இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சிஏஜி அறிக்கையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில்
மேற்கொள்ளப்பட்ட ரஃபேல் ஒப்பந்தத்தைக் காட்டிலும் மோடி தலைமை பாஜக அரசு மேற்கொண்ட ரஃபேல் ஒப்பந்தத்தில் விலைகள் 2.86% குறைவு என்று கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ‘பொய்கள்’ அம்பலமானதாக அருண் ஜேட்லி உடனடியாகத் தெரிவித்தார்.
ஆனால் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சிஏஜி ராஜிவ் மெஹ்ரிஷியின் அறிக்கை வெளியாவதற்கு முன்பே ஏற்க மறுத்துள்ளார்.
ராஜிவ் மெஹ்ரிஷி நடப்பு ஆட்சியில் 2015, ஆகஸ்ட் 31ம் தேதி உள்துறைச் செயலராக நியமிக்கப்பட்டவர்.
இதற்கு முன்னர் அவர் நிதிச்செயலராக இருந்துள்ளார், நிதிச்செயலருக்கு முன்பாக ராஜஸ்தான் அரசின் தலைமைச் செயலராக இருந்தவர்.
இதனையடுத்து ராகுல் காந்தி, “இது சிஏஜி அறிக்கை அல்ல. இது நரேந்திர மோடியின் அறிக்கை” என்று சாடியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சீதாராம் யெச்சூரி, சிஏஜி ஆதாயம் தரும் இரட்டைப்பதவி விவகாரத்தில் இருப்பவர்.
மேலும் சிஏஜி அறிக்கையில் முக்கியமான விவரங்கள் ரஃபேல் ஒப்பந்தத்தைப் பற்றி சொல்லப்படவில்லை.
உதாரணமாக ரஃபேல் ஒப்பந்தத்திற்காக நியமிக்கப்பட்ட குழுவின் 3 உறுப்பினர்கள் மத்திய அரசுக்கு எழுதிய எதிர்ப்பு அறிவிக்கை பற்றி ஒன்றுமே இந்த அறிக்கையில் இல்லை, என்று சாடியுள்ளார்.
மேலும் அவர் தன் சமூகவலைத்தளத்தில், “தற்போதைய ரஃபேல் ஒப்பந்தத்தில் வங்கி உத்தரவாதம் இல்லை என்பதால் அது டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்துக்குத்தான் சேமிப்பே தவிர,
இந்திய அரசுக்கு இல்லை என்று சிஏஜி கூறுகிறார். ஆனால் இந்திய பேச்சுவார்த்தைக் குழு எழுதிய எதிர்ப்பு அறிவிக்கையில் இதனால் 574 மில்லியன் யூரோ தாக்கம் இருக்கிறது,
இந்தியர்களின் வரிப்பணம் 574 மில்லியன் யூரோக்கள் இழப்பாகியுள்ளது” என்று கூறியுள்ளார்.
பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, “எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ரஃபேல் பற்றிய சிஏஜி அறிக்கை முழுமையானதும் அல்ல,
முழுக்க சரியானதும் அல்ல. அரசமைப்பு சார்ந்த அமைப்புகள் (சிஏஜி) ஏன் பாஜக அரசின் கீழ் நேர்மையாகப் பணியாற்ற முடியவில்லை? நாடு கவலையடைகிறது” என்று கூறியுள்ளார்.
முன்னாள் பாஜக நிதியமைச்சரான யஷ்வந்த் சின்ஹா, ‘ரஃபேல் போர் விமான விலைகள் பற்றி ஒருவருக்கும் ஒன்றும் தெரியவில்லை.
ஆனால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஒப்பந்தத்தை விட தேசிய ஜனநாயகக் கூட்டணி விலை மலிவு என்று கூறப்பட்டு அது நம்பவைக்கப்படுகிறது.
மத்திய அரசு 9% விலை குறைவு என்கிறது ஆனல் சிஏஜியோ 2.86% விலை குறைவு என்கிறார். பாருங்கள், யார் கூறுகிறார்கள் என்பதைப் பொறுத்து பதில் மாறிய வண்ணம் உள்ளன’ என்று சாடியுள்ளார்.