சபரிமலைக்கு பெண்கள் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கேரளாவில், இன்று ( ஜன. 3) நடக்கும் முழு அடைப்பு போராட்டத்தின் போது, கட்டடங்களுக்கு தீ வைக்கப்பட்டன.
பல இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடந்து வருகிறது.
நேற்று (ஜன.2) திருவனந்தபுரம் அருகே, நெய்யாற்றின்கரையில் இருந்து, 200 கி.மீ., துாரம் நடந்தே சபரிமலை சென்ற, சில பக்தர்கள், பெண்கள் வந்ததால், சபரிமலையின் புனிதம் கெட்டு விட்டதாக கூறி, இருமுடி கட்டை,
எருமேலி சாஸ்தா கோவிலில் வைத்து விட்டு, ஊர் திரும்பினர். பெண்கள் சபரிமலை வந்ததை கண்டித்து இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை மாநிலம் தழுவிய பந்த்திற்கு பல்வேறு அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.
இன்று, ( ஜன. 3)கடைகள் திறக்கப்படாது என்றும், வாகனங்கள் இயங்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பந்த் காரணமாக கேரளாவில் நடக்க உள்ள பள்ளி அரையாண்டு தேர்வுகள் மற்றும் கல்லூரி தேர்வுகளும் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.
கோழிக்கோடு, கண்ணூர் மாவட்டங்களில் போராட்டக்காரர்கள் வாகனங்களை மறித்துள்ளனர். சாலையில் டயர்களை எரித்தனர்.
ஆட்டோக்கள் அடித்து நொறுக்கப்பட்டன. பாலக்காட்டில் உள்ள வெண்ணக்காரா என்ற இடத்தில் உள்ள ஈஎம்எஸ் மெமோரியல் நூலக கட்டடத்திற்கு தீவைத்தனர்.
தவனூர், மலப்புரம் மாவட்டங்களில் உள்ள கம்யூனிஸ்ட் அலுவலகத்திற்கும் தீவைக்கப்பட்டது. பந்தளத்தில் கம்யூனிஸ்ட் தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
கோழிக்கோட்டில் பல இடங்களில் கல்வீச்சு சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
பஸ்கள் எதுவும் இயக்கப்படவில்லை. ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் மட்டுமே இயங்குகின்றன. முழு அடைப்பு போராட்டத்தை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
முழு அடைப்பு தொடர்ந்து கேரளா செல்லும் தமிழக வாகனங்கள், எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன.
கோவையில் உள்ள கேரள பஸ்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள கேரள சுற்றுலா அலுவலகத்தின் மீது மர்ம நபர்கள் நேற்று இரவு கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
இதனையடுத்து அந்த அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சபரிமலைக்கு பெண்கள் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று பந்தளத்தில் பேரணி நடந்தது.
அதில் கம்யூனிஸ்ட் தொண்டர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் படுகாயமடைந்த சந்திரன் உன்னிதன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது தொடர்பாக போலீசார் 2 பேரை கைது செய்துள்ளனர்.
பரவூர் என்ற இடத்தில் போலீசாரை தாக்கியதாக கூறி 5 பா.ஜ., தொண்டர்களை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.
ஐக்கிய ஜனநாயக முன்னணியும் , இன்று கறுப்பு நாளாக அனுசரித்து போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இதனால், பெரும்பாலான இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
கேரள செல்லும் கர்நாடக மாநில அரசு பஸ்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன