சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டிருக்கும் கர்நாடகா காங்., எம்.எல்.ஏ.,க்கள் இடையே கடும் மல்லுக்கட்டு நடந்தது.
இதில் எம்.எல்.ஏ., ஒருவருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கர்நாடகாவில், காங்., ஆதரவுடன் மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் குமாரசாமி முதல்வராக இருந்து வருகிறார். இவருக்கு பல எம்.எல்.ஏ.,க்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இங்கு பா.ஜ., ஆட்சி அமைக்க முயற்சி செய்து வருவதாக காங்., குற்றம்சாட்டியுள்ளது.
இதனால் பா.ஜ., காங்., எம்எல்.ஏ.,க்கள் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ராம்நகர் மாவட்டம் பிடதி அருகில் உள்ள ஈகிள்டன் சொகுசு விடுதியில் 70 க்கும் மேற்பட்ட காங்., எம்எல்ஏ.,க்கள் கடந்த 2 நாட்களாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விடுதியில் மது உள்ளிட்ட பல்வேறு விருந்துகள் நடந்து வருகிறது.
நேற்று இரவில் விருந்து முடிந்த பின்னர் அதிகாலை 3 மணி முதல் இரு தரப்பு எம்எல்ஏக்கள் இடையே காரசார விவாதம் நடந்துள்ளது.
இதில் விஜயநகர் காங்., எம்.எல்.ஏ., ஆனந்த்சிங் பாஜக,வுக்கு செல்லக்கூடாது என கூறியுள்ளார்.
இதனால் ஆனந்த்சிங் , கணேஷ், பீமநாயர் ஆகியோர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் மது பாட்டீலை உடைத்து தாக்கி கொண்டனர். ஆனந்த்சிங்கிற்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர் பெங்களூரு சேசாத்திரி புரம் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தால் ஆளும் கட்சியினர் இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.