“கதவு” சந்தானத்தின் வண்ணக் கதவுகள் — கடந்த காலத்தின் வாசல்: மேனா.உலகநாதன்

ஓவியர் கதவு சந்தானம் (நன்றி – தி இந்து)

கடந்து செல்லும் காலத்தின் சுவடுகளை காட்சிகளாக்கி, கண்முன் விரிய வைக்கும் ஜால வித்தை, ஓவியர்களுக்கு மட்டுமே சாத்தியம்.

கதவு சந்தானம் என ஓவிய உலகில் புகழப்படும் சந்தான கிருஷ்ணன் அதனைத் தொடர்ந்து சாதித்து வருகிறார்.

புழக்கத்தில் இருந்து காணாமல் போன பழைய வீடுகளின் கதவுகளை, ஓவியமாகத் தீட்டி, வண்ணங்களின் வழியாக, நமது புராதன  வாழ்வியல் அடையாளங்களுக்கு புத்துயிரூட்டும் மகத்தான கலைப்பணியைச் செய்து வருகிறார் கதவு சந்தானம்.

அவை கதவுகள் மட்டுமா…

நவீனத்தால் நம்மிடமிருந்து பலவந்தமாக பறித்துச் செல்லப்பட்ட பண்பாட்டு அடையாளங்கள் குறித்த வண்ணமயக் காவியங்கள்.

முகப்பு, ஆள்வீடு, நடுக் கூடம், முற்றம், சுற்றுக் கட்டு வளைவு, அடுப்படி, புழக்கடை என ஒரு வீடு என்பது எத்தனை கதவுகளைக் கொண்டதாக இருந்தது…

மனிதர்களின் மனத்தைப் போலவே பல கட்டுகளையும், கதவுகளையும் கொண்டதாகத் தானே அவனது வீடுகளும் இருந்தன.

ஒவ்வொன்றாக தன் கதவுகளை மூடிக் கொண்டு வெளிக்கெட்டாத வெளிக்குள் ஓடி, ஓழிந்து உள்உறைந்து கிடக்கும் அந்தக் காலத்தின் மீது வண்ணங்களை வார்த்து வெளிச்சமிட்டுக் காட்டி இருக்கிறார் சந்தானம்.

கடந்த 18 ஆண்டுகளாக அவர் வரைந்து வரும் கதவுகளில், வண்ணங்கள் மூலமாக உறைந்து கிடக்கும் காலம் உயிர் பெற்று பேசுகிறது.

சென்னை எழும்பூரில் ஞாயிற்றுக் கிழை (25.12.2008) நடைபெற்ற கண்காட்சியில், பார்வைக்கு வைக்கப் பட்டிருந்த கதவு சந்தானத்தின் ஓவியங்கள், மனித மனத்தின் அடி ஆழத்தில் பாழடைந்து உறைந்து கிடக்கும் பழைய வீடுகளின் கதவுகளை சத்தமில்லாமல் திறந்து வைத்தன.

திரைப்பட போஸ்டர்கள் ஒட்டப்பட்ட காரை பெயர்ந்த சுவரை ஒட்டிய கதவுகள், சாமி படங்கள் வரிசைப் படுத்தப்பட்ட சூரியப்பலகையுடன் கூடிய நிலைக் கதவுகள் என… கதவு சந்தானத்தின் தூரிகைகள்,  பார்வையாளர்களை, அவர்களது மூதாதையர்களின் பழைய வீடுகளுக்குள் அழைத்துச் சென்று ஆசுவாசப் படுத்துகின்றன.

கடந்து போன காலத்திற்குள் பிரவேசிப்பதற்காக, தனது வண்ணக் கதவுகளை, திறந்து வைத்து வரவேற்கிறார் ஓவியர் சந்தான கிருஷ்ணன்.

  • மேனா. உலகநாதன்
  • படங்கள்: சுந்தரபுத்தன்

தென் தமிழக கடலோர பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம்..

வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக், ட்விட்டர் நிறுவனங்களுக்கான விதி : மத்திய அரசு திட்டம்…

Recent Posts