விண்வெளியில் இந்திய செயற்கைக்கோள்களை பாதுகாக்கும் முயற்சியில், செயற்கைக்கோளை தாக்கி அழிக்கும்
‘மிஷன் சக்தி’ சோதனையை இந்தியா வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது என்று பிரதமர் மோடி பெருமிதத்தோடு தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களுக்கு இன்று நண்பகல் 11.45 முதல் 12 மணிவரை முக்கியத் தகவலுடன் உரையாற்ற இருக்கிறேன்.
தொலைக்காட்சி, வானொலி, சமூக ஊடகங்களைப் பாருங்கள் என்று பிரதமர் மோடி ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.
இதனால் பிரதமர் மோடி எதைப் பற்றி பேசப் போகிறார், என்ன மாதிரியான அறிவிப்புகளை வெளியிடுவார் எனும் எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்தது.
பிரதமர் மோடி. கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி மக்களிடம் உரையாற்றியபோதுதான் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தார்.
இதனால், இந்த முறை அப்படி ஏதேனும் அறிவிப்பு இருக்குமா என்று மக்கள் எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால், பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சித்துறை(இஸ்ரோ) மிகப்பெரிய மைல்கல் சாதனையை செய்துள்ளதைக் குறிப்பிட்டார்.
பிரதமர் மோடி பேசியதாவது:
”நம்மிடம் இன்று ஏராளமான செயற்கைக்கோள்கள் இருக்கின்றன. விவசாயம், பேரிடர் மேலாண்மை, தகவல் தொடர்பு, பருவநிலை, வழிகாட்டுதல், கல்வி, பாதுகாப்பு என பல துறைகளுக்காக செயற்கைக்கோள்கள் ஏவப்பட்டுள்ளன.
ஆனால், இன்றைய நாள், இந்தியா விண்வெளித்துறையில் வரலாற்று சாதனை படைத்துள்ளது.விண்வெளி ஆராய்ச்சித் துறையில் இந்தியா மிகப்பெரிய சாதனை நிகழ்த்தியுள்ளது.
விண்வெளியில் செயற்கைக்கோள்களை தாக்கி அழிக்கும் ‘மிஷன் சக்தி’ எனும் சோதனையை இந்தியா வெற்றிகரமாக 3 நிமிடங்களில் செய்து முடித்துள்ளது.
விண்வெளி ஆய்வுத்துறையில் வளர்ந்த நாடுகளுக்கு உரிய இடத்தில் இந்தியாவும் இன்று இடம் பெற்றது. ஏ-சாட் எனப்படும் செயற்கைக்கோளைப் பாதுகாக்கும் வகையில் பூமியில் இருந்து குறைந்த நீள்வட்ட பாதையில் அதாவது 300. கி.மீ தொலைவில் செயற்கைக்கோளைத் தாக்கி அழிக்கும் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.
மிஷன் சக்தி என்று பெயரிடப்பட்ட இந்தச் சோதனை நடத்துவதும், வெற்றிகரமாக இலக்கை அடைவதும் கடினமானது. ஆனால், அதை இந்திய விண்வெளித்துறை 3 நிமிடங்களில் வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
இன்றுவரை விண்வெளியில் செயற்கைக்கோளை சுட்டு வீழ்த்தும் சோதனையை அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகள் மட்டுமே செய்துள்ளன. இந்தச் சோதனையை இந்தியா 4-வது நாடாக வெற்றிகரமாகச் செய்து முடித்துள்ளது.
ஏ-சாட் ஏவுகணை நம்முடைய இந்திய விண்வெளி திட்டத்துக்கு மிகப்பெரிய வலிமையைக் கொடுக்கும். நம்முடைய இந்த ஏவுகணையை, திட்டத்தை எந்த நாட்டுக்கு எதிராகவும் பயன்படுத்தமாட்டோம் என்று சர்வதேச சமூகத்துக்குநான் உறுதியளிக்கிறேன்.
இந்தச் சோதனையும், ஏவுகணையும் முழுமையாக இந்திய செயற்கைக்கோளைப் பாதுகாக்கவும், இந்தியாவின் தற்காப்புக்காகவும் மட்டுமே. இந்தச் சோதனை எந்தவிதமான சர்வதேச விதிமுறைகளையும் மீறி நடத்தப்படவில்லை”.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.