பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ உள்ளிட்ட மதிமுகவினரை போலீஸார் கைது செய்தனர்.
பிரதமர் மோடி இன்று (வெள்ளிக்கிழமை) கன்னியாகுமரி வருகை தருகிறார்.
இந்நிலையில், பிரதமரின் தமிழகம் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக சார்பில் திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு பகுதியில் கருப்புக் கொடி காட்டும் போராட்டம் இன்று நடைபெற்றது.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் அக்கட்சியைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது பிரதமருக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பினர்.
இந்நிலையில், போராட்டம் நடந்து கொண்டிருந்த போது அப்பகுதியில் பாஜகவினர் திரண்டனர். அவர்கள் வைகோவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்.
மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட மதிமுகவினர் மீது கற்கள் வீசப்பட்டன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து மதிமுகவினரும் எதிர் தாக்குதல் நடத்தினர்.
கற்களை வீசிய பாஜகவினரை விரட்டி அடித்தனர். இருதரப்பிலும் மோதலை தடுக்க போலீஸார் நடவடிக்கை எடுத்தனர்.
இதை தொடர்ந்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கருப்பு பலூன்களை பறக்கவிட்டு மோடிக்கு எதிராக கோஷமிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“பிரதமர் மோடி காவிரி பிரச்சினையில் தமிழகத்துக்கு துரோகம் செய்து விட்டார். கர்நாடக அரசு மேகேதாட்டுவில் அணை கட்ட அனுமதி அளித்து தமிழகத்தை வஞ்சித்து விட்டார்.
காவிரி மண்டலத்தை ஹைட்ரோகார்பன் திட்டத்தின் மூலம் அளிக்க முயற்சிக்கிறார். முல்லைப் பெரியாறு அணையை கேரள அரசு இடிக்க முயற்சிப்பதற்கு துணை போகிறார்.
தலைவர்கள் போராடி பெற்றுத் தந்த சமூகநீதியை ஒழித்துக் கட்டும் செயலிலும் ஈடுபடுகிறார். அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் ஒற்றுமையாக வாழும் நாட்டில் இந்துத்துவாவை திணித்து சீர்குலைக்க முயற்சிக்கிறார்.
‘கஜா’ புயலால் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டபோது அனுதாபம் கூட தெரிவிக்கவில்லை. 25,000 கோடி ரூபாய் நிவாரணம் கேட்டதற்கு வெறும் 3000 கோடி மட்டுமே அளித்துள்ளார். கூடங்குளத்தில் அணு உலை பூங்கா கொண்டுவந்து அளிக்க முயற்சிக்கிறார்.
இலங்கை ராணுவம் தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தியபோது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழகத்தை தொடர்ந்து வஞ்சிக்கும் மோடி தமிழகத்துக்கு வர எந்த அருகதையும் இல்லை”
இவ்வாறு அவர் கூறினார். இதைத்தொடர்ந்து வைகோ உள்ளிட்ட மதிமுகவினர் கைது செய்யப்பட்டனர்.