கடந்த 2012 முதல் 2016-ம் ஆண்டு வரை எஸ்பிஐ வங்கி அபராதம் வசூலிப்பதை நிறுத்திய நிலையில் மீண்டும் நடைமுறைப்படுத்தியது. ஆனால், ஜன்தன் வங்கிக்கணக்குக்கு மட்டும் அபராதம் விதிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. 2017-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் மீண்டும் அபராதம் விதிக்கும் நடைமுறையை அறிமுகப்படுத்திய எஸ்பிஐ வங்கி, வாடிக்கையாளர்களின் எதிர்ப்பால் அபராதத்தொகையை அதே ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி குறைத்தது. முதலில் ரூ.5 ஆயிரம் குறைந்த இருப்பு என்றும் எதிர்ப்புக்குப் பின் ரூ.3 ஆயிரமாகவும் குறைத்தது.
இந்நிலையில், கடந்த மூன்றரை ஆண்டுகளாக வங்கிகள் குறைந்தபட்ச இருப்பு பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் இருந்தும், கணக்கு வைத்துள்ள ஏடிஎம்கள் நிர்ணயிக்கப்பட்ட முறைகளுக்கு அப்பால் பணம் எடுத்தமைக்காகவும் விதிக்கப்பட்ட அபராதத் தொகை குறித்து நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சகம் அளித்த தகவலின்படி கடந்த 2015-16-ம் ஆண்டில் இருந்து 2019-19-ம் ஆண்டுவரை வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ.6,246 கோடியை அரசு வங்கிகள் அபராதமாக வசூலித்துள்ளன.
கணக்கு வைத்துள்ள வங்கி தவிர்த்து வேறு வங்கி ஏடிஎம்களில் பணம் எடுத்தால் விதிக்கப்படும் அபராதம் மூலம் ரூ.4,145 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்றரை ஆண்டுகளில் ‘மினிமம் பேலன்ஸ்’ பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் இருந்து அதிகபட்சமாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) ரூ.2 ஆயிரத்து 894 கோடியும், பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.493 கோடியும், கனரா வங்கி ரூ.352 கோடியும் அபராதமாக வசூலித்துள்ளன. சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா ரூ. 348 கோடியும், பேங்க் ஆப் பரோடா ரூ.328 கோடியும் அபராதமாக வசூலித்துள்ளன.
வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு அளித்துள்ள இலவச பரிமாற்றம் தவிர்த்துக் கூடுதலாக முறை பணம் எடுத்தால் அபராதம் விதிக்கின்றன. அந்த வகையில், வாடிக்கையாளர்களிடம் இருந்து எஸ்பிஐ வங்கி ரூ.1,554 கோடியும், பேங்க் ஆப் இந்தியா ரூ.464 கோடியும், பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.323 கோடியும் அபராதமாக வசூலித்துள்ளன.
மேலும், யூனியன் பேங்க் ஆப் இந்தியா ரூ.241 கோடியும், பேங்க் ஆப் பரோடா ரூ.183 கோடியும் அபராதமாக வசூலித்துள்ளன. இவ்வாறு நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது
அரசு வங்கிகள் வசூலித்த அபராதங்களின் மதிப்புகள், விவரங்கள் மட்டுமே அளிக்கப்பட்டன, தனியார் வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் இருந்துவசூலித்த அபராத விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.