பிரதமர் நரேந்திர மோடி அரசு அறிவித்த 6 ஆயிரம் ரூபாயும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த 2 ஆயிரம் ரூபாயும்,
வாக்குகளை பெறுவதற்காக வெளியிடப்பட்ட அறிவிப்புகள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருக்கிறார்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே பள்ளபட்டி கிராமத்தில், திமுக சார்பில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், முதலில், காஷ்மீர் புல்வாமா தற்கொலைப்படைத் தாக்குதலில் உயிர் தியாகம் செய்த துணைராணுவப்படை வீரர்களுக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கிராம மக்களுடன் உரையாடி, அவர்களின் குறைகளை கேட்டறிந்த மு.க.ஸ்டாலின், பின்னர், அவர்கள் மத்தியில் பேசினார்.
அப்போது, திமுக ஆட்சிக்கு வந்தால் ஒருவர் யார் என்றாலும் எந்த கட்சியை சேர்ந்தவர் என்றாலும், பாரபட்சமின்றி முதியோர் உதவித்தொகை வழங்கப்படும் என்றார்.
மேலும், நாட்டின் எதிர்காலமாக திகழும் மாணவர்களின் நலன்கருதி, கல்விக்கடன் முழுவதும் ரத்து செய்யப்படும் என்றும் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார்.