பொன்சி ஊழல் வழக்கில் கொல்கத்தா போலீஸ் கமிஷனரை விசாரிக்கச் சென்றபோது கொல்கத்தா போலீஸாருடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தை சிபிஐ நாடியுள்ளது.
ரோஸ் சிட்பண்ட்ஸ், சாரதா சிட்பண்ட்ஸ் மோசடி வழக்குகளை விசாரித்து வந்த ஐபிஎஸ் அதிகாரி ராஜீவ் குமார், முறையாக விசாரிக்கவில்லை என வழக்குகள் சிபிஐக்கு மாற்றப்பட்டன.
‘தேசத்தை பாதுகாக்கும்வரை சத்தியாகிரகப் போராட்டம் தொடரும்’:
நள்ளிரவிலிருந்து முதல்வர் மம்தா பானர்ஜி உண்ணாவிரதம்விசாரணை ஆவணங்களில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாகவும் அது தொடர்பாக விசாரணை நடத்தப் பலமுறை சம்மன் அனுப்பியும் ராஜீவ் குமார் ஆஜராகவில்லை.
தற்போது கொல்கத்தா நகர போலீஸ் கமிஷனராக ராஜீவ் குமார் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், நேற்று இரவு ராஜீவ் குமார் இல்லத்துக்குச் சென்ற சிபிஐ அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்த முயன்றனர்.
ஆனால், வீட்டு வாயிலில் பாதுகாப்பில் இருந்த கொல்கத்தா போலீஸாருக்கும், சிபிஐ அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆவணங்கள் இல்லாமல் வந்திருப்பதாகக் கூறி சிபிஐ அதிகாரிகளை உள்ளே செல்ல அனுமதிக்க மறுத்தவிட்ட கொல்கத்தா போலீஸார், அவர்களை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று பின்னர் விடுவித்தனர்.
சிபிஐயின் செயல்பாடு குறித்து அதிருப்தி அடைந்த முதல்வர் மம்தா பானர்ஜி மத்திய அரசுக்கு எதிராக நேற்று இரவில் இருந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், சிபிஐ இணை இயக்குநர் பங்கஜ் சிறீவஸ்தவா கூறுகையில், “சிபிஐ விசாரணைக்கு கொல்கத்தா போலீஸார் ஒத்துழைக்கவில்லை.
அதனால் நாங்கள் உச்ச நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளோம். எங்களின் சட்டஆலோசகர்களுடன் ஆலோசித்து வருகிறோம். சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், அனைவரும் இதை மதிக்க வேண்டும்.
கொல்கத்தாவில் நேற்று நடந்த சம்பவத்தில் சிபிஐ அதிகாரிகள் யாரும் கைது செய்யப்படவில்லை. ஆனால் எங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க போலீஸார் மறுத்துவிட்டனர்.
எங்கள் அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டவுடன், அவர்களை வலுக்கட்டாயமாக போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர். நாங்கள் போலீஸ் பாதுகாப்பு கேட்டும் அளிக்கவில்லை.
கடந்த 2 ஆண்டுகளாக நாங்கள் கொல்கத்தா போலீஸாரிடம் ஆவணங்களை அளியுங்கள், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி வழக்கை எங்களிடம் ஒப்படையுங்கள் என்று கேட்கிறோம்.
ஆனால், வழக்கில் முதன்மையான ஆதாரங்களைக் காணவில்லை. ஒருவேளை கொல்கத்தா போலீஸார் அழித்திருக்கலாம்.
அதுதொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமிஷனரிடம் விசாரணை நடத்த முயன்றபோதுதான் எங்களுடன் மோதல் போக்கில் ஈடுபட்டுள்ளார்கள்” எனத் தெரிவித்தார்.