பூத் கமிட்டி ஆரம்பித்து, வார்டு வாரியாக வாக்காளர்களைக் கவரும் பணிகளில் அதிமுகவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக மதுரை,தேனி, விருதுநகர் மக்களவைத் தொகுதி மற்றும் திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்யும் நோக்கில்,
வாக்காளர்களைக் கவர அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் புதிய உத்திகளைக் கையாள்கிறார்.
மாநில ஜெயலலிதா பேரவைச் செயலாளராகவும் இருக்கும் அவர்,பேரவை சார்பாக மண்டல வாரியாக ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை நடத்தி வருகிறார்.
விழாவுக்கு வந்தவர்கள் வெறும் கையோடு செல்லக்கூடாது என்பதற்காக இளைஞர்களுக்கு பேன்ட் – சர்ட், பெண்களுக்கு ஹாட் பாக்ஸ்,
சேலை, குடும்பத் தலைவர்களுக்கு வேட்டி, பிறந்த குழந்தைகளுக்கு ஒரு கிராம் மோதிரம் என்று பல்வேறு பரிசுப் பொருட்களை வழங்கி வருகிறார்.
இதுகுறித்து அவரது ஆதரவாளர்கள் மேலும் கூறியபோது,
‘‘மதுரையில் திருமங்கலம், சோழவந்தான், உசிலம்பட்டி, திருப்பரங்குன்றம் ஆகிய பகுதிகளில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா சைக்கிள் பேரணியை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நடத்தினார்.
அதில் கலந்துகொண்ட அனைவருக்கும் இலவச சைக்கிள் வழங்கினார்.
மதுரை கிழக்கு, மேலூர், திருமங்கலம், திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் மட்டும் 15 ஆயிரம்பேருக்கு சைக்கிள் வழங்கியுள்ளார்.
சென்னையில் 50 ஆயிரம்பேருக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. தேர்தல் தேதி அறிவிப்படுவதற்குள், மற்ற மாவட்டங்களிலும் நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளார்’’ என்றனர்.
‘தம்பதி சண்டை இல்லை’
“ஜெயலலிதா பிறந்தநாள் விழாநிகழ்ச்சியில் பங்கேற்கும் ஆண், பெண், ஏன் குழந்தைகளுக்குகூட ஹாட் பாக்ஸ் தருகிறேன். வீட்டுக்குவீடு 3 ஹாட் பாக்ஸ் வரை சென்றுவிடுகிறது.
சாப்பாடு ஆறிடிச்சுன்னு கணவன் – மனைவி இடையே இனிமே சண்டை வராது பாருங்க’’ என்கிறார் ஆர்.பி.உதயகுமார்.