கழகக் கோட்டையாம் திருவாரூரில் கலைஞரின் புகழ்க் கொடியை நாட்டிடுவோம்: தொண்டர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம்

இடைத்தேர்தல் நடைபெறும் திருவாரூரில் கலைஞரின் புகழ்க் கொடியை நாட்டிட உழைக்குமாறு கட்சித் தொண்டர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்

கூறியிருப்பதாவது:

ஆங்கிலப் புத்தாண்டு 2019, நாம் அடுத்தடுத்து காணப்போகும் வெற்றிகளுக்கான ஆண்டாகப் பிறந்திருக்கிறது. முதல் வெற்றி காண்பதற்கான களமாக அமைந்திருக்கிறது நம் உயிர் நிகர் தலைவர் கலைஞரின் திருவாரூர் தொகுதி. மறைந்தும் மறையாமல் நம் நெஞ்சங்களின் துடிப்பாக வாழும் தலைவர் கலைஞர் அவர்கள் இயற்கை எய்தியதால் இடைத்தேர்தலைச் சந்திக்கிறது திருவாரூர். இரண்டு முறை தலைவர் கலைஞர் அவர்களை மாபெரும் வெற்றி பெற வைத்த தொகுதி.

இந்தியத் தேர்தல் சரித்திரத்தில் எவரும் நிகழ்த்திடாத சாதனையாக 13 முறை களம் கண்டு, அனைத்திலும் வெற்றி பெற்ற ஒரே அரசியல் தலைவர் நம் ஆருயிர்த் தலைவர் கலைஞர். 2011ஆம் ஆண்டு திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு 50ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2016ல் தமிழ்நாட்டிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் (68,326) வெற்றி பெற்றவர் என்ற சாதனையை அதே திருவாரூரில் படைத்தார் தலைவர் கலைஞர்.

மண்ணின் மைந்தரான கலைஞரை திருவாரூர் வாக்காளர்கள் தங்கள் நெஞ்சில் ஏந்தியிருக்கிறார்கள். கலைஞர் என்றால் திருவாரூர், திருவாரூர் என்றால் கலைஞர் என இரண்டையும் பிரிக்க முடியாத அளவுக்கு இரண்டறக் கலந்த உணர்வு இப்போதும் மக்கள் மனதில் மாறாமல் பசுமையாக இருக்கிறது. இத்தகைய சீரும் சிறப்பும் மிக்க திருவாரூர் இடைத்தேர்தல் களத்தில், கழகத்தின் வெற்றி வேட்பாளராக மாவட்டக் கழகச் செயலாளர் அருமைச் சகோதரர் பூண்டி கலைவாணன் அறிவிக்கப்பட்டுள்ளார். கலைவாணனின் தந்தை திரு கிருஷ்ணசாமி கழகச் செயல்வீரர். கலைவாணனின் சகோதரர் பூண்டி கலைச்செல்வன் மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருந்து கழகம் வளர்த்த மாவீரன். அவரைத் தொடர்ந்து கழகத்தைக் கட்டிக் காக்கும் பணியை மேற்கொண்டு வருபவர் கலைவாணன். திருவாரூரில் தலைவர் கலைஞர் போட்டியிட்ட இருமுறையும் மகத்தான வெற்றிக்கு உறுதுணையாக நின்று களப்பணியாற்றியவர்.

தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் தொடங்கி வெற்றி விழாக் கொண்டாட்டம் வரை ஒவ்வொரு நிகழ்வையும் மாநாடு போல நடத்திக் காட்டிய அருமையான ஆற்றலாளர். பொதுமக்கள் நலன் பேணும் ஆர்வம் நிறைந்த உள்ளத்துடன் கஜா புயல் நேரத்தில் களமிறங்கித் தொடர்ந்து தொண்டாற்றியவர். இனியவர் – எளியவர் – உள்ளத்தில் பணிவும் துணிவும் மிக்கவர் – ஊர் மக்களின் அன்புக்குரியவர். இத்தகைய பண்புடையவர்தான் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்.

வேட்பாளர் பெயர் கலைவாணன். எனினும், களத்தில் நிற்பவர் தலைவர் கலைஞரே! திருவாரூர் தொகுதியின் எத்திசை நோக்கினும் அத்திசையெல்லாம் தலைவர் கலைஞரே மின்னும் புன்னகையுடன் தெரிகிறார். 5 முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்று அன்னைத் தமிழ்நாட்டில் அரும்பெரும் சாதனைகள் நிகழ்த்திய தலைவர் கலைஞர் தன்னை ஈன்று புறந்தந்து பாலூட்டி வளர்த்து ஆளாக்கிய திருவாரூர் மீது எத்தகைய அன்பையும் பிடிப்பையும் பாசத்தையும் கொண்டிருந்தார் என்பதற்கு அவருடைய ஒவ்வொரு ஆட்சிக்காலத்திலும் அவர் நிறைவேற்றி வைத்திருக்கும்  திட்டங்களே கண்ணெதிரில் சாட்சியங்களாக இருக்கின்றன.

மாவட்டத் தலைநகர்

மத்தியப் பல்கலைக்கழகம்

அரசு மருத்துவக் கல்லூரி

அரசு கலை-அறிவியல் கல்லூரி

பேருந்து நிலையம்

புறவழிச்சாலை

புதிய பாலங்கள்

குடிநீர்த் தொட்டிகள்

அகலரயில் பாதை

ஆழித் தேரோட்டம்

கமலாலயம் திருக்குளம் சீரமைப்பு

ஆறு-வாய்க்கால் தூர்வாறுதல்

உள்கட்டமைப்பு வசதிகள்

தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து திட்டங்கள்

என திருவாரூரின் நிலையான அடையாளங்களாக விளங்கும் அனைத்தையும் உருவாக்கியும் மேம்படுத்தியும் தந்திருக்கிறார் தலைவர் கலைஞர். அவர் செய்த சாதனைகளுக்கு நன்றி செலுத்தும் வகையில்தான் இரண்டு முறையும் கட்சி பாகுபாடின்றி அவருக்கு வாக்குகளை வாரி வாரி வழங்கியிருக்கிறார்கள் திருவாரூர் தொகுதியின் அன்பு மக்கள்.

நன்றி பாராட்டும் நல்உள்ளம் கொண்ட திருவாரூர் வாக்காளர்களிடம் உங்களுக்காக உழைக்கவும் ஊழியம் ஆற்றவும் உத்தரவிடுங்கள் எனக் கலைஞரின் உடன்பிறப்பாகக் கேட்கிறார் கழக வேட்பாளர் கலைவாணன். தலைவர் கலைஞர் மேற்கொண்ட தொண்டறப்பணிகளைத் தொடரவும், விரைவில் அமையவிருக்கும் கழக ஆட்சியின் வாயிலாகத் திருவாரூருக்கும் தமிழ்நாட்டிக்கும் புதிய விடியல் ஏற்படவும் உதயசூரியனுக்கு வாக்களிக்கக் கோரி களமிறங்கியுள்ளார்.

கழகத்தின் வெற்றி உறுதி என்பதை திருவாரூர் வாக்காளர்கள் நமது வேட்பாளருக்கு அளிக்கின்ற வரவேற்பிலிருந்தே அறிய முடிகிறது. ஆளுந்தரப்பும் அதிலிருந்து பிரிந்த கிளைகளும் குலை நடுங்குகின்றன. அ.தி.மு.க. ஆட்சியில் திருவாரூர் தொகுதியின் வளர்ச்சிக்கு என்ன செய்தோம் என்று சொல்வதற்கு அவர்களிடம் ஏதுமில்லை. அதிகார துஷ்பிரயோகத்தையும் அராஜகமாகச் சேர்த்து வைத்திருக்கும் பணபலத்தையும் வைத்து தி.மு.கழகத்தின் வெற்றியைக் களவாடிவிடலாம் என கணக்குப் போடுகிறார்கள். தங்கள் சூதுக்கும் சூழ்ச்சிக்கும் டெல்லி எஜமானர்கள் முழு ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்பதே அவர்களின் ஒரே நம்பிக்கை.

அதனால்தான், கஜா புயல் பாதிப்புக்காக 50 நாட்களாக  நிவாரணம் கேட்டுப் போராடி வந்த டெல்டா மக்களின் பக்கம் முகம் திருப்பாத மத்திய அரசு 2018 டிசம்பர் 31 அன்று 1500 கோடி ரூபாய் நிவாரண நிதி ஒதுக்குவதாக அறிவிப்பு வெளியிடுகிறது. அந்த அறிவிப்பு வெளியான சில  மணி நேரங்களில் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலுக்கான அறிவிப்பை தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிடுகிறது.

தமிழ்நாட்டில் 20 தொகுதிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லை. இதில் 19 தொகுதிகள் அ.தி.மு.க. வெற்றி பெற்ற தொகுதிகள். அவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு, தி.மு.கழகம் வெற்றி பெற்ற தொகுதியான திருவாரூருக்கு மட்டும் இடைத்தேர்தல் என்ற அறிவிப்பு வெளியாவதன் சூட்சும மர்மம் என்ன என்பதை மக்கள் அறிவார்கள். தேர்தல் அறிவிப்பை வெளியிட்ட ஆணையம், புயல் நிவாரணம் வழங்குவதற்குத் தடையில்லை என ஆட்சியாளர்களுக்கு கடிதமும் எழுதுகிறது. இதைவிடப் பட்டப்பகல் பச்சை மோசடி வேறு ஏதாவது இருக்க முடியுமா?

திருவாரூரில் தி.மு.க.வை வீழ்த்தி விடலாம் என்றும் அதன் மூலம் நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் ஒரு மாயையை உருவாக்கலாம் என்றும் மத்தியிலும் மாநிலத்திலும் அதிகாரத்தில் இருப்பவர்கள் பகற்கனவு காண்கிறார்கள். அதற்குத் தேர்தல் ஆணையமும் ரகசியமாக உதவிடுகிறதோ என்ற சந்தேகம் அனைத்துத் தரப்பிலும் நிலவுகிறது. அதே நேரத்தில், அதிகாரத்தில் இருப்போரின் பகல் கனவு, உதயசூரியன் ஒளியால் ஒழிந்துபோகும் என்பது திண்ணம். அந்த வலிமை, திருவாரூர் களத்தில் கழகத்தினர் பளிச்செனக் காட்ட இருக்கும் உழைப்புக்கு மிக உண்டு.

ஜனவரி 28ந் தேதி வாக்குப்பதிவு. இடையில் இருப்பவை மூன்றே வாரங்கள். திருவாரூரில் இம்முறையும் தலைவர் கலைஞரே மீண்டும் போட்டியிடுகிறார் என்ற விழிப்புணர்வோடு நன்முறையில் செயலாற்றுவோம். சூழ்ச்சிகளைச் சுற்றிவளைத்து வெல்கின்ற வியூகம் வகுப்போம். கலைஞரைத் தங்கள் குடும்பத்தின் மூதாதையராக நினைத்துக் கொண்டாடும் திருவாரூர் தொகுதி மக்களிடம் உரிமையுடன் செல்வோம்! கலைஞர் ஆட்சியின் சாதனைகளையும் அ.தி.மு.க. அரசின் மோசடிகளையும் அடுக்கடுக்காக எடுத்துச் சொல்வோம்! தமிழ்நாட்டில் நல்லாட்சி மலர்ந்திட திருவாரூர் இடைத்தேர்தல் வெற்றி அச்சாரமாகட்டும் எனக் கூறி அவர்களின் மனங்களை வெல்வோம்! திருவாரூர் என்றென்றும் தி.மு.கழகத்தின் கோட்டை என்பதை ஜனவரி 31 வாக்கு எண்ணிக்கை நாளில் நிரூபித்திடும் வகையில் வெற்றிக் கொடியைப் பட்டொளி வீசி பறக்கச் செய்வோம். உதயசூரியனால் ஒளிவீசும் உயர்ந்த தமிழ்நாட்டை உருவாக்கிடுவோம்.

இவ்வாறு ஸ்டாலின் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

ஐந்து மாநிலங்களில் அகில இந்திய வானொலி நிலையங்கள் மூடல்

திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்க அனைத்து கட்சிகளும் கோரிக்கை…

Recent Posts