தமிழகத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகளில், தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசிய கீதமும் இசைக்கப்பட வேண்டுமென்கிற மரபு மீறப்படுவது ஏன்? என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.
இன்று (11-02-2019) திருவான்மியூரில் நடைபெற்ற திருவள்ளூர் சட்டமன்ற தொகுதியினுடைய உறுப்பினர் திரு வி.ஜி.ராஜேந்திரன் அவர்களின் இல்லத் திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைத்து, மணமக்களை வாழ்த்திப் பேசினார்.
அதன் முழுவிவரம் பின்வருமாறு:
திருவள்ளூர் தொகுதியினுடைய சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் – திருமதி. இந்திரா ராஜேந்திரன் தம்பதியினருடைய அருமை மகள் டாக்டர். பிரியதர்ஷினிக்கும், அன்பிற்குரிய பாலிமர் தொலைக்காட்சியின் உரிமையாளர் திரு. கல்யாண சுந்தரம் – திருமதி. அருள்ஜோதி ஆகியோருடைய அருமை மகன் வருண் அவர்களுக்கும் நம்முடைய அன்பான வாழ்த்துகளோடு மணவிழா நிகழ்ச்சி நடைபெற்றிருக்கின்றது.
இந்த மணவிழா நிகழ்ச்சி என்பது சுயமரியாதை உணர்வோடு சீர்திருத்த முறையில் நடைபெற்று இருக்கிறது என்று நம்முடைய பொருளாளர் அவர்கள் பெருமையோடு எடுத்துச் சொன்னார்கள். அதைப்பற்றி நான் குறிப்பிட விரும்புவது, இது சீர்திருத்த திருமணம் மட்டுமல்ல – சுயமரியாதை உணர்வோடு நடைபெற்றிருக்கக்கூடிய திருமணம் மட்டுமல்ல இது ஒரு தமிழ் திருமணம். நம்முடைய தாய் மொழியாக இருக்கக்கூடிய அழகுத் தமிழ் மொழிக்கு, தலைவர் கலைஞர் அவர்களால் செம்மொழி என்கின்ற அங்கீகாரத்தையும் பெற்றுத் தந்துள்ள ஒரு பெருமைக்குரிய மொழியாக விளங்கிக் கொண்டிருக்கின்றது. எனவே, அப்படிப்பட்ட இந்த சிறப்பான திருமண நிகழ்ச்சிக்கு தலைமைப் பொறுப்பேற்று மணவிழாவை நடத்திவைத்து, அதேநேரத்தில் மணமக்களை வாழ்த்தக்கூடிய சிறப்பான ஒரு வாய்ப்பை பெற்றமைக்கு நான் மகிழ்ச்சியடைகின்றேன்.
ஒன்றை நான் எண்ணிப்பார்க்கின்றேன், இதுபோன்ற திருமணங்களை நாம் நடத்தி வைக்கின்ற போது அதிலும் குறிப்பாக சீர்திருத்த முறையில் சுயமரியாதை உணர்வோடு தமிழ் மொழியில் நடத்தி வைக்கும் நிலையைக்கூட இன்றைக்கு விமர்சனம் செய்யக்கூடிய நிலை உருவாகியிருக்கின்றது. ஒன்றை நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். ஒருகாலத்தில் இதுபோன்ற சீர்திருத்தத் திருமணங்கள் நடைபெறுகின்றது என்று சொன்னால், அந்தத் சீர்திருத்தத் திருமணங்கள் சட்டப்படி முறைப்படி செல்லுபடி ஆகும் என்ற அங்கீகாரத்தை 1967ற்கு முன்பு ஏற்பட்ட திருமணங்கள் பெறமுடியாத நிலையில் இருந்து வந்தது. 1967 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று ஆட்சிப்பொறுப்பை அன்றைக்கு நாம் ஏற்றோம். ஆட்சியின் தலைவராக தமிழக முதல்வராக அறிஞர் அண்ணா அவர்கள் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, முதலமைச்சர் என்ற அந்த முறையோடு, அந்த உரிமையோடு சட்டமன்றத்திற்குள் நுழைந்து முதல் தீர்மானமாக சீர்திருத்தத் திருமணங்கள் அனைத்தும் செல்லுபடியாகும் என்கின்ற அங்கீகாரத்தை அறிஞர் அண்ணா அவர்கள் பெற்றுத் தந்தார்கள்.
இன்றைக்கு நடைபெறக்கூடிய இதுபோன்ற திருமணங்கள் சட்டப்படி முறைப்படி செல்லுபடியாகும் என்ற நிலையில் தான் நடந்து கொண்டிருக்கின்றது. அப்படிப்பட்ட திருமண விழாவில் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து பங்கேற்று மணக்கோலம் பூண்டிருக்கக்கூடிய மணமக்களை வாழ்த்திக் கொண்டிருக்கின்றோம். இந்தத் திருமணத்திற்கு நம்முடைய அன்பிற்குரிய ஜெகத்ரட்சகன் அவர்கள் வரவேற்புரையாற்றி இருக்கின்றார்கள். அதைத்தொடர்ந்து நம்முடைய அண்ணன் துரைமுருகன் அவர்கள் முன்னிலைப் பொறுப்பேற்று இருக்கின்றார்கள். நான் தலைமைப் பொறுப்பேற்று இருக்கின்றேன். நம்முடைய ராஜேந்திரன் அவர்கள் நன்றியுரை ஆற்றியிருக்கின்றார்கள். ஆனால், நியாயமாக இந்த மணவிழா நிகழ்ச்சிக்கு நான் தான் வரவேற்புரை ஆற்றியிருக்க வேண்டும். நான் தான் நன்றியுரையும் ஆற்றியிருக்க வேண்டும். இதைச் சொல்வதற்குக் காரணம் அந்த அளவிற்கு உரிமை பெற்றிருக்கக்கூடிய வகையில் வி.ஜி.ராஜேந்திரன் குடும்பத்தில் நாங்கள் இருக்கின்றோம் என்பது எல்லோருக்கும் தெரியும்.
ஏதோ எங்களிடத்தில் மட்டும்தான் எங்களுடைய குடும்பத்தில் மட்டும் தான் அவர் நல்ல உறவு வைத்திருக்கின்றார் என்பது மட்டுமல்ல. அண்ணன் துரைமுருகன் இல்லத்திலும், அண்ணன் ஜெகத்ரட்சகன் அவர்கள் இல்லத்திலும் இந்த மேடையில் அமர்ந்திருக்கக்கூடிய எல்லோருடைய குடும்பத்திலும் ஏன் இங்கு வந்திருக்கக்கூடிய அனைவருடைய உள்ளங்களிலும், இல்லங்களிலும் ஒரு நல்ல உறவை வைத்திருக்கக்கூடியவர் நம்முடைய அருமை நண்பர் வி.ஜி.ராஜேந்திரன் அவர்கள். நான் இதுவரை வி.ஜி.ராஜேந்திரன் அவர்களை யாரும் தவறாக பேசி நான் பார்த்தது இல்லை. அந்தளவிற்கு எல்லோரையும் தன்வசம் வைத்திருக்கக்கூடிய ஒரு ஆற்றலாளராக விளங்கிக் கொண்டிருக்கின்றார். இங்குகூட நீங்கள் பார்க்கலாம், நன்றியுரை என்றுதான் இங்கு அவர் பேசவந்தார். ஆனால், நன்றியுரை என்கின்ற பெயரில் தொகுதிப் பிரச்னையை இப்பொழுது இங்கு பேசி முடித்திருக்கின்றார்.
ஆகவே, திருவள்ளூர் தொகுதியில் என்ன பேச வேண்டுமோ அதை இந்த மணவிழா நிகழ்ச்சியில் பேசி ஊராட்சி சபைக்கு சென்றது, அங்கு சென்று எல்லோரையும் சந்தித்தது, எத்தனை ஊராட்சி சபை முடிக்கப்பட்டது என்பதையெல்லாம் கூட தெளிவாக எடுத்துச்சொல்லி ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பதைத்தான் பார்த்திருக்கின்றேன். ஆனால், ஒரு கல்லில் பல மாங்கா அடிக்கக்கூடிய ஆற்றல் நம்முடைய ராஜேந்திரனுக்கு உண்டு என்பதை இன்றல்ல, நான் பல தருண்ங்களில் பார்த்திருக்கின்றேன்.
ராஜேந்திரனிடம் ஒரு விஷயத்தை சொல்லிவிட்டு அப்படியே விட்டு விடலாம், அதை முடித்து விட்டுத்தான் அவர் என்னிடத்திலே வந்து சொல்லுவார். நான் மட்டுமல்ல, யார் சொன்னாலும் அதை அப்படியே செய்வார். எதையும் மாட்டேன் என்று சொல்லமாட்டார். நானும், அண்ணன் துரைமுருகனும், அதேபோல் ஜெகத்ரட்சகன் அவர்களும் இரவிலும் கூடுவோம், பகலிலும் கூடுவோம். ஆகவே எல்லா நேரங்களிலும் கூடக்கூடியவர்கள் தான். கூட்டணி என்றுகூட சொன்னார். எதில் கூட்டணி என்றால் சாப்பிடுவதில் கூட்டணி வைத்துக் கொண்டதால் தான் இரவிலும், பகலிலும் ஒன்று கூடுவார்கள். இங்கு கூட சகோதரி கனிமொழி அவர்கள் பேசுகின்ற போது, பாலிமர் டீவியும் வி.ஜி.ஆர் குடும்பமும் இன்றைக்கு கூட்டணி வைத்துள்ளது என்று சொன்னார்கள். ஆகவே, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இது பலன் கிடைக்கப்போகின்றது என்று சொன்னார். திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பலன் கிடைக்கப்போகின்றதொ இல்லையோ நாட்டு மக்களுக்கு பலன் கிடைக்கப்போகின்றது என்பதைத் தான் இன்றைக்கு எடுத்துச் சொன்னேன். ஆகவே, ஒரு நல்ல கூட்டணியை திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்த வரையில் நாம் ஏற்கனவே தோழமை கொண்டு அமைத்திருந்தாலும் அது முறையோடு அங்கீகாரத்தோடு விரைவில் அறிவிப்பு திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணி எந்த அளவில் அமைந்திருக்கின்றது என்பதை அறிவிக்க இருக்கின்றோம். ஆனால், அதே நேரத்தில் இன்னொரு கூட்டணி அமைகின்ற நிலையும் நாட்டில் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.
ஆளும் கட்சியாக இருக்கக்கூடிய அ.தி.மு.க வைப் பொறுத்தவரைக்கும், யாரோடு கூட்டணி அமைக்கப் போகின்றார்கள் என்ற செய்தி தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றது. நான் நேற்றைக்குக்கூட ஓசூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் குறிப்பிட்டுச் சொன்னேன். இன்று பத்திரிகைகளில் இந்தச் செய்திகளெல்லாம் வந்திருக்கின்றது. 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்து வைக்கக்கூடிய சூழ்நிலை உருவாகியிருக்கின்றது. வைத்துத்தான் தீரவேண்டும். காரணம் 6 மாதத்திற்கு மேல் எந்தத் தொகுதியிலும் சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாமல் இருக்கக்கூடாது என்பது சட்டம் விதிமுறை. ஆனால், அதையெல்லாம் காலில் போட்டு மிதித்துவிட்டு நாடாளுமன்றத் தேர்தலோடு இந்தத் தேர்தலையும் தடுத்து நிறுத்துவதற்கான சூழ்ச்சிகளை இன்றைக்கு, மோடி தலைமையில் இருக்கக்கூடிய மத்திய அரசு செய்து கொண்டிருக்கின்றது. எனவே, உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்திருக்கின்றேன். நேற்றைக்குக்கூட பிரதமர் மோடி அவர்கள் திருப்பூருக்கு வந்து தேர்தல் பிரசாரத்திலும், அரசு நிகழ்ச்சியிலும் கலந்துவிட்டு சென்றிருக்கின்றார்.
அரசு நிகழ்ச்சி என்று சொன்னால், சுந்தரனார் அவர்களின் தமிழ்த்தாய் வாழ்த்து துவங்கி அந்த நிகழ்ச்சி முடிந்ததற்குப் பிறகு நாட்டுப்பண், அதாவது தேசிய கீதம் பாடும் முறை தொடர்ந்து இருந்து வந்து கொண்டிருக்கின்றது. ஏற்கனவே, மதுரைக்கு வந்தபோதும், நேற்றைக்கு திருப்பூர் வந்தபோதும் அந்த நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை, என்பது வேதனைக்குரிய ஒன்று. அதேநேரத்தில் தேர்தல் பிரசாரத்திற்கு சென்று பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பேசுகின்ற பொது தமிழில் பேசுகின்றார். தமிழில் சகோதர, சகோதரிகளே என்று சொல்லுகின்றார். திருவள்ளுவரை மேற்கோள் காட்டி குறளைச் சொல்லி பேசுகின்றார் என்று சொன்னால், மக்களை ஏமாற்றுகின்ற நிலையில் இன்றைக்கு பிரதமர் மோடி அவர்கள் இருந்து கொண்டிருக்கிறார் என்பதற்கு இதைவிட வேறு சாட்சிகள் தேவையில்லை. ஆகவே, இன்றைக்கு நாட்டில் இருக்கக்கூடிய சூழல்களை எல்லாம் நீங்கள் எண்ணிப்பார்த்து வரக்கூடிய தேர்தலில் ஒரு நல்ல விடிவு காலத்தை தமிழகத்திற்கும், மத்தியிலும் ஏற்படுத்தித் தருவதற்கு நீங்கள் எல்லோரும் துணை நிற்க வேண்டும் என்று உங்கள் எல்லோரையும் கேட்டுக்கொள்வதற்கு கடமைப்பட்டிருக்கின்றேன்.
இதைத் தொடர்ந்து நாங்கள் எல்லாம் சட்டமன்றத்திற்கு செல்லக்கூடிய காரணத்தால், நீண்ட நேரம் இருக்கமுடியாத சூழ்நிலை. இது ராஜேந்திரன் இல்லத்தில் நடைபெறக்கூடிய நிகழ்ச்சியாக மட்டுமல்ல, எங்களுடைய இல்லத்தில் நடைபெறக்கூடிய நிகழ்ச்சியாக மட்டுமல்ல, கழகத்தின் நிகழ்ச்சியாக கருதி இந்த விழாவில் நாங்கள் பங்கேற்றிருக்கின்றோம். எனவே, அந்தப் பெருமையோடு அந்தப் பூரிப்போடு மணக்கோலம் பூண்டிருக்கக்கூடிய மணமக்கள் சிறப்போடு வாழ்ந்து நாட்டிற்கும், வீட்டிற்கும் பெருமை சேர்ப்பவர்களாக, புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் எடுத்துச் சொல்லியிருக்கக்கூடிய ‘வீட்டிற்கு விளக்காய் நாட்டிற்கு தொண்டர்களாய்’ வாழுங்கள் வாழுங்கள் என்று வாழ்த்தி விடைபெறுகின்றேன்.
இவ்வாறு அவர் பேசினார்