தன் குடும்ப உறுப்பினர்களையும் தீவிரவாத தாக்குதல்களில் தொடர்ந்து பயன்படுத்தும் பயங்கரவாதியாக மசூத் அசார் உள்ளார். இவர்,
பாகிஸ்தான் ஆதரவுடன் செயல்படும் ஜெய்ஷ்-எ-முகம்மது எனும் பெயரிலான தீவிரவாத இயக்கத்தை துவக்கி நடத்தி வருபவர்.
ஹிஜ்புல் முஜாகித்தீன், லஷ்கர்-எ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-எ-முகம்மது ஆகிய மூன்றும் பாகிஸ்தானில் இருந்து அந்நாட்டு நிதி மற்றும் ஆயுதங்கள் உதவியுடன் செயல்படும் தீவிரவாத இயக்கங்கள். இவர்களில் எந்த அமைப்பு பெரியது என்பது இதுவரையிலும் அடையாளம் காண முடியாமல் உள்ளது.
இதை உறுதிப்படுத்தும் வகையில் மேற்கண்ட மூன்று தீவிரவாத அமைப்புகளும் இந்தியாவில் அவ்வப்போது தீவிரவாதத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இவர்களில் ஜெய்ஷ்-எ-முகம்மது அமைப்பு ஹுஜ்புல் முஜாஹித்தீன் உதவி மற்றும் உத்தரவின் பேரில் கடந்த காலங்களில் தாக்குதல் நடத்தியது.
மேற்கண்ட மூன்று அமைப்புகளிலும் மசூத் அசார் அதிக தீவிரம் காட்டுபவர். தன் அமைப்பின் தீவிரவாத தாக்குதலுக்காக தன்னுடைய குடும்பத்தினரையும் ஒருவர் பின் ஒருவராகப் பயன்படுத்தும் தகவல் வெளியாகியுள்ளது.
இதில் முதல் சம்பவத்தில் ஈடுபடுத்தப்பட்ட மசூத் அசாரின் சகோதரி மகனான தலா ராஷீத்தை இந்திய ராணுவம் காஷ்மீரில் என்கவுண்டர் செய்திருந்தது.
அடுத்து மற்றொரு சகோதரியின் மகனான முகம்மது உஸ்மானும் தீவிரவாத தாக்குதலுக்கு முயன்ற போது இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்டார்.
மூன்றாவதாகவும் மசூத் அசார் தன் சகோதரரான அப்துல் ரவுப் அஸ்கர் என்பவரை தீவிரவாத நடவடிக்கைக்கு பயன்படுத்தி வருகிறார்.
கடந்த 2016-ல் நடைபெற்ற நாக்ரோட்டா தாக்குதலில் ரவுப் அஸ்கர் பெரும்பங்கு வகித்தார். இதற்காக தேசிய புலனாய்வு அமைப்பினர் வழக்குப்பதிவு செய்து அப்துல் ரவுப்பை தேடி வருகின்றனர்.
அப்சல் குருவின் உயிரிழப்புக்கு பழி வாங்கல்
தற்போது புல்வானாவில் நடைபெற்ற தாக்குதலுக்கு சற்று முன்பாக பாகிஸ்தானின் பஞ்சாபில் பேசிய அசாரின் சகோதரர் ரவுப், இந்திய நீதிமன்றத் தீர்ப்பால் தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவின் தியாகத்திற்கு பழி வாங்குவோம் எனக் குறிப்பிட்டிருந்தார்.
சர்வதேச நாடுகளின் வற்புறுத்தல்
இதனிடையில், சர்வதேச நாடுகளின் வற்புறுத்தலால் மசூத் அசார் 2004-ல் தனது நடவடிக்கைகளை முடக்க வேண்டியதாயிற்று.
எனினும், அப்போது தன் இயக்கத்தை ‘பாகிஸ்தானின் தாலீபான்’ மற்றும் ‘தெய்ரீக்-ஏ-தாலீபான்’ எனும் இரண்டு பெயர்களில் மாற்றி செயல்படுத்தி வந்தார்.
சீனாவின் மறுப்பு
பிறகு மீண்டும் மசூத் அசாருக்கு பாகிஸ்தானுடன் சேர்த்து சீனாவின் ஆதரவும் கிடைத்திருப்பதாகக் கருதப்படுகிறது. இதனால், இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் வற்புறுத்தியும் அசாரை தனது கறுப்பு பட்டியலில் சேர்க்க சீனா மறுத்திருந்தது.
ராமர் கோயிலுக்கு மிரட்டல்
இதற்காக, அயோத்தியில் ராமர் கோயில் கட்டினால் கடும் விளைவுகள் ஏற்படும் என பிரதமர் நரேந்திர மோடியை எச்சரித்திருந்தார்.
தொடர்ந்து பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயின் ஆதரவும் மசூத் அசாருக்கு கிடைத்து வருகிறது.