நியூசிலாந்தில் 49 பேரைக் கொன்றவன் வெள்ளையின வெறியன்?: சமூக வலைத்தளப் பக்க தகவல்கள் அடிப்படையில் காவல்துறை சந்தேகம்

நியுசிலாந்தில் மசூதிகளுக்குள் புகுந்து 49 பேரை சுட்டுக் கொன்ற தீவிரவாதி வெள்ளையின வெறியனாக இருக்கக் கூடும் என காவல்துறையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

நியுசிலாந்து நாட்டின் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரு மசூதிகளில் நேற்று தீவிரவாதிகள் நடத்திய  கொடூரத் தாக்குதலில் 49 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது தொடர்பாக ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த பிரெண்டன் ஹாரிசன் டர்ரண்ட் என்ற தீவிரவாதி உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதனை தொடர்ந்து ஹாரிசன் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான். அப்போது, தனது பெயர் மற்றும் விவரங்களை வெளியிடத் தடை கோரும் மனுவோ, அல்லது ஜாமின் மனுவோ அவன் சார்பில் தாக்கல் செய்யப்படவில்லை. மேலும் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த போது செய்தியாளர்களை பார்த்து டர்ரண்ட் சிரித்துக் கொண்டே இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவனை ஏப்ரல் ஐந்தாம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்திய கொலை வெறியன் பிரெண்டன் டெர்ரன்ட், ஃபேஸ்புக்கில், தான் நடத்திய கொலை வெறித் தாக்குதல் சம்பவத்தை நேரலையாக ஒளிபரப்பு செய்துள்ளான். அவனது சமூக வலைத்தளப் பக்கங்களில் உள்ள தகவல்கள் மூலம், டெர்ரண்ட் ஒரு வெள்ளையின வெறியனாக இருக்கக் கூடும் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதனையடுத்து, கொலை வெறியன் டெர்ரன்ட் பயன்படுத்தி வந்த ஃபேஸ்புக், ட்விட்டர், யூ ட்யூப் பக்கங்களை முடக்க சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இதனிடையே இச்சம்பவம் குறித்து பேசியுள்ள நியுசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன், தங்கள் நாட்டில் துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதிப்பது தொடர்பாக சட்டத்தை திருத்த உள்ளதாகக் கூறியுள்ளார்.

மசூதிகளில் தாக்குதல் நடத்தியவன் 5 துப்பாக்கிகள் மூலம் சுட்டதாகக் கூறியுள்ள அவர், இதற்கான உரிமங்களும் அவனிடம் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மற்றொரு மசூதியில் நடத்தப்பட்ட தாக்குதலின் போது தீவிரவாதியை, ஒரு நபர் பின்புறமாக வந்து பிடித்துக் கொண்டதால் உயிர் தப்பியதாக பலர் கண்ணீர் மல்க கூறியுள்ளனர். அந்த நபர் யார் என்று தெரியவில்லை என்றும், ஆனால் அவர் மட்டும் அவ்வாறு செய்யவில்லை என்றால், தாங்கள் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்றும் இந்தியரான பைசல் சயீத் கூறியுள்ளார்.

காரை நிறுத்திவிட்டு, மசூதிக்கு வந்து முதலில் துப்பாக்கியால் கண்மூடித் தனமாக சுட்டுவிட்டு, பின்னர் காருக்கு சென்று மற்றொரு துப்பாக்கியை எடுத்து வந்து சுட்டதாக சம்பவத்தை பார்த்தவர்கள் பதைபதைப்புடன் கூரியுள்ளனர். ஒரு மசூதியில் துப்பாக்கியால் சுட்டு 41 பேரைக் கொன்ற டெர்ரன்ட், 7 நிமிடங்கள் நடந்து சென்று மற்றொரு மசூதிக்குள் புகுந்து துப்பாக்கியால் சுட்டுள்ளான். இதில் 7 பேர் இறந்துள்ளனர். மருத்துவமணனையில் மேலும் ஒருவர் இறந்து விட்டார். மேலும் பலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

அதிமுக கூட்டணி தொகுதி ஒதுக்கீடு: அறிவிப்பதில் தாமதம் ஏன்?

மக்களவைத் தேர்தல் : ஈரோடு தொகுதி மதிமுக வேட்பாளர் அறிவிப்பு..

Recent Posts