அசாமில் கட்டப்பட்டுள்ள மிகப்பிரம்மாண்டமான ஈரடுக்கு பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.
அசாம் மாநிலம் திப்ரூகர் மற்றும் தேமஜி மாவட்டங்களை இணைக்கும் விதத்தில் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே சுமார் 5 கிலோ மீட்டர் நீளத்திற்கு பாலம் கட்ட 1997 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் தேவகவுடா அடிக்கல் நாட்டினார். பிரம்மபுத்திரா நதியில் ஏற்படும் வெள்ளப்பெருக்கால் கட்டுமானப் பணிகள் நிறைவடைவதில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அருணாச்சலப் பிரதேச எல்லையை ஒட்டி 3200 கோடி ரூபாய் மதிப்பில் கட்ட திட்டமிடப்பட்ட இந்தப் பாலம் 5900 கோடி ரூபாய் செலவில் ரயில் மற்றும் சாலை போக்குவரத்துக்காக ஈரடுக்கு பாலமாக தற்போது கட்டி முடிக்கப்பட்டுள்ளது. போகிபீல் எனப்படும் அந்த பாலத்தை வாஜ்பாய் பிறந்த நாளான இன்று பிரதமர் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
#WATCH Prime Minister Narendra Modi at Bogibeel Bridge, a combined rail and road bridge over Brahmaputra river in Dibrugarh. #Assam pic.twitter.com/LiTR9jO5ks
— ANI (@ANI) December 25, 2018
பின்னர் பாலத்தில் சிறிது தூரம் நடந்து சென்ற பிரதமர், அருகில் இருந்த மக்களை நோக்கி உற்சாகமாக கையசைத்தார். பாலத்தில் காரில் சென்றும் பிரதமர் பார்வையிட்டார்.
சீன எல்லை அருகே அமைந்துள்ளதால் பாதுகாப்பு காரணங்களுக்காக ராணுவ டேங்குகள் சென்றாலும், போர் விமானங்கள் தரையிறங்கினாலும் தாங்கும் வல்லமையுடன் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது.
இந்த பாலத்தில் முதல் போக்குவரத்தையும், பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.