தருமபுரி கிருஷ்ணகிரி ஓசூர் அரசு மருத்துவ மனைகளில் கெட்டுப் போன ரத்தம் ஏற்றப்பட்டதால்
15 கர்ப்பிணிகள் உயிரிழந்ததாக எழுந்துள்ள புகார் குறித்து தமிழக அரசு அறிக்கை அளிக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜனவரி வரையான 4 மாதங்களில் ரத்தம் ஏற்றப்பட்ட 15 கர்ப்பிணிப் பெண்கள் உயிரிழந்ததாக புகார் எழுந்தது.
தொடர்புடைய ரத்த வங்கிகளில் மூத்த மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் ரத்தம் உரிய வெப்ப நிலையில் பராமரிக்கப்படாததால் கெட்டுப் போனதும்
அந்த ரத்தமே அரசு மருத்துவமனைகளில் வினியோகிக்கப்பட்டு, கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக தானாக முன்வந்து வழக்கை ஏற்ற மாநில மனித உரிமை ஆணைய நீதித்துறை உறுப்பினர் துரை ஜெயச்சந்திரன்,
இது குறித்து தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர், மருத்துவக் கல்வி இயக்குநர்,ஊரக மருத்துவ சேவைகள் துறை இயக்குநர், மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத்துறை திட்ட இயக்குநர் ஆகியோர் 2 வாரங்களுக்குள் அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளார்.