பிரதமர் மோடி வரும் 27 ம் தேதி மதுரை வர உள்ளதாக தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறுகையில்;
பிரதமர் மோடி, வரும் 27 ம் தேதி மதுரை வர உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துள்ளது.
அவருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்க திட்டமிட்டு உள்ளோம். மத்திய அரசு மூலம், தமிழகத்திற்கு பல திட்டங்கள் கிடைத்து வருகின்றன.
பிரதமர் மோடியின் மதுரை வருகை மூலம், தமிழகத்திற்கு மேலும் பல திட்டங்கள் கிடைக்க உதவும்.
பெரிய மாநாடாகவும், கட்சியின் பிரசாரமாகவும் அமையும். மோடி, தொண்டர்களை சந்திக்கவும் வாய்ப்பு உள்ளது. மோடியை சந்திக்க லட்சக்கணக்கான தொண்டர்களும் ஆர்வமாக உள்ளனர்.
திருவாரூர் தேர்தல் குறித்து நாளை(ஜன.,6) சொல்கிறேன். தற்போது, மோடியின் வருகை, லோக்சபா தேர்தலுக்கு தயார் செய்வது குறித்து கவனம் செலுத்தி வருகிறோம்.
கூட்டணி குறித்து முழுமையாக செயல்படவில்லை. ஆனால், தேர்தலில் நிச்சயம் கூட்டணி அமைத்து செயல்படுவோம்.
தேர்தலுக்கு இன்னும் அவகாசம் உள்ளது. இதனால், கவனமாக முடிவு எடுப்போம். 5 மாநில தேர்தலே அரையிறுதி கிடையாது.
ஒரு தொகுதி தேர்தல் எப்படி அரையிறுதியாக இருக்கும். திருவாரூர் தேர்தல் நிச்சயம் திருப்பத்தை தரும்.
திருவாரூர் தேர்தலை சந்திக்க திமுகவிற்கு தயக்கம் உள்ளது என்பது ஸ்டாலின் பேச்சு, கருத்தில் தெரிய வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மதுரை பயணத்தின் போது, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டல், தனுஷ்கோடி – ராமேஸ்வரம் இடையிலான ரயில் பாதை,
மதுரை – சென்னை இடையிலான அதிவே தேஜஸ் ரயில்சேவை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.