மக்களவைத் தேர்தல் தேதி ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படுமென தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதோடு சேர்த்து தமிழகத்தில் 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியும் அறிவிக்கப்படுமென கூறப்படுகிறது.
நாடாளுமன்றத்துக்கு கடந்த 2014-ம் ஆண்டு தேர்தல் நடந்தபோது, மார்ச் மாதம் 5-ந்தேதி தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டது.
எனவே இந்தமுறையும் மார்ச் 5-ந்தேதி தேர்தல் அட்டவணை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் 7- ஆம் தேதி முதல் 10- ஆம் தேதிக்குள் தேர்தல் அட்டவணையை வெளியிட தலைமை தேர்தல் ஆணையம் ஆயத்தமாகி வருவதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது மத்திய அரசின் கடைசி கூட்டம் இது என்பதால், இதன் பின்னர், தேர்தல் அட்டவணை வெளியாகுமென இப்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதனிடையே மக்களவைத் தேர்தல் அட்டவணை வெளியிடுவதில் ஏற்பட்டுள்ள தாமதமாவதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
அந்த கட்சியின், மூத்த தலைவர் அகமது பட்டேல், பிரதமர் மோடியின் சுற்றுப்பயணம் முடிவடைய தேர்தல் ஆணையம் காத்திருக்கிறதா என்று டுவிட்டரில் கேள்வி எழுப்பி உள்ளார்.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்துள்ள தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, 2009-ஆம் ஆண்டு தேர்தல் முடிவு அறிவிப்பு மே மாதம் 31-ஆம் தேதி வெளியானது.
இதனால் 2014-ஆம் ஆண்டில் மே இறுதி அல்லது ஜூன் முதல் வாரத்தில் தேர்தல் முடிவு அறிவிப்புகளை வெளியிட வசதியாக தேர்தல் தேதி மார்ச் -5-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது என்றார்.
ஆனால் 2014-ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகள் அறிவிப்பு ஜூன் மாதம் 3-ஆம் தேதி வெளியானது என்பதால், இப்போது தேர்தல் தேதியை அறிவிக்க போதிய அவகாசம் உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
பல்வேறு மாநிலங்களில் தேர்தல் நடத்தும் சூழல்களை தேர்தல் ஆணையம் ஆராய்ந்து வருவதாகவும்,
இதில் சில பணி சிக்கல்கள் உள்ளதால் தேர்தல் அட்டவணையை தயாரிப்பது தாமதமாவதாகவும் அவர் கூறினார்.
இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் தேதி அட்டவணை 9-ந்தேதி வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 9 கட்டங்களாக நடத்தப்பட்டது.
இந்த தடவை 10 கட்டங்களாக தேர்தல் நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும்,
தமிழ்நாட்டில் 21 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தலும் நாடாளுமன்ற தேர்தலுடன் நடத்தப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.