புதுச்சேரியில் துணை நிலை ஆளுநரை கண்டித்து முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் 3-வது நாளாக தர்ணா நடைபெற்று வருகிறது.
2வது நாளாக தரையில் படுத்து உறங்கி நாராயணசாமி போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்.
புதுச்சேரி அரசின் சார்பில் துணை நிலை ஆளுநருக்கு அனுப்பப்பட்ட 36 முக்கிய திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்று கூறி,
ஆளுநர் மாளிகை முன் முதலமைச்சர் நாராயணசாமி, நேற்று முன் தினம் பிற்பகலில் தர்ணா போராட்டத்தை தொடங்கினார்.
இரவாகியும் அவர் அங்கிருந்து புறப்படாத நிலையில் துணை ராணுவம் ஆளுநர் மாளிகையை சுற்றி பாதுகாப்பிற்கு குவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து முதல் நாள் இரவு தரையிலேயே படுத்து உறங்கிய நாராயணசாமி நேற்று 2வது நாளாக தனது தர்ணாவை தொடர்ந்தார்.
கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை முடிக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று நாராயணசாமி திட்டவட்டமாக கூறிய நிலையில்,
தற்போது 3வது நாளாக தர்ணா நீடிக்கிறது. நேற்று இரவும் நாராயணசாமி, இரவில் தரையிலேயே படுத்து உறங்கியுள்ளார்.
இந்நிலையில் போராட்டம் நடைபெறும் இடத்துக்கு தங்களை போலீசாரும், மத்திய பாதுகாப்புப்படையினரும் அனுமதிக்கவில்லை என புகார் தெரிவித்து
மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளிட்டோர் ஆளுநர் மாளிகை முன் மறியலில் ஈடுபட்டனர்.
இதனிடையே வரும் 20-ஆம் தேதி புதுச்சேரி திரும்ப உள்ளதாகவும், 21-ஆம் தேதி முதலமைச்சர் நாராயணசாமியுடன் பேச்சு நடத்தத் தயார் என்றும் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சர் சட்டத்திற்கு விரோதமாக செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.
ஹெல்மெட் விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்பை தாம் செயல்படுத்தியதாகவும் புதுச்சேரி முதலமைச்சர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக செயல்படுவதாகவும் கூறினார்
இந்நிலையில் புதுச்சேரி சபாநாயகர் வைத்திலிங்கம் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்தில் புதுச்சேரியின் தற்போதைய
அசாதாரண சூழலை எதிர் கொண்டு, நிர்வாகத்தை செம்மைப்படுத்த தகுதியான இடைக்கால நிர்வாகியை அனுப்புமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.