மத்திய பிரதேச மாநிலம் போபாலில் காங்கிரஸ் சார்பில் அதன் முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங் போட்டியிடுகிறார்.
இவரை எதிர்த்து மாலேகான் வெடிகுண்டு வழக்கில் சிக்கி விடுதலையான சாத்வி பிரக்யா தாக்கூர் பாஜக சார்பில் போட்டியிடுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2003-ல் திக்விஜய், ம.பி. சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டிருந்தார். அதன் பிறகு மாநிலங்களவையில் காங்கிரஸ் உறுப்பினராகத் தொடர்கிறார்.
தற்போது நீண்ட இடைவெளிக்குப் பின் காங்கிரஸ் கட்சி திக்விஜய் சிங்கை மக்களவைத் தேர்தலில் போட்டியிட வைக்கிறது.
இவர் ம.பி. மாநிலத்தின் தலைநகரான போபாலில் போட்டியிட இருப்பதாக அதன் காங்கிரஸ் முதல்வரான கமல்நாத் கூறியிருந்தார்.
இந்நிலையில், அவரை எதிர்த்து போபாலில் பாஜக சார்பில் சாத்வி பிரக்யா போட்டியிடுவார் என எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
திக்விஜயை எதிர்க்க சாத்வீ பிரக்யாவும் விருப்பத்தைக் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
இது குறித்து போபால் செய்தியாளர்களிடம் சாத்வி பிரக்யா கூறும்போது, ”திக்விஜய் ஒரு தேசத் துரோகி. நாட்டின் எதிரியான அவருக்கு வெளிப்படையாக சவால் விடுக்கிறேன்” எனத் தெரிவித்தார்.
இதில் பிரக்யா தான் பாஜக சார்பில் போட்டியிடுவதாகக் நேரடியாகக் கூறவில்லை. எனினும், தம்மை ஒருவர் தேர்தலில் போட்டியிட அணுகியதாகத் தெரிவித்தார்.
தன் கொள்கைகளும் கோட்பாடுகளும் பாஜகவுடன் ஒத்துப்போவதாகக் கூறியுள்ளார்.
கடந்த செப்டம்பர் 2006-ல் மகாராஷ்டிராவின் மாலேகானின் மசூதி அருகே ஒரு வெடிகுண்டுத் தாக்குதல் நடைபெற்றது.
இதன் முக்கியக் குற்றவாளியாக சாத்வி பிரக்யா கைது செய்யப்பட்டார். அப்போது, பிரக்யா ஒரு இந்து தீவிரவாதி என காங்கிரஸால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.
தனது 14 வயதில் துறவறம் பூண்ட பிரக்யா மீது இருந்த ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்கின் தொண்டர் சுனில் ஜோஷியின் கொலை வழக்கிலும் அவர் விடுதலை செய்யப்பட்டார்.
கடந்த 1971 முதல் 1984 வரை சங்கர் தயாள் சர்மா போபாலின் எம்.பி.யாக இருந்தார். பிறகு 1989 முதல் அந்தத் தொகுதி பாஜக வசம் இருந்து வருகிறது.
கடந்த 1991-ல் முன்னாள் கிரிக்கெட் வீரரான மன்சூல் அலிகான் பட்டோடி காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
தற்போது இதன் எம்.பி.யாக பாஜகவின் அலோக் சஞ்சார் உள்ளார்.