பாசிச பாஜக அரசையும், கொலைகார அதிமுக அரசையும் வீழ்த்துவோம்: ஈரோடு கலைஞர் சிலை திறப்பு விழாவில் ஸ்டாலின் பேச்சு

கார்ப்பரேட்டுகளால் நடத்தப்படும் பாசிச பா.ஜ.க அரசையும், பினாமிகளால் நடத்தப்படும் கொலைகார அ.தி.மு.க அரசையும் வீழ்த்த ஜனநாயகப் போர்க்களமான நாடாளுமன்றத் தேர்தலுக்கு அனைவரும் தயாராவோம் என ஈரோடு கலைஞர் சிலை திறப்பு விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

ஈரோடு  திரு.வி.க வீதி கலைஞரின் குருகுலம் ரோட்டில் அமைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் முழு திருவுருவ வெண்கலச் சிலையை திமுக தலைவர் ஸ்டாலின் திறந்து வைத்துப் பேசினார்.

அதன் முழுவிவரம் பின்வருமாறு:

அன்புள்ள மாவட்டக் கழகத்தினுடைய செயலாளர் அன்பிற்குரிய முத்துச்சாமி அவர்களே, முன்னிலை ஏற்றுள்ள கழகத்தினுடைய துணைப் பொதுச்செயலாளர் திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்களே, கழகத்தினுடைய கொள்கை பரப்புச் செயலாளர் அன்பிற்குரிய சகோதரர் ராசா அவர்களே, மற்றும் இயக்கத்தினுடைய முன்னோடிகளில் ஒருவராக விளங்கிக் கொண்டிருக்கக்கூடிய முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி அவர்களே, இந்த விழாவிலே பங்கேற்க வந்திருக்கக்கூடிய பல்வேறு மாவட்டக் கழகச் செயலாளர்களே, பொறுப்பாளர்களே, மாவட்டக் கழகத்தினுடைய சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களே, கழகத்தினுடைய முன்னோடிகளே, கழகத்தினுடைய பல்வேறு பொறுப்புகளில் இருந்து பணியாற்றிக் கொண்டிருக்கக்கூடிய கழகக் காவலர்களே, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர்களுள் ஒருவராக இருக்கக்கூடிய ஈரோடு கணேச மூர்த்தி அவர்களே, மற்றும் தோழமைக் கட்சிகளைச் சார்ந்து இருக்கக்கூடிய தோழர்களே, நண்பர்களே, பெருந்திரளாக திரண்டு இருக்கக்கூடிய பெரியோர்களே, தாய்மார்களே, என் உயிரோடு கலந்து இருக்கக்கூடிய தலைவர் கலைஞர் அவர்களுடைய உயிரினும் உயிரான அன்பு உடன்பிறப்புகளே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம்.

இந்த ஈரோடு மாநகரத்தில் நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களுடைய திருவுருவச் சிலையினை ஈரோடு தெற்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாவட்டச் செயலாளர் முத்துசாமி அவர்களுடைய சீரிய முயற்சியில் கழக முன்னோடிகள், கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் தந்திருக்கக்கூடிய ஒத்துழைப்போடு இந்தச் சிலைத் திறப்பு விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்தச் சிலையினை இங்கே அமைப்பதற்காக எல்லா வகையிலும் துணை நின்று பணியாற்றி இருக்கக்கூடிய நண்பர்களை, நிர்வாகிகளை, தோழர்களை, செயல்வீரர்களை, தனித்தனியாக நான் பாராட்டிக் கொண்டிருக்க நேரமில்லை, ஒவ்வொருவரையும் அடையாளம் கண்டு சொல்வதற்கு வாய்ப்பும் இல்லை. எனவே, ஒட்டுமொத்தமாக அத்துனை பேரையும் பாராட்டுகின்ற நோக்கத்தில் மாவட்டச் செயலாளராக இருக்கக்கூடிய முத்துச்சாமி அவர்களை பாராட்டுகின்றேன். அவரைப் பாராட்டினாலே அத்துனை பேரையும் பாராட்டியதாக அமையும் என்ற அந்த நம்பிக்கையோடு நான் அவரைப் பாராட்டக் கடமைப்பட்டிருக்கின்றேன்.

ஏற்கனவே, இதே ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மண்டல திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநாட்டை நடத்திட வேண்டும் என்று, தலைமைக் கழகம் முடிவு செய்து அந்தப் பணியை அவரிடத்தில் ஒப்படைத்த நேரத்தில் அந்த மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவராக பொறுப்பேற்ற மாவட்டச் செயலாளர் முத்துச்சாமி அவர்கள், எல்லோரும் பாராட்டக்கூடிய வகையில் கழகத்திற்கு பெருமை சேர்க்கக்கூடிய வகையில், ஏன் தலைமைக் கழகத்தில் இருக்கக்கூடிய நாங்கள் எல்லோரும் வியந்து, போற்றக்கூடிய வகையில் அந்த மாநாட்டை அவர் நடத்திக்காட்டி அதிலே வெற்றி கண்டார் என்பது எல்லோருக்கும் தெரியும். அப்படிப்பட்ட வெற்றிக்கு மேலும் ஒரு மகுடம் சூட்டக்கூடிய வகையில் தலைவர் கலைஞர் அவர்களின் சிலையை இங்கே அமைத்துத் தந்திருக்கிறார். அதற்காக நான் தலைமைக் கழகத்தின் சார்பில் அவரை மனதார பாராட்டுகின்றேன், போற்றுகின்றேன். பாராட்டுகின்ற போற்றுகிற நிலை மட்டுமல்ல கழகத்தினுடைய சார்பில் இதயமார்ந்த நன்றியை வணக்கத்தை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

தலைவர் கலைஞர் அவர்களுடைய சிலை இங்கே அமைக்கப்பட்டிருக்கின்றது என்று சொன்னால், இது அமைந்திருக்கக்கூடிய வீதியின் பெயர் திரு.வி.க வீதி என்று பெயர் பெற்று இருக்கின்றது. எனவே, பொருத்தமாக மிகவும் சிறப்பானதொரு நிலையில் அமைந்திருக்கின்றது. காரணம்

“சுயமரியாதை இயக்கத்தினுடைய தந்தை – நம்முடைய தந்தை பெரியார் அவர்கள். அந்த இயக்கத்துக்கு தாய் நான் தான்” என்று திரு.வி.க அவர்கள் அடிக்கடி குறிப்பிட்டுக் காட்டியிருக்கின்றார்கள். 1948 ஆம் இதே ஈரோட்டில் திராவிடர் கழகத்தினுடைய மாநாடு நடைபெற்றிருக்கின்றது. அந்த மாநாட்டில் கலந்துகொண்ட திரு.வி.க அவர்கள் திராவிட நாடு போன்ற அமைப்பு கொண்ட அந்தப் படத்தை திறந்து வைத்து திரு.வி.க அவர்கள் உரையாற்றியிருக்கின்றார்கள்.

அதே மாநாட்டில் தான் தலைவர் கலைஞர் அவர்கள் பங்கேற்ற தூக்குமேடை நாடகம் நடந்திருக்கின்றது. அத்தகைய ஈரோட்டில் 70 ஆண்டு காலத்திற்குப் பிறகு தலைவர் கலைஞர் அவர்களுடைய திருவுருவச்சிலை திறந்து வைக்கப்பட்டிருக்கின்றது. தலைவர் கலைஞர் அவர்களுடைய குருகுலமான ஈரோட்டில் இந்த திறப்பு விழா நிகழ்ச்சி நடந்திருக்கின்றது. கலைஞரின் மகனாக நான் இந்தச் சிலையை திறந்து வைக்கிறேன். கழகத்தின் பொதுக்குழுவில் என்னைத் தலைவராகத் தேர்ந்தெடுத்த நேரத்தில் அப்பொழுது நான் ஒன்றைக் குறிப்பிட்டுச் சொன்னேன். ‘நீங்கள் எல்லோரும் தலைவரை மட்டும் இழந்திருக்கின்றீர்கள். நானோ தலைவரை மட்டும் இழந்திடவில்லை என்னுடைய தந்தையையும் சேர்த்து நான் இழந்திருக்கின்றேன்’ என்று குறிப்பிட்டுச் சொன்னேன். அந்தத் தந்தையினுடைய சிலையை இன்னொரு தலைவரோ, தொண்டரோ திறப்பதில் வியப்படைய வேண்டிய அவசியமில்லை. அது புதிதுமில்லை. ஆனால் தந்தையின் சிலையை மகன் திறந்து வைக்கிறார் என்று சொன்னால் உண்மையில் வரலாற்றில் பதிவாகியிருக்ககூடிய ஒரு செய்தியாக அமைந்திருக்கின்றது.

இந்தத் தகுதியை எனக்கு உருவாக்கித் தந்தவரே நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் தான் என்பதையும் நான் பெருமையோடு குறிப்பிட விரும்புகின்றேன். அவர் என்னை பெற்றெடுத்தவர் மட்டுமல்ல. என்னையும் லட்சக்கணக்கான தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தலைவராக உயிர்ப்பித்தவரும் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்தான். இந்த இடத்தில் நான் நிற்கின்ற நேரத்தில் தலைவர் கலைஞர் அவர்களுடைய சிலையை திறந்து வைக்கின்ற நேரத்தில் அந்த சிலைக்கு மலர்கள் தூவப்படுகின்ற நேரத்தில் என்னுடைய எண்ணங்கள் எல்லாம் என்னுடைய சிந்தனைகள் எல்லாம் எங்கோ பறந்து கொண்டிருக்கின்றது. இவ்வளவு உணர்ச்சிமயமாக நான் எப்போதும் இருந்தது இல்லை. அவ்வளவு உணர்ச்சியோடு நான் நின்று கொண்டிருக்கின்றேன்.

இந்தச் சிலையைப் பார்க்கின்ற நேரத்தில் தலைவர் கலைஞர் அவர்களே உயிர் பெற்று மீண்டும் வந்துவிட்டாரோ என்று நினைக்கத் தான் நமக்கெல்லாம் தோன்றுகிறது.

தலைவர் கலைஞர் அவர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி மறைந்தார்கள். அவர் மறைந்த மூன்றே மாதத்தில் டிசம்பர் 16ம் தேதி தலைவர் கலைஞர் அவர்கள் கண்ணும் கருத்துமாக கழகக் கோட்டையாக கட்டிக்காத்தது அண்ணா அறிவாலயம். நம்முடைய கழகத்தின் தலைமையகமாக இருக்கக்கூடிய அண்ணா அறிவாலயம், அந்த அண்ணா அறிவாலயத்தின் முகப்பில் பேரறிஞர் அண்ணா அவர்களுடைய சிலைக்கு அருகில் நாம் தலைவர் கலைஞர் அவர்களுக்கு சிலை அமைத்தோம். அடுத்து தலைவர் கலைஞர் அவர்களுக்கு எங்கே சிலை எழுப்பலாம் என்று எண்ணிய நேரத்தில் முதலில் வந்த பெயர் தான் இந்த ஈரோடு என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

பாராட்டிப்போற்றி வந்த பழமைலோகம்

ஈரோட்டுப் பூகம்பத்தால் இடியுது பார் – என்று தந்தைப் பெரியார் அவர்களைப் பற்றி நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் கவிதை பாடியிருக்கின்றார்கள். அத்தகைய தந்தை பெரியார் பிறந்த ஊர் மட்டுமல்ல, ஒரு விதத்தில் பார்த்தால் கலைஞர் என்ற சமூகப் போராளி உருவான ஊரும் இந்த ஈரோடு தான் என்பதை நான் தெரிவித்துக்கொள்ளுகின்றேன். அதனால் தான் இந்த ஈரோட்டில் தலைவர் கலைஞர் அவர்களுடைய இரண்டாவது சிலையை இந்த நகரத்தில் திறந்திட வேண்டும் என்று முடிவு செய்து மாவட்டச் செயலாளர் அவர்கள் கேட்டவுடன் உடனடியாக ஒப்புதல் தந்து அந்த வகையில் இந்த நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கின்றது.

‘என்னுடைய பெற்றோர்கள் படி படி என்று பள்ளிக்கூடங்களைக் காட்டி கட்டாயப்படுத்தினார்கள்’. ஆனால் நான் ஈரோட்டில் தந்தை பெரியார் பள்ளியில் படித்தவன்” என்று தர்மபுரியில் தந்தை பெரியாரின் சிலையைத் திறந்து வைத்துவிட்டு நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் எடுத்துச் சொன்னார்கள். அப்படிப்பட்ட தலைவர் கலைஞர் அவர்களுடைய சிலை தான் இங்கு திறந்து வைத்திருக்கப்பட்டிருக்கின்றது. அண்ணா அறிவாலயத்தில் தலைவர் கலைஞர் சிலை திறப்பு விழாவில் பேசுகின்ற நேரத்தில் நான் ஒரு செய்தியைக் குறிப்பிட்டுச் சொன்னேன். தந்தை பெரியார் அவர்கள் கலைஞர் அவர்களுக்கு சிலை வைக்க வேண்டும் என்று முடிவு செய்தார்கள். அந்த பெரியாரின் கனவை இன்றைக்கு நாங்கள் நிறைவேற்றி இருக்கிறோம் என்று குறிப்பிட்டுச் சொன்னேன். காரணம், 1968ம் ஆண்டில் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த நேரத்தில் அவருக்கு சிலை வைக்க வேண்டும் என்று முடிவு செய்து, முதலமைச்சராக இருந்த அண்ணா அவர்களிடத்தில் அனுமதியை பெற்று அந்தப் பணியில் அவர் ஈடுபட்டார். ஆனால், அண்ணாவிற்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டது, அதனால் அந்த நிகழ்ச்சி கொஞ்சம் காலம் கடந்தது.

அண்ணா மறைவிற்குப் பிறகு அந்த முயற்சியில் தந்தை பெரியார் ஈடுபட்டார். அதற்காக ஒரு குழு அமைத்தார். அந்தக் குழுவிற்கு தந்தைப் பெரியாரே தலைமை பொறுப்பை ஏற்றார். குழுவினுடைய துணைத் தலைவராக குன்றக்குடி அடிகளார் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்கள். ஐயா ஆசிரியர் வீரமணி அவர்களும் அந்தக் குழுவில் ஒரு உறுப்பினராக இடம்பெற்றிருந்தார்கள். அந்தப் பணியை அவர்கள் நிறைவேற்ற முயற்சித்துக் கொண்டிருந்த போது தந்தை பெரியார் அவர்கள் மறைவெய்தினார்கள். அதற்குப் பிறகு மணியம்மை அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டு உடனடியாக சென்னை அண்ணா சாலையில் தலைவர் கலைஞர் அவர்களுடைய சிலையை அமைத்துத் தந்தார்கள் இது வரலாறு. அதற்குப் பிறகு அந்த சிலை என்ன ஆனது, என்பதைப் பற்றி நான் பேசிட விரும்பவில்லை தேவையுமில்லை.

தந்தை பெரியார் அவர்கள் கலைஞர் மீது அதிகளவு பாசம் கொண்டவர் அதே அளவிற்கு நம்பிக்கை கொண்டிருக்கக்கூடியவர். தந்தை பெரியார் அவர்களைப் பொறுத்தவரையில் தன்னுடைய உணர்ச்சிகளை எப்பொழுதும் யாரிடத்திலும் வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார். ஆனால் தலைவர் கலைஞரிடத்தில் அந்த உணர்வை அந்த பாசத்தை பலநேரங்களில் வெளிப்படுத்திக் காட்டியிருக்கின்றார். அதற்குப் பல சான்றுகள் உண்டு நான் சுருக்கமாக குறிப்பிட விரும்புகின்றேன். 1971ம் ஆண்டு சேலத்தில் தந்தைப் பெரியார் அவர்களுக்கு வெள்ளிச் சிம்மாசனம் வழங்கும் விழா நடைபெருகின்றது. அந்த விழாவில் தந்தை பெரியார் அவர்கள் அந்த மேடையில் முதல்வராக உட்கார்ந்திருக்ககூடிய தலைவர் கலைஞர் அவர்களை, இங்கே வா இங்கே வா என்று கையைப் பிடித்து தான் உட்கார வேண்டிய அந்த வெள்ளி சிம்மாசனத்தில் தலைவர் கலைஞர் அவர்களை உட்கார வைத்து அழகு பார்த்தவர் தந்தை பெரியார் அவர்கள். அதைப் பற்றி தலைவர் கலைஞர் அவர்கள் குறிப்பிடுகின்ற போது, ‘என்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு பொன்னாள் இந்நாள்’ என்று பெருமையோடு சொல்லியிருக்கின்றார்.

அதுமட்டுமல்ல, பழனியப்பன் என்ற ஒரு நாடகம் அந்த நாடகத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் சிவகுரு வேடம் ஏற்று நடிக்கின்றார். அந்த நாடகத்தின் அரங்கேற்ற நிகழ்ச்சி பாண்டிச்சேரியில் நடக்கின்றது. அந்த விழாவிற்கு தந்தை பெரியார் வந்திருக்கின்றார். அறிஞர் அண்ணா வந்திருக்கின்றார். பட்டுக்கோட்டை அழகிரிசாமி வந்திருக்கின்றார். அந்த நாடக அரங்கேற்ற விழா பாதியில் நிறுத்தப்படுகின்றது. காரணம் ஒரு கலகக்கார கும்பல் உள்ளே நுழைந்து ஒரு மிகப்பெரிய கலவரத்தை ஏற்படுத்துகின்றார்கள். அதற்குப் பிறகு தலைவர் கலைஞர் அவர்கள். அறிஞர் அண்ணாவை, தந்தை பெரியாரை, பட்டுக்கோட்டை அழகிரிசாமி அவர்களை பாதுகாத்து ஒரு பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்து விட்டு அதற்குப் பின்னால் தலைவர் கலைஞர் அவர்களும், புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களு,ம் காஞ்சி கல்யாணசுந்தரம் அவர்களும் புதுவை நகர் வீதியில் நடந்து சென்று கொண்டிருக்கின்றார்கள். நடந்து சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கலகக்காரர்கள் அந்த மூன்று பேரையும் கண்மூடித்தனமாக தாக்குகிறார்கள். அப்படிப்பட்ட நேரத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் பலமாக தாக்கப்பட்டு அவரை தூக்கி அப்படியே சாக்கடையில் வீசி விட்டு போகின்றார்கள். அந்த காட்சியைப் பார்த்தவர்கள் எல்லோரும் தலைவர் கலைஞர் அவர்கள் இறந்து விட்டாரோ என்று சந்தேகப்படக்கூடிய அளவிற்கு ஒரு சாக்கடையில் கிடந்த காட்சி அமைந்திருந்தது.

மறுநாள் காலையில் தந்தைபெரியார் செய்தியை கேள்விப்பட்டு வேக வேகமாக ஓடி வந்து பார்க்கையில் படுத்து இருக்கக்கூடிய தலைவர் கலைஞர் அவர்களை தன் மடி மீது படுக்க வைத்து அவர் பட்டிருக்கக்கூடிய காயங்களுக்கு எல்லாம் மருந்து போட்டு, அதற்கு பிறகு ‘நீ இங்கு இருக்க வேண்டாம். நீ நான் இருக்கக்கூடிய ஈரோட்டிற்கு வா’ என்று உடனடியாக தலைவர் கலைஞர் அவர்களை ஈரோட்டிற்கு அழைத்து வந்து தன்னுடைய குடியரசு என்ற நாளிதழில் துணை ஆசிரியராக இருந்து பணியாற்று என்று உத்தரவிட்டார். அதற்குப் பிறகு தலைவர் கலைஞர் அவர்கள் அந்த நாளேட்டில் துணை ஆசிரியராக இருந்து பணியாற்றியிருக்கின்றார். அந்த சமயத்தில்தான் திராவிடர் கழகம் உருவாகுகிறது. அப்படி உருவாகக்கூடிய திராவிடர் கழகத்திற்கு கொடியை அமைத்தாக வேண்டும், ஆலோசனை நடக்கின்றது. அந்த ஆலோசனையில் என்ன முடிவு செய்யப்படுகின்றது என்று சொன்னால் கருப்பு நிறத்தில் அதற்கு நடுவில் சிவப்பு. எனவே முழுமையாக கருப்பு இருக்க வேண்டும். இடையில் சிவப்பு நிறம் வட்ட வடிவத்தில் இருக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அப்பொழுது உடனடியாக கருப்பு நிறத்தை ஒரு அட்டையில் தயார் செய்கின்றார்கள். சிவப்பு நிறத்திற்கு எந்த வர்ணமும் கிடைக்கவில்லை. கருப்பு மை இருந்தது, அதை சுலபமாக செய்துவிட்டார்கள். அப்பொழுது சிவப்பு மை கிடைக்கவில்லை, உடனே தலைவர் கலைஞர் அவர்கள் என்ன செய்தார் என்று தெரியுமா!? அங்கு மேஜை மீது இருக்கக்கூடிய குண்டூசியை எடுத்து தன்னுடைய விரல் நுனியில் குத்தினார். அதிலிருந்து வெளிப்பட்ட ரத்தத்தை எடுத்து அந்த கருப்பு நிறத்திற்கு நடுவில் வட்டவடிவமாக பூசினார். அதுதான் திராவிடர் கழகத்தினுடைய கொடியாக இன்றைக்கு அமைந்திருக்கின்றது.

திராவிடர் கழகத்தினுடைய கொடிக்காக ரத்தம் சிந்திய தலைவர் கலைஞர் அவர்களுடைய சிலையை இன்றைக்கு ஈரோட்டில் அமைக்கப்பட்டிருக்கின்றது என்பது மிக மிக பொருத்தமாக அமைந்திருக்கின்றது. இதை நான் சொல்வதற்குக் காரணம் திராவிட இயக்கத்திற்கு தமிழ் சமூகத்திற்கு கலைஞர் சிந்திய அந்த ரத்தம் தான் திராவிடர் கழகத்தினுடைய கொடியாக அமைந்திருக்கின்றது. அவருடைய சிலைதான் இங்கு திறந்து வைக்கப்பட்டிருக்கின்றது, எனவே ஈரோட்டில் திறந்து வைத்திருக்கின்றோம். அதேபோல், அண்ணாவை மனதில் என்றைக்கும் நினைத்துக் கொண்டிருக்கக்கூடிய தலைவர் கலைஞர் அவர்கள். காரணம் அண்ணா வழியில் அயராது உழைக்க வேண்டும் என்ற முழக்கத்தோடு பாடுபட்டவர் தலைவர் கலைஞர் அவர்கள். எனவே, கலைஞர் அவர்களைப் பொறுத்தவரையில் அண்ணாவால் வழிநடத்தப்பட்டு இருக்கும் காரணத்தால் அடுத்து மூன்றாவது சிலை எங்கு அமைக்கப்படும் என்று சொன்னால், அண்ணன் பிறந்த காஞ்சிபுரத்தில் அமைக்கப்படுகின்றது.

அடுத்ததாக நான்காவது சிலை தமிழ்மொழி காக்க கல்லக்குடி போராட்டத்தில் தண்டவாளத்தில் தலை வைத்து திருச்சி சிறையில் அடைக்கப்பட்டாரே, நான்காவது சிலை திருச்சியில் அமைக்கப்பட இருக்கின்றது. அதைத்தொடர்ந்து திரையுலக காலகட்டத்தில் தலைவர் வாழ்ந்த சேலம், கோவை மாவட்டங்களில் அமைக்கப்பட இருக்கின்றது. அதற்குப் பின்னால் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 65 நாட்கள் தன்னந்தனியாக பாளை சிறையில் அடைக்கப்பட்டு இருந்தாரே, அந்த பாளையங்கோட்டையில் அமைக்கப்பட இருக்கின்றது. இப்படி வரிசையாக ஒவ்வொரு மாவட்டத்திலும் கலைஞர் அவர்களுக்கு சிலை அமைக்கப்பட இருக்கின்றது என்பதை நான் இங்கு தெரிவித்துக் கொள்கின்றேன்.

அதேநேரத்தில் இதற்கிடையில் நமக்கு இன்னொரு போர்க்களம் ஒன்று காத்திருக்கின்றது. என்ன அந்த போர்க்களம்? தேர்தல் என்னும் போர்க்களம். நாடாளுமன்றத்தினுடைய தேர்தல் வரப்போகின்றது. பிப்ரவரி இறுதியில் அல்லது மார்ச் மாதம் முதல் வாரத்தில் அதற்குரிய தேதி அறிவிக்கப்பட இருக்கிறது. வருவது நாடாளுமன்றத் தேர்தல் மாத்திரமா? மினி சட்டமன்ற தேர்தல் ஒன்று வேறு இருக்கின்றது. 18 தொகுதியில், கலைஞர் அவர்கள் தொகுதியையும் சேர்த்து திருப்பரங்குன்றம் தொகுதி சேர்த்து, ஓசூர் தொகுதியை சேர்த்து மொத்தம் 21 தொகுதிகளில். என்னைப் பொறுத்தவரையில், என்னைப்பொறுத்தவரை மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மக்களைப் பொறுத்தவரையில் ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் சட்டமன்ற தேர்தல் வந்தாக வேண்டும் என்ற உணர்வோடு காத்துக் கொண்டிருக்கக்கூடிய இந்தச் சூழ்நிலை. எனவே எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம். அப்படி வரக்கூடிய நேரத்தில், நிச்சயமாக சொல்கிறேன். கலைஞர் சிலையை திறந்து வைத்துவிட்டு இந்த மேடையில் நின்று கொண்டு நேருக்கு நேராக அவரைப் பார்த்துக்கொண்டு சொல்லுகின்றேன். நிச்சயமாக ஒரு மிகப்பெரிய வெற்றியை திராவிட முன்னேற்றக் கழகம் பெரும் என்பதில் மாற்றம் கிடையாது.

அதனால்தான் இப்பொழுது மத்தியில் இருக்கக்கூடியவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருக்கக்கூடியவர்கள், மாநிலத்தில் இருக்கக்கூடியவர்கள் எப்படியாவது மக்களை ஏமாற்றி திசை திருப்ப திட்டமிட்டு பல காரியங்களில் அவர்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். சில நாட்களுக்கு முன்பு கடந்த 27ஆம் தேதி மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா. அடிக்கல் நாட்டு விழா என்று சொல்லக்கூடாது, அடிக்கல் நாட்டு நாடகம் அரங்கேறியிருக்கிறது. ஏனென்று சொன்னால் 2015ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் எய்ம்ஸ் அமைக்கப்படும் என்று பிரதமராக இருக்கக்கூடிய மோடி அவர்கள் அறிவித்தார்கள். அந்த அறிவிப்பு அறிவிப்போடு நின்றிருந்தது. இப்பொழுது தேர்தல் வரப் போகின்றது ஒப்புக்கு ஒரு நாடகம் நடத்த அடிக்கல் நாட்டு நாடகம் நடந்திருக்கின்றது. நான்கரை ஆண்டுகாலம் என்ன ஆனது? இதற்கு பிரதமர் விளக்கம் சொல்ல வேண்டும் என்று நான் கேட்டேன்.

அவரிடமிருந்து விளக்கம் வரவில்லை. ஆனால் தமிழ்நாட்டின் பி.ஜே.பி தலைவராக இருக்கக்கூடிய சகோதரி தமிழிசை அவர்கள் பதில் சொன்னார். என்ன சொன்னார் தெரியுமா? மோடி தன்னுடைய ஆட்சியில் 13 எய்ம்ஸ் மருத்துவமனைகள் உருவாக்க முயற்சி செய்திருப்பதாக அவர் சொல்லியிருக்கின்றார். என்னுடைய கேள்வி 13 எய்ம்ஸ் மருத்துவமனை வரப்போகிறது என்று சொன்னீர்களே, இப்போது முயற்சி எடுத்திருப்பதாக சொல்கிறீர்களே, இதில் எத்தனை பயன்பாட்டிற்கு வந்திருக்கின்றது. இதை சொல்லக் கூடிய திராணி தமிழிசைக்கு இருக்கின்றதா? நான் கேட்கின்றேன்.

ஒன்றும் கிடையாது ஏன், எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக தகவல் அறியக்கூடிய அந்த உரிமை சட்டத்தில் செய்திகளைப் பெற்று இந்த வாரம் இந்தியா டுடே என்ற பத்திரிகையில் அந்த செய்திகளை ஆதாரத்தோடு எடுத்து வெளியிட்டு இருக்கின்றார்கள். அது என்ன செய்தி என்றால், ஒப்புதல் அளிக்கப்பட்ட 13 மருத்துவமனைகளில் ஐந்து மருத்துவமனைகளுக்கு இதுவரை பணம் ஒதுக்கவில்லை. 2020 உத்திரப்பிரதேசத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை திறக்கப்பட உள்ளதாக சொல்கிறார்கள். ஆனால் 10 சதவிகிதம் தான் நிதியை ஒதுக்கி உள்ளார்கள். 1000 கோடி ரூபாய் மதிப்பீடு இருக்கக்கூடிய மருத்துவமனைக்கு இதுவரையில் 98 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது என்று சொன்னால், நீங்கள் இதிலிருந்து சிந்தித்துப் பார்க்க வேண்டும் மற்ற மாநிலங்களுடைய நிலைகள் எல்லாம் என்ன?

திட்டத்தை அறிவித்து விட்டு அடிக்கல் நாட்டி விட்டு பணமே ஒதுக்கவில்லை என்றால் அந்த திட்டத்தை எப்படி செயல்படுத்த முடியும்? இப்படி ஒரு நாடகத்தை நடத்தி இருக்கிறார்கள். மதுரையில் அடிக்கல் நாட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது என்று சொன்னீர்களா? நான் இன்னமும் கேட்கிறேன். இன்னும் இரண்டு மூன்று நாட்களில் நிதி நிலை அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்பிக்க போகிறீர்கள். தைரியம் இருந்தால், மத்திய பட்ஜெட் அறிவிக்கும் போதே மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இவ்வளவு நிதி ஒதுக்கி இருக்கிறோம் எனச் சொன்னால் நான் ஓரளவுக்கு ஏற்றுக் கொள்கிறேன். இதைத்தான் நான் சென்னையில் கேட்டேன். இப்போது இந்த ஈரோட்டில் நான் கேட்கிறேன்.

கடந்த 2014 தேர்தல் தமிழகத்துக்கு பிரச்சாரத்துக்கு வந்த மோடி கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றினாரா?

இதே ஈரோட்டில் பேசிய மோடி மஞ்சள் உற்பத்தியாளர் வாழ்கையை பிரகாசம் ஆக்குவேன் என்றார். செய்தாரா? அவர்தான் பிரகாசமாகிக் கொண்டிருக்கிறார். சேலத்தில் பேசிய மோடி, இரும்பு உற்பத்தியை பெருக்குவேன் என்றார். பெருக்கினாரா? திருப்பூரில் பேசிய மோடி ஜவுளி உற்பத்திக்கு உறுதுணையாக இருப்பேன் என்றார் செய்தாரா? ராமநாதபுரம் சென்று மீனவர்களை காப்பாற்றுவேன். சிங்கள கடற்படையை உள்ளே வர விடாமல் தடுப்பேன் என்றார். நடந்ததா? கன்னியாகுமரியை சுற்றுலா தலம் ஆக்குவேன் என்றார். ஆக்கினாரா? இப்படி சொன்னது எதையுமே செய்யவில்லை. மக்களை ஏமாற்றி மோசடி செய்து வாக்குகளை வாங்கிவிட்டு மீண்டும் ஏமாற்ற வருகிறார் என்று சொன்னால் ஏன் அவர்களுக்கு கோபம் வருகிறது?

நான்கரை வருடங்கள் கடந்து விட்டன. எல்லாத் திட்டங்களையும் உடனே செயல்படுத்தி விட முடியாது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை அவர்கள் பதில் சொல்கிறார். அறிவுப்பூர்வமாக சொல்கிறார். அக்கறையும், ஆர்வமும் இருக்குமானால் எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தலாம் அதைத்தான் தலைவர் கலைஞர் செய்தார். உதாரணத்திற்கு சில செய்திகளை சொல்கிறேன். மத்திய ஆட்சியில் திமுக அங்கம் வகிக்கும் போதெல்லாம் தமிழகத்துக்கு கொண்டு வந்த திட்டங்களை பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.

1. இரண்டாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த தமிழ்மொழிக்கு செம்மொழி என்ற மகுடத்தைச் சூட்டினோம்.

2. திருவாரூரில் மத்தியப் பல்கலைக் கழகம்.

3. சென்னையில் கடல்சார் தேசியப் பல்கலைக் கழகம்.

4. ஓரகடத்தில் மத்திய தேசிய மோட்டார் வாகனச் சோதனை மற்றும் ஆராய்ச்சி மையம்.

5. கிண்டி கத்திப்பாரா, கோயம்பேடு,பாடி போன்ற இடங்களில் வெளிநாட்டில் இருப்பது போன்ற மேம்பாலங்கள்.

6. துறைமுக விரிவாக்கப் பணிகள்.

7. சேலத்தில் புதிய இரயில்வே மண்டலம்.

8. சேலம் மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மேம்பாடு.

9. கரூர், ஈரோடு, சேலம் ஆகிய மூன்று இடங்களில் உயர் தொழில் நுட்ப ஜவுளி பூங்கா.

10. நெம்மேலியில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம்

11. சென்னை மாநகரில் மெட்ரோ ரயில்.

12. ஒகனேகல் கூட்டுக் குடிநீர் திட்டம்

13. சென்னை திருச்சி கோவை மதுரை விமான நிலையங்கள் விரிவாக்கம்.

14. சேலம் உருக்காலை சர்வதேசத் தரத்துக்கு உயர்த்தப்பட்டு புதிய குளிர் உருட்டாலை உருவாக்கம்.

15. நெசவாளர் துயர் துடைக்க சென்வாட் வரி நீக்கம்.

– இப்படிப்பட்ட சாதனைகளைப் போல ஒன்றே ஒன்று இன்றைய பிரதமர் மோடி அவர்களால் சொல்ல முடியுமா? அதைத்தான் நான் திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டிருக்கிறேன். இப்படிச் சாதனைப் பட்டியலை இவர்களால் சொல்ல முடியாது. வேதனைகளைத் தான் சொல்ல முடியும். அது என்னவென்று கேட்டால்,

பெட்ரோல் விலை உயர்வு, டீசல் விலை உயர்வு, சிலிண்டர் விலை உயர்வு, விலைவாசிகள் விலை உயர்வு, அனைத்து மானியங்களும் நீக்கம், புதிய வேலை வாய்ப்புகள் இல்லை, ஜிஎஸ்டி என்ற பெயரால் அநியாய வரி, கறுப்புப்பணத்தை மீட்கவில்லை, வாராக்கடன்கள் அதிகம் ஆனது. கோடிக்கணக்கில் கடன் பெற்றவர்கள் தப்பினார்கள், லோக்பால் செயல்படுத்தப்படவில்லை, ரபேல் பேரத்தில் கொள்ளை, கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களை பிரதமர் வந்து பார்க்கவரவில்லை.

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் முழுமையன நிவாரணம் வழங்கவும் இல்லை. இந்த நிலையில் வெளிநாடு சுற்றுகிறார்.

நாடாளுமன்றம் வருவதில்லை. மாநிலங்களை மதிப்பதில்லை. உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்குள் மோதல், சிபிஐ அதிகாரிகளுக்குள் மோதல், ரிசர்வ் பேங்க்கை மதிக்கவில்லை. ஆகவே, வெறும் பேச்சு… பேச்சு…பேச்சு… அதுவும் வெட்டிப் பேச்சு. இதுதான் இன்றைய மத்திய அரசு. இதைத்தான் மோடி செய்து கொண்டிருக்கிறார்.

மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்ட மத்திய ஆட்சி இனியும் நீடிக்கலாமா? அதேபோல் ஊழல் நிறைந்திருக்கும் கொள்ளைக்கார ஏன் கொலைக்கார ஆட்சி தமிழகத்தில் இருக்கிறது. இதுவும் நீடிக்கலாமா? இன்று மாலையில் தொலைக்காட்சியில் ஒரு செய்தி பார்த்தேன். உத்திரபிரதேச தேர்தல் பிரச்சாரத்துக்கு பிஜேபியின் அமித் ஷா போயிருக்கிறார். இன்றைக்கு பி.ஜே.பியை எதிர்த்து மோடியை எதிர்த்து மெகா கூட்டணியை இந்தியா முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் உருவாக்கி இருக்கிறது. அதனை கிண்டல் செய்து பேசியிருக்கிறார். இந்த மெகா கூட்டணிக்கு வாழ்த்து தெரிவித்து விட்டு, இந்த மெகா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்துவிட்டால் யார் பிரதமர் என்ற கேள்வியை கேட்டிருக்கிறார். கேட்டுவிட்டு அவரே பதில் சொல்கிறார். திங்கள் கிழமை மாயவதி பிரதமர், செவ்வாய் கிழமை அகிலேஷ் யாதவ் பிரதமர், புதன் கிழமை மம்தா பானர்ஜி பிரதமர், வியாழன் சரத் பவார் பிரதமர், வெள்ளிக் கிழமை தேவகவுடா பிரதமர், சனிக்கிழமை ஸ்டாலின் பிரதமர். இதை நான் சொல்லவில்லை. அமித்ஷா சொல்கிறார். இதிலிருந்து என்ன தெரிகிறது மெகா கூட்டணி தான் ஆட்சிக்கு வரப்போகிறது என அமித்ஷாவே ஒப்புக் கொண்டிருக்கிறார். நான் கேட்கிறேன், இந்தியாவிலேயே இல்லையே உங்கள் பிரதமர்? எந்தக் கிழமையில் அவர் பிரதமராக இருந்திருக்கிறார். எல்லா நாட்களும் அவருக்கு விடுமுறை.

நாங்களாவது ஒரு ஒரு நாள் பிரதமராக இருக்கிறோம். மோடி நிரந்தரமாக விடுமுறை விட்டு விட்டு இருக்கிறாரே! ஆகவே, அவர் சொல்வதுபடி பார்த்தால் எங்கள் கூட்டணியில் கூட ஒவ்வொரு நாளும் ஒரு பிரதமர் என்ற ஜனநாயகம் இருக்கிறது. நான் கேட்கிறேன், என்றைக்காவது பிரதமர் எதிர்க்கட்சிகள் கேட்கின்ற கேள்விக்கு நாடாளுமன்றத்தில் வந்து பதில் சொல்லியிருக்கிறாரா? எதைப்பற்றியும் கவலைப்படுவது கிடையாது. தவறான தகவலை, பொய்ப் பிரசாரத்தை மட்டும் தான் செய்து கொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட ஆட்சி மத்தியில் இருக்கிறது. மாநிலத்தில் ஒரு ஆட்சி, கடந்த 23, 24 தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தினார்கள். ஒரு அறிவிப்பையும் வெளியிட்டார்கள். 3 லட்சம் கோடிக்கு புதிய ஒப்பந்தங்களை ஈர்த்துள்ளோம் என்று சொல்லி இருக்கிறார்கள். நான் கூட கேட்டேன், எந்தெந்த விதத்தில் இதனை ஒதுக்கி இருக்கிறீர்கள். கணக்கைச் சொல்லுங்கள் என்றேன். இதுவரை 3 லட்சம் கோடிக்கு என்னென்ன ஒப்பந்தங்கள் என்று கணக்குச் சொல்லவில்லை.

ஏற்கனவே மறைந்த அம்மையார் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது இப்படி ஒரு மாநாடு நடத்தி 2.42 லட்சம் கோடிக்கு முதலீடுகளை ஈர்த்ததாகச் சொன்னார்கள். நானும் திரும்ப திரும்ப கேட்டேன். எவ்வளவு முதலீடு வந்திருக்கிறது, எவ்வளவு பேருக்கு வேலை கொடுத்து இருக்கிறீர்கள், இதுகுறித்து வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வலியுறுத்தினேன். இதுவரைக்கும் பதில் இல்லை. கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் ஒரு செய்தியை சொன்னார்கள். 60 ஆயிரம் கோடி வரை வந்திருக்கிறது எனச் சொல்கிறார்கள். 2.42 லட்சம் கோடி சொன்னது, இப்போது அவர்களே 60 ஆயிரம் கோடி எனச் சொல்கிறார்கள். இப்படித்தான் எடப்பாடி கணக்கு இருக்குமே தவிர வேறல்ல. எல்லாமே, கமிஷன் – கலெக்‌ஷன் – கரப்ஷன். எந்த ஒப்பந்தம் போட்டாலும், புதிதாக தொழில் தொடங்க வந்தாலும் 25 சதவீதம் கமிஷன் கேட்டால் யார் தொழில் தொடங்க வருவார்கள்? இது எடப்பாடி ஆட்சியா? செய்யாத்துரை ஆட்சியா? என்ற கேள்விதான் மக்களிடத்தில் இருக்கிறது. மத்தியில் உள்ள ஆட்சி கார்ப்பரேட்டுகளால் நடத்தப்படும் ஆட்சி. மாநிலத்தில் உள்ள ஆட்சி பினாமிகளால் நடத்தப்படும் ஆட்சி. இவர்களை வீழ்த்தக் கூடிய ஜனநாயகப் போர்க்களத்திற்கு அனைவரும் புறப்பட்டாக வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

நான் நிறைவாக குறிப்பிட விரும்புவது, இன்றைக்கு தமிழ்நாட்டில் ஏதோ ஊழல் நடக்கின்ற ஆட்சி மட்டுமல்ல, கொலைக்கார ஆட்சியும் நடந்து கொண்டிருக்கிறது. மறைந்த தலைவர் கலைஞர் அவர்கள் மறைந்ததற்கு பிறகு, இன்றைக்கும் அவர் புகழ் பாடி அவருக்கு சிலை திறந்து வைத்திருக்கிறோம். ஒரு லைவ் ஆக அவரை வைத்திருக்கிறோம். அதுதான் நமக்கு பெருமை, நமக்கு பெருமை என்றால் தமிழ்நாட்டுக்கு பெருமை. 5 முறை முதலமைச்சராக இருந்த நம் தலைவர் முதலமைச்சராக இருந்து மறையவில்லை. அவர் மறைந்த நேரத்தில் இந்தியா முழுவதும் இருந்து அரசியல் கட்சித் தலைவர்களை வைத்து புகழஞ்சலி கூட்டம் நடத்தினோம். யாரும் அதனை மறந்திருக்க மாட்டீர்கள். நான் கேட்கிறேன், அம்மையார் ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக இருந்து மறைந்திருக்கிறார். அவருக்கு ஒரு இரங்கல் கூட்டம் நடத்தியதுண்டா? புகழஞ்சலி கூட்டம் நடத்தியதுண்டா? அந்த அருகதை உங்களுக்கு இருக்கிறதா? அந்த அம்மையாரின் மரணமே மர்மமாக இருக்கிறது.

தலைவர் கலைஞர் அவர்களும் வயது மூப்பின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவருடைய உடல்நலம் குறித்த அறிக்கையை தினமும் வெளியிட்டோம். முதலமைச்சராக இருந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த அறிக்கை எப்படி வந்தது? இட்லி சாப்பிட்டார். ஒரு கோடி ரூபாய் இட்லி. ஒரு அமைச்சர் தீடீரென்று வெளிவந்து காபி குடித்தார், டி வி பார்த்தார் எனச் சொல்வார். இப்படிச் செய்திகளை சொன்னார்களே தவிர வேறில்லையே. இன்றைக்கு சட்டத்துறை அமைச்சராக இருக்கும் சி.வி.சண்முகம். எப்போதும் நிதானத்தோடு பேசக்கூடியவர். சிபிஐ விசாரணை வேண்டுமென்கிறார். ஒன்றை மட்டும் நான் உறுதியோடு சொல்கிறேன். அதிமுகவுக்கும், திமுகவுக்கும் எத்தனயோ கருத்து மாறுபாடுகள், வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், இறந்தது முதலமைச்சர். அதில் மர்மம் இருக்கிறது. இன்றைக்கு நான் சொல்கிறேன், திமுக ஆட்சிக்கு வந்த அடுத்த வினாடி, ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து முறையாக விசாரிக்கப்பட்டு விசாரணைக் கமிஷன் அறிக்கை வெளியிடுவது மட்டுமல்ல, அதற்குக் காரணமானவர்களை சிறையில் அடைப்பது தான் முதல் வேலை. இது சத்தியம். சத்தியத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. இருந்தாலும் சொல்கிறேன் அதனை நிச்சயம் நிறைவேற்றுவேன்.

அதேபோல், எடப்பாடி பழனிசாமிக்கு சமீபத்தில் 5 கொலை எடப்பாடி என்று பட்டம் வந்திருக்கிறது. அதுவும் எதனால், யாரால் வளர்க்கப்பட்டார்களோ அவர் தங்கியிருந்த பங்களாவில் ஆவணங்களையும், கோடிக்கணக்கான பணங்களையும் கொள்ளையடிப்பதற்காக இந்த கொலைகள். இதனை மேடையில் இருக்கும் நாங்கள் கண்டுபிடிக்கவில்லை. இதனை சொன்னவர்கள், அந்த கொலையில் சம்பந்தபட்டவர்கள். தமிழ்நாட்டின் நிலையை பாருங்கள்! முதலமைச்சராக இருந்து ஊழல் வழக்கில் சிக்கி ஜெயிலுக்கு போனவர் ஜெயலலிதா. ஆனால், கொலைக் குற்றவாளியாக தமிழ்நாட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைவில் சிறைக்குப் போகப் போகிறார் என்றால், இதைவிட கேவலம் வேறு என்ன இருக்க முடியும்? இது அவருக்கு அவமானமா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய அவமானம். ஆகவே தான், நான் உங்களையெல்லாம் கேட்டுக்கொள்ள விரும்புவது, இந்த கொலைக்கார ஆட்சிக்கும், அதற்கு முட்டுக்கொடுக்கும் பாசிச பாஜக ஆட்சிக்கு முடிவுகட்ட, பாடம் புகட்ட அனைவரும் தயாராகுங்கள். தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு முன்னால் உறுதி ஏற்போம்! சபதம் ஏற்போம்!

இவ்வாறு ஸ்டாலின் உரையாற்றினார்.

அரசு ஊழியர், ஆசிரியர் போராட்டம் தற்காலிக வாபஸ்: முதல்வர் இனியாவது பேச்சு நடத்த முன்வருமாறு ஜாக்டோ – ஜியோ கோரிக்கை

சிபிஐ இயக்குனர் நியமன வழக்கு: மேலும் ஒரு நீதிபதி விலகல்

Recent Posts