என் மனோநிலையைப் பொறுத்து என் ஹீரோவை வடிவமைக்கிறேன் : வெற்றிமாறன்

vetrimaran 1 ஆடுகளம் திரைப்படம் வெளிநவந்த நேரத்தில், சண்டே இந்தியன் இதழில் வெளிவந்த வெற்றிமாறனின் இந்தப் பேட்டி பரவலாகப் பேசப்பட்டது. பத்திரிகையாளர் சுந்தரபுத்தனின் இயல்பான கேள்விகள், வெற்றிமாறனின் நேர்த்தியான சொல்லாடல்கள் என அனுபவச் செறிவும், படைப்பூக்கத் தெறிப்புமாக விரியும் இந்த நேர்காணல் உங்களின் மீள்வாசிப்புக்காக நடப்பு.காமின் பழையசோறு பகுதியில் வெளியிடப்பட்டுள்ளது….

 

பாலுமகேந்திராவின் மாணவர். காற்றில் கதைகளைத் தேடாமல் மக்களின் வாழ்க்கையில் கண்டடையும் இயக்குநராக பரிணமித்திருக்கிறார். சர்வதேசப் படங்கள், இலக்கியம், எழுத்து என தனது ஈடுபாடுகள் குறித்து த சன்டே இந்தியனிடம் பேசும்போது பகிர்ந்துகொண்டார்.

நீங்கள் எப்படி சினிமாவுக்கு வந்தீர்கள். உங்களுடைய பின்னணி என்ன?

என்னுடைய அப்பா சித்திரவேல், கால்நடை மருத்துவ ஆராய்ச்சியாளர். அம்மா மேகலா சித்திரவேல், எழுத்தாளர். அக்கா டாக்டர். எனக்கு பதினைந்து வயதிலேயே சினிமா மீதான ஆர்வம் வந்துவிட்டது. ஆனால் அதை வெளிப்படுத்துகிற துணிச்சல் மட்டும் இல்லாமல் இருந்தேன். பள்ளிப்படிப்பை முடித்து லயோலா கல்லூரியில் சேரும்போதுதான், அதற்கான தருணம் வாய்த்தது. அந்த தைரியத்தை பேராசிரியர் ராஜநாயகம் கொடுத்தார். ‘ சினிமாதான் உன் எதிர்காலம் என்று நினைத்தால் அதில் ஈடுபடு’ என்று உற்சாகமாகப் பேசினார். இந்தப் பயணத்திற்கு அவர்தான் தொடக்கம். அவரே என்னை இயக்குனர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராகவும் சேர்த்துவிட்டார். 1997 முதல் 2005 அதுவொரு கனாக் காலம் வரை அவரிடம் பணியாற்றினேன். 2004 ஆகஸ்டில் தனுஷ் படம் செய்யலாம் என்று சொன்னார். பொல்லாதவன் வெளியான ஆண்டு 2007 நவம்பர். வாழ்க்கையிலும் காத்திருத்தல் என்பது தொடர்ந்துவந்த சங்கடமாக இருந்தது. ஏழு ஆண்டுகள் காதலித்தேன். ஒரு படம் இயக்கிவிட்டு திருமணம் செய்துகொள்ளலாம் என்று காத்திருந்தேன். ஆனால் பையன் படம் பண்ணப் போகிறான் என்று வீட்டில் திருமண தேதியெல்லாம் குறித்துவிட்டார். படம் தள்ளிப்போனது, திருமணம் மட்டும் நடந்தது.

பாலுமகேந்திராவிடமிருந்து என்ன கற்றுக் கொண்டீர்கள். அவருடைய பாணியிலிருந்து எப்படி மாறுபடுகிறீர்கள்?

எங்களிடம் இருப்பது பாலுமகேந்திரா கற்றுக்கொடுத்த சினிமாதான். ஆனால் அதை எங்களுடைய எண்ணத்தில் எடுத்துக் கொண்டிருக்கிறோம். அவரிடமிருந்து வேறுபடவேண்டும் என்பதற்காகவே எந்த சினிமாவையும் எடுக்கவில்லை. அப்பாவும் நாமும் ஒன்றுதான் என்றாலும் ரேகைகள் வேறுபடுகின்றனவே. நமக்கு என்ன வருமோ அதுதான் பிரதிபலிக்கும். வளர்ப்புமுறை, சிறுபிராயத்தில் பார்த்த சினிமாக்கள், உள் மனம் எல்லாமும் சினிமா மொழியை, நாம் இயக்கும் படத்தின் உள்ளடக்கத்தைத் தீர்மானிக்கின்றன. அவருடைய உயரத்துக்கு வர முடியாது. சின்ன அளவில்தான் அவரை நாங்கள் பின்தொடர்கிறோம். நம்முடைய இயல்பு என்னவோ அதுதான் படத்தில் கதையாக வருகிறது.

தனுஷூடன் சேர்ந்தே இரண்டு படங்களை செய்துள்ளீர்கள். இருவரும் சேர்ந்தே நல்ல வளர்ச்சியை அடைந்துள்ளீர்கள். ஒரு இயக்குனராக தனுஷை எப்படி பார்க்கிறீர்கள்?

அதுவொரு கனாக் காலம் படத்திலிருந்து தனுஷூடன் பழக்கமுண்டு. அவர் ஒரு டைரக்டர் ஆர்டிஸ்ட். ஒவ்வொரு காட்சியையும் நன்கு புரிந்துகொண்டு நடிப்பார். எல்லா படங்களிலும் அவர் கற்றுக்கொண்டே போய்க்கொண்டிருக்கிறார். ஒரு இயக்குனர் சொல்வதை மட்டும் கேட்பது பெரிய விஷயமில்லை. ஆனால் நமக்கு என்ன தேவையோ, ஸ்கிரிப்ட்டுக்கு என்ன தேவையோ அதை மட்டுமே அவர் தருவார். ஒரு மில்லி மீட்டர் அளவுகூட ஸ்டார் என்பதை எந்த காட்சியிலும் வெளிப்படுத்த மாட்டார். இப்படி செய்துகொள்ளலாமா என்றும் கேட்டு காட்சிக்கு மெருகு சேர்ப்பதில் ஆர்வமாக இருப்பார். என்னுடைய மனோநிலை, உடலமைப்பு ஆகியவற்றைப் பொறுத்து என்னுடைய ஹீரோவை வடிவமைக்கிறேன். 72 மணி நேரம் நான் தூங்காமல் வேலை பார்த்துக்கொண்டே இருப்பேன். எனவே எனது படங்களில் தூங்குவது போன்ற காட்சிகளை வைக்கமாட்டேன். என்னால் இரண்டுபேரை அடிக்க முடியும். அதுக்குமேலே முடியாது என்றால் என் ஹீரோவும் அப்படித்தான். தனுஷை மனதில் வைத்துக்கொண்டுதான் கதைகளை எழுதுகிறேன். இதுவரை 5 ஸ்கிரிப்டுகள் எழுதி, 2 படங்களைத்தான் எடுத்திருக்கிறேன். வேறொருவரை வைத்து எழுத எனக்கே பயிற்சி வேண்டும். ஆடுகளம் படத்தில் பட காட்சிகளில் வெறுமனே நிற்பார்; சும்மா உட்கார்ந்திருப்பார். படம் வெளிவந்ததும் யாரைப் பற்றிப் பேசுவார்கள் என்று அவருக்குத் தெரியும்.

கமர்ஷியல் பார்முலாக்களிலிருந்து விலகி தமிழ் சினிமா, தமிழ் வாழ்க்கையை சற்று நெருக்கமாகப் பார்க்கத் தொடங்கியுள்ளது. இந்தப் போக்கு குறித்த உங்கள் கருத்தை சொல்லுங்கள்?Director Vetrimaran @ Art & Soul Inauguration Stills

தமிழர்களின் அடையாளங்களை தமிழ் வாழ்வியலை கூர்ந்துப் பார்த்து படங்கள் எடுப்பது புதியதல்ல. பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஆனால் சமீபத்தில் நமக்குக் கிடைக்கத் தொடங்கிய சர்வதேசப் படங்களின் பரவலான அறிமுகம் நம்முடைய அடையாளங்களைத் தேடவைத்திருக்கிறது. அது 2002 வாக்கில் நிகழ்ந்தது. இப்படி டிவிடிக்களை மக்களிடம் ஜனநாயகப்படுத்திய பர்மா பஜார் வியாபாரிகளுக்கு ஒரு படத்தை அர்ப்பணிக்கலாம் என்று நினைத்திருக்கிறேன். சில படங்களை படவிழாக்களில்தான் பார்க்கமுடியும். அவர்கள் அதையெல்லாம் எளிதாக்கிவிட்டார்கள். எந்த அளவு துல்லியமாக நம் மண்ணின் அடையாளங்களைச் சொல்கிறோமோ, அந்த அளவு அது சர்வதேச எல்லையைத் தொடும். சர்வதேசப் படங்கள் உள்ளே வரும்போது தன்னுடைய மண்சார்ந்த அடையாளங்களை தக்கவைத்துக்கொள்ளும் நோக்கம் அதிகரிக்கிறது. என் முதல் படத்தில் சென்னை வாழ்க்கையைச் சொன்னேன். அதைவிட சேவல் சண்டையின் மிகப்பெரிய பதிவாக ஆடுகளம் இருப்பதால், ஒரு சமூகத்தின் வாழ்க்கையைச் சொன்ன திருப்தி இருக்கிறது. ஆடுகளம் படத்திற்கு Ôஅமரோஸ் பரோஸ்Õ என்ற படம்தான் ஆரம்பப்புள்ளியாக இருந்தது. அதில் ஒரு நாய்ச்சண்டையின் ஊடே பல விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கும்.

சர்வதேசப் படங்களைத் திறந்துவிட்டதுதான் நம்முடைய வேர்களை நோக்கி பயணிக்கத் தூண்டுதலாக அமைந்தது. ஒரு சினிமா இயக்குனர் என்பதற்கான உங்களது தனிப்பட்ட இலக்கணம் என்ன?

ஓர் உண்மையைச் சொல்வதென்றால் ஆக்ஷன், கட் சொல்வதால் மட்டும் இயக்குநராகி விடமுடியாது. ஒரு முழுமையான விழிப்புணர்ச்சியுள்ள நிலையை அடைந்து, ஒரு நல்ல படத்தை எடுத்துவிடுவேன் என்ற நம்பிக்கையில்தான் ஓடிக்கொண்டிருக்கிறோம். அதற்கான ஒரு பயணத்தில் இருப்பதாகவே உணர்கிறேன். பொல்லாதவன் படத்தில் பணியாற்றிய படக்குழுவினரை ஆடுகளம் படத்தின் மூலம் ஒரு படிமேலே உயர்த்தி வைத்திருக்கிறேன். அந்த வகையில் நாங்கள்எல்லோரும்ஒரு வளர்ச்சியைக்கண்டிருக்கிறோம்.

வாசிப்பு அனுபவம்சினிமாவுக்கு எப்படி உதவுகிறது?

இருபத்தைந்து வயதில் ஸ்கிரிப்ட் எழுதத் தொடங்கிவிட்டேன். ஒரு சராசரி வாழ்க்கையை வாழ முயற்சித்தாலும் சில நேரங்களில் அது இயலாமல் போய்விடுகிறது. ஒரு முப்பது ஆண்டு அனுபவத்தை வைத்துக்கொண்டு, அடுத்த முப்பது ஆண்டுகளுக்கு எப்படி கதைகள் எழுத முடியும். இரண்டு, புத்தகங்கள் என் மனப்போக்கை மாற்றியமைத்தன என்று சொல்லலாம். மங்கோலிய நாடோடிகளின் வாழ்க்கையைச் சொன்ன ஜியாங் ராங்கின் ‘உல்ஃப் டோட்டம்’என்ற 600 பக்க நாவல், இருபது ஆண்டுகால வாழ்க்கையை சாறாகக் கொடுத்தது. அந்த எழுத்தாளரின் பல ஆண்டு அனுபவங்களை பத்து நாட்களில் புரிந்துகொள்கிறோம். மாணவப் பருவத்தில் படித்த அலெக்ஸ் ஹேலியின் ரூட்ஸ் என்ற நாவல். என் வாழ்க்கையை ரூட்ஸூக்கு முன் பின் என்று பிரித்துக் கொள்ளலாம். ஓர் ஆப்பிரிக்க குடும்பத்தின் ஏழு தலைமுறையினரின் வலியைச் சொன்ன நூல் அது. ஒரு மனிதன் சக மனிதனை எந்த அளவுக்கு கொடுமைப்படுத்துகிறான் என்பது புரிந்தது. புத்தகங்கள்தான் உலகத்தைப் பற்றிய முழுமையை நமக்குக் கொடுக்கின்றன. சினிமாக்கள் ஒரு மனிதனின் வாழ்க்கையை மாற்றுவதில்லை. நல்ல புத்தகங்கள்தான் அதைச் செய்கின்றன. நாங்கள் ஒரு கதையை வெளிப்படுத்தும் கட்டாயத்தில் இருப்பதால், சுவைக்காக படிப்பதற்குப் பதிலாக உள்ளடக்கத்திற்காக படிக்கும் கட்டாயம் வந்துவிட்டது.

உங்களுக்குப் பிடித்த சர்வதேச, இந்திய, தமிழ், இயக்குனர்களைப் பற்றிச் சொல்லுங்கள்?

அகிரோ குரோசவா, அலெக்சாண்டர் கொன்சாலஸ் இனாரிட்டு, தமிழில் பாலுமகேந்திரா, மணிரத்னம்.

தமிழ் சினிமாவின் வணிகக்கூறுகளை தக்க வைத்துக்கொண்டே இயல்பான ஒரு கதையைச் சொல்கிறீர்கள். அதுதான் உங்கள் பாணியா?

ஒரு படத்திற்கு 10 கோடி ரூபாய் முதலீடு செய்கிற தயாரிப்பாளர், முதலில் அது கிடைக்கவேண்டும் என்றுதான் நினைப்பார். அதுவும் கிடைக்காவிட்டால் தொடர்ந்து படங்கள் செய்ய முடியாது. அது நிறைவேற வேண்டும். வேறெதையும்விட சினிமா என்ற கலையில் மட்டும்தான் அறிவியலும் வணிகமும் சேர்ந்திருக்கிறது. மினிமம் கேரண்டி இல்லாவிட்டால் எப்படி அடுத்த படத்தை எடுக்க முடியும். அதற்கு உத்தரவாதம் கிடைத்துவிட்டால், நாம் என்ன நினைக்கிறோமோ அதை செய்துகொள்ளமுடியும். எனக்கு இரண்டு படவாய்ப்புகளும் அப்படித்தான் அமைந்தன. என் விருப்பங்களுக்கு குறுக்கீடாக யாருமே நிற்கவில்லை. பொல்லாதவன் படத்தில் ஒரு காமெடி காட்சியை மட்டும் விருப்பமில்லாமல் வைத்தேன்.

வஐச ஜெயபாலனை எப்படி தேர்ந்தெடுத்தீர்கள்?

எங்களுடன் பணியாற்றிய உதவி இயக்குநர் ஹசீன்தான், கவிஞர் வஐச ஜெயபாலனை அறிமுகப்படுத்தினார். ‘ஒருமுறை அவரைப் பாருங்கள். நாம் தேடுகிற கதாபாத்திரத்திற்கு அவர் சரியாக இருப்பார்’ என்று சொன்னார். அவரைப் பார்த்ததும் ரொம்பவும் பிடித்துவிட்டது. நடிக்கிறீர்களா என்று கேட்டேன். உடனே சரி என்றார். பேட்டைக்காரராக உருவாக்கிவிட்டோம்.

உங்களுடைய அடுத்த ஆடுகளம் என்ன?

இன்னும் தீர்மானிக்கவில்லை. கிளவுட் நைன் நிறுவனத்திற்காக அடுத்த படத்தை இயக்குகிறேன். என்மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்திருப்பதால், ஏற்கெனவே எழுதிவைத்திருந்த கதைக்களனை மாற்றலாம் என்றிருக்கிறேன்.

சந்திப்பு: சுந்தரபுத்தன்

நன்றி: த சன்டே இந்தியன்

சமய இலக்கியங்களைச் ‘சமய நீக்கம்’ செய்து வாசிக்க முடியுமா? : பேராசிரியர் கல்யாணராமன் (ஆய்வுக்கட்டுரை)

பிரமிள் என்னும் நட்சத்திரவாசி : ஷங்கர்ராமசுப்ரமணியன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts