இந்தியாவில் கடந்த நான்கரை ஆண்டுகளாகச் சகிப்பின்மை நிலவுகிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 2 நாள் பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் நாட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு துணை அதிபர், பிரதமர் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தும் ஆகியோரை ராகுல் காந்தி சந்தித்துப் பேசினார்.
அதன்பின் துபாய் கிரிக்கெட் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த வெளிநாடு வாழ் இந்தியர்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்றார்.
அப்போது அவர் பேசியதாவது:
”ஐக்கிய அரபு அமீரகம் அரசு இந்த ஆண்டு சகிப்புத்தன்மை ஆண்டாக கடைப்பிடிக்கிறது. ஆனால், இந்தியாவில் கடந்த நான்கரை ஆண்டுகளாகச் சகிப்பின்மை நிலவுகிறது.(பாஜக மீது மறைமுக தாக்கு)
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்தியர்கள் தங்களின் வியர்வை, ரத்தம், நேரத்தை செலவு செய்து,
நாட்டின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் உதவி வருகின்றனர், அவர்களை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம்.
ஆனால், இந்தியாவில் பிரிவினை இருந்தால், ஒருபோதும் வலிமையாக இருக்க முடியாது.
அரசியல் காரணங்கள், அரசியல் நலன்களுக்காக என்னுடைய அன்புக்குரிய தேசம் பிளவுபடுத்தப்பட்டுள்ளது.
பல்வேறு மதங்களாக, சமூகமாக, பணக்காரர்கள், ஏழைகளாகப் பிளவுபடுத்தப்பட்டு இருக்கிறது.
சித்தாந்த ரீதியாக, சிந்தனை ரீதியாக இந்தியாவை மீண்டும் நாங்கள் ஒருங்கிணைக்க விரும்புகிறோம். மக்களையும், மதங்களையும், சமூகத்தையும் மீண்டும் ஒன்றிணைக்கவே நாங்கள் முயன்று வருகிறோம்.
காங்கிரஸ் இல்லாத பாரதம் என்று முழக்கம் வைக்கிறார்கள். ஆனால், எங்களைப் பொறுத்தவரை, பாஜக இல்லாத இந்தியா தேவையில்லை.
இந்தியா தான் முதலில். அதன்பின்தான் மற்றவை என்று சொல்லும் இந்தியர்களும், இந்தியாவும் தான் வேண்டும்.
கிரிக்கெட்டுக்கும், இந்தியாவுக்கும் ஒற்றுமை இருக்கிறது. பிளவுபட்ட கிரிக்கெட் அணி வெற்றி பெற முடியுமா?அப்படி இருக்கும்போது, பிளவுபட்ட நாடு எவ்வாறு வெற்றி பெற முடியும்?”
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.