தேனி மாவட்டத்தை சேர்ந்த தாயும், மகளும் ஒரே நேரத்தில் டிஎன்பிஸ்சி தேர்வில் வெற்றி பெற்று அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளனர்.
விடா முயற்சியும், கடின உழைப்பும் இருந்தால் எந்த வயதிலும் சாதனை நிகழ்த்தலாம் என்பதை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு
தேனி மாவட்டம் பழனி செட்டிபட்டி அருகே உள்ள முத்து நகரில் வசிப்பவர் சாந்திலட்சுமி. 48 வயதாகும் இவருக்கு 3 மகள்கள் உள்ளனர்.
2012 ஆம் ஆண்டு முதல் மூத்த மகள் தேன்மொழியுடன் இணைந்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடைபெறும் போட்டித் தேர்வுகளை அவர் எழுதி வந்தார்.
கடந்தாண்டு பிப்ரவரியில் நடைபெற்ற டி.என்.பி.எஸ் சி குரூப்-4 தேர்வில் பங்கேற்ற தாயும், மகளும் தேர்வில் வெற்றி பெற்று உள்ளனர்.
பொதுசுகாதாரத்துறையில் சாந்திலட்சுமியும், இந்து சமய அறநிலையத்துறையில் இளநிலை உதவியாளர் பணியில் தேன்மொழியும் சேர உள்ளனர்.
போட்டித் தேர்வுகளில் பங்கேற்று வெற்றி பெறுவது கடினம் என்றாலும், சாந்திலட்சுமியின் வெற்றிக் கதையானது பல்வேறு இழப்புகளையும், சோகங்களையும் சுமந்து நிற்கிறது.
திருமணத்திற்கு பிறகே கணவர் உதவியுடன் பிளஸ்2, பிஏ பிஎட் படிப்பையும் முடித்தார். 3 பெண்குழந்தைகளில், மூன்றாவது பிறந்த தீபஹரினி மனவளர்ச்சி குன்றியவர்.
கணவர் ராமச்சந்திரன் 2014 ஆம் ஆண்டு உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். வயதான பெற்றோருக்கு தேவையான பணிவிடைகளையும்,
பிள்ளைகளின் அன்றாட தேவைகளையும் பூர்த்தி செய்து கொண்டு தான் போட்டித் தேர்வை சாந்திலட்சுமி எதிர்கொண்டார்.
அவரது மகள் தேன்மொழியும் தோழியாக இருந்து அதற்கு உதவி செய்துள்ளார்.
20 லட்சம்பேர் எழுதுகின்ற ஒரு தேர்வில், 48 வயது பெண்மணி ஒருவர் வெற்றி பெறுவது, அவரின் தன்னம்பிக்கை, விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பிற்கு கிடைத்த வெற்றி என்கிறார்
இவர்களுக்கு பயிற்சியளித்த திண்ணை இலவச பயிற்சிப் பட்டறையின் ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார்.
சாந்திலட்சுமியைப் போல் குடும்ப சூழலில் இருக்கும் பெண்களும், இனி போட்டித் தேர்வு எழுத முன்வருவார்கள் என்றும் நம்பிக்கை தெரிவிக்கிறார் செந்தில்குமார்.
பலகட்ட தோல்வி, ஏமாற்றம், சமூகத்தில் ஏளனம் என பல்வேறு போராட்டத்திற்குப் பின் கிடைத்த இந்த வெற்றியானது மகிழ்ச்சியாக இருந்தாலும்,
தனக்கு தேனிமாவட்டத்திலே பணியிடம் கிடைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றார் சாந்திலட்சுமி.
சாதிப்பதற்கு வயது ஒருதடையல்ல…விடாமுயற்சி, தன்னம்பிக்கை கடின உழைப்பிருந்தால் வாழ்வில் வெற்றி பெறலாம் என்பதற்கு உதாரணமாக திகழும்
சாந்திலட்சுமியின் எண்ணங்கள் நிறைவேறவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.